

யானையின் பக்திக்கு இறங்கி முதலை யிடமிருந்து திருமால் காத்தருளிய தலமாக அத்தாளநல்லூர் கஜேந்திரவரத பெருமாள் கோயில் போற்றப்படுகிறது. அனைத்துவித பிரச்சினைகளில் இருந்து பக்தர்களை காத்து ஆனந்தப் பெருவாழ்வு அளிக்கும் தலமாக இத்தலம் சான்றோர் பெருமக்களால் புகழப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து முக்கூடல் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது அத்தாளநல்லூர் கஜேந்திர வரத பெருமாள் கோயில். யானையின் பக்திக்கு இறங்கி முதலையிடமிருந்து பெருமாள் காத்தருளிய நிகழ்வு இத்தலத்தில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நாரத முனிவரின் குமாரரான சுகப்பிரம்ம மகரிஷி பரீட்சித்து மகாராஜாவுக்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார்.
அதில் 8-வது ஸ்கந்தத்தில் கஜேந்திர மோட்சம் புராண வரலாறு இடம் பெற்றுள்ளது. சிறந்த விஷ்ணு பக்தனான மன்னன் இந்திரத் துய்மன் துர்வாச முனிவரின் சாபத்தால் திரிகூட பர்வதத்தில் உள்ள வனத்தில் கஜேந்திரன் என்னும் யானையாக பிறந்தான். யானைக் கூட்டத்தின் தலைவனான கஜேந்திரன் திரிகூடமலையிலிருந்து சக யானைகளுடன் தாகம் தணிப்பதற்காக பொதிகை மலைச்சாரலில் உள்ள தாமரை மலர்கள் பூத்துக்குலுங்கும் பொருநை நதி தீரத்துக்கு வந்தது.
இதே கால கட்டத்தில் கந்தர்வன் ஒருவன் தேவல முனிவரின் சாபத்தால் முதலையாக பிறப்பெடுத்து தாமிரபரணி நதியில் வசித்து வந்தான். ஆற்றில் இறங்கிய யானைக் கூட்டம் தண்ணீரை கண்டதும் உற்சாகமடைந்து அதகளப்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த முதலை, யானை கஜேந்திரனின் காலை இறுகப் பற்றியது. முதலையிடமிருந்து தன்னை விடுவிக்க யானை பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லை. இறுதி முயற்சியாக ஆற்றில் மலர்ந்திருந்த தாமரையை பறித்து தனது துதிக்கையில் ஏந்தி கரையில் கோயில் கொண்டுள்ள வரதராஜ பெருமாளை சிந்தித்து ‘ஆதிமூலமே அபயம், அபயம்’ என வேண்டி பிளிறியது.
விலங்கினமாக இருந்தாலும் யானையின் தூய பக்திக்கு செவி சாய்த்த வரதராஜ பெருமாள் தனது கருட வாகனத்தில் விரைந்து வந்து, சக்ராயுதத்தை ஏவி முதலையின் தலையை துண்டித்து கஜேந்திரனை காப்பாற்றினார். பி்ன்னர் சாபம் விலகி சுயரூபம் அடைந்த இந்திரத் துய்மன் வீடுபேறு கிடைக்கப் பெற்றான். யானையை பெருமாள் ஆட்கொண்ட அந்த தலம் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாள நல்லூர்.
அத்தி என்றால் யானை. அத்தியை ஆட்கொண்ட தலம் என்பதால் அத்தியாளநல்லூர் என்ற பெயருடன் விளங்கியது. நாளடைவில் அத்தாளநல்லூர் என்று மருவி விட்டது. இந்தத் தலத்தில்ஸ்ரீகஜேந்திர வரதராகக் வீற்றிருக்கிறார் பெருமாள். சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் தான் ஆண்டாளின் அவதாரம் தங்கள் குடும்பத்தில் நிகழ வேண்டும் என்று பெரியாழ்வாரின் முன்னோர் வேண்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இக்கோயில் கருவறையில் சுதை வடிவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் ஆதிமூலப்பெருமாள் அருள்பாலிக்கிறார். உற்சவர் - கஜேந்திர வரதர். மூலவருக்கு அருகில் பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்கள் வீற்றிருக்கின்றனர். மூலவர் சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீகருடாழ்வார், தனிச் சந்நிதிகளில் தெற்கு நாச்சியார், வடக்கு நாச்சியார் என்று இரண்டு தாயார்கள், ஸ்ரீசக்கரத்தாழ்வார், பால ஆஞ்சநேயர் தரிசனம் அருள்கின்றனர்.
கோயிலின் மேற்கே தாமிரபரணி தெற்கு - வடக்காக பாய்வதால் இந்த ஆறு கங்கைக்கு நிகரானது. இக்கோயிலின் பின்பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. அந்த தூணை நரசிம்மராக கருதி, அதற்கு சந்தனம் மற்றும் மல்லிகை மலர்களால் ஆன சட்டை சார்த்துதல் என்னும் நேர்த்திக்கடன் பக்தர்களால் செய்யப்படுகிறது.
யானை மற்றும் முதலைக்கு பெருமாள் விமோசனம் அளித்த இடம், கஜேந்திர மோட்ச தீர்த்த கட்டமாக திகழ்கிறது. தல புராணப்படி இங்குள்ள 3 தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. முதலையிடம் இருந்து காப்பாற்றிய கஜேந்திரனை பெருமாள் வீடுபேறு அடையச் செய்த இடம் விஷ்ணுதீர்த்தம். கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள இந்த தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீகஜேந்திர வரதரை வழிபட்டால் பிணிகள், கர்ம வினையால் வரும் ஆபத்துகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வடபுறம் சிங்க தீர்த்தம் உள்ளது. சிங்க தீர்த்தத்துக்கு தெற்கே ஒரு கி.மீ. தூரத்தில் திருவலஞ்சுழி எனப்படும் சக்கர தீர்த்தம் உள்ளது. பெருமாளால் ஏவப்பட்ட சக்ராயுதம் முதலையை அழித்த பிறகு இந்த தீர்த்தத்தில் மூழ்கி புனிதம் அடைந்ததாக அறியப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் சகல தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். ஸ்ரீமத் பாகவத்தில் கஜேந்திர மோட்ச திருவிளைaயாடல் திரிகூட மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கஜேந்திரன் யானை வாழ்ந்த திரிகூட மலை என்பது திருக்குற்றால மலையை குறிக்கிறது.