நல்லொழுக்கப் புரட்சியாளர் 25: கஅபாவை நோக்கும் கண்கள்

நல்லொழுக்கப் புரட்சியாளர் 25: கஅபாவை நோக்கும் கண்கள்
Updated on
2 min read

உலக மதங்களில் ஈகையையும் தியாகத்தையும் பண்டிகையாகக் கொண்டாடும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. அடுத்தவருக்குக் கொடுப்பதிலும் தியாகத்திலும்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் திருநாள்கள் இவை.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது, நட்புறவு ஆகியவை எல்லா உறவுநிலை களிலும் மனித வாழ்க்கைக்குத் தேவைப்படும் என்றைக்குமான நற்பண்பு. இவை இருந்தால் வாழ்வில் முழுமை உண்டாகும். இஸ்லாமியப் பண்டிகைகளில் இஸ்லாமியர் பெரும்கூட்டமாக ஈத்காவில் (தொழுகைத் திடல்) நின்று ஏகஇறைவனைத் தொழும் நிகழ்வு சொல்லில் அடங்காதப் பேரானந்தம்.

வர்க்க, இன, நிற பேதங்களின்றி தத்தமது வீடுகளில் இருந்து புறப்பட்டு சமமாகத் தோளோடு தோள் நின்று இறுதித்தூதர் அண்ணல் நபியின் வழிகாட்டுதலில் கஅபாவை நோக்கி அமைதியாக இறைவணக்கம் செலுத்தும் கணம் இறைவனை உணரும் தருணம். மானுடப் பிறப்பின் உன்னதத்தை உணர்த்தும் நேரம் அது.

இறைஇல்லம்: உலகின் எந்த திசையில் இஸ்லாமியர் வாழ்ந்தாலும் அவர்கள் ஏகஇறைவனைத் தொழும் திசை கஅபா அமைந்திருக்கும் திசையாகவே இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை கஅபா அமைந்திருக்கும் திசை மேற்கு. எனவே மேற்குத் திசை நோக்கி நின்று இந்திய இஸ்லாமியர் தொழுகையை நிறைவேற்றுவார்கள். இஸ்லாமியர் இறைவனைத் தொழும் திசை நாட்டுக்கு நாடு வேறுபடும்.

ஆனால் அத்திசை இறையில்லத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். “நீர் உம் முகத்தைப் புனித ஆலயத்தின் பக்கம் திருப்பிக் கொள்வீராக. நீர் எங்கிருந்தபோதிலும் உம் முகத்தை அதன் பக்கமே திருப்புவீராக (திருக்குர்ஆன் 2:144) என்று கூறும் இறைவேதம் உலக மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் ஆலயம் கஅபா எனவும்அது உலகத்துக்கு வழிகாட்டும் மையமாக, இறையருள் பெற்றதாக இருக்கின்றது என்றும் சொல்கிறது.

முதலில் அண்ணல் நபி, ஜெரூசலத்தில் அமைந்துள்ள அல்மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் இருந்த திசையை நோக்கி இறைவனை வழிபட்டுக்கொண்டிருந்தார். இறைவனின் அறிவுறுத்தல் கிடைத்தபிறகு அல்மஸ்ஜிதுல் ஹராம் என்று அழைக்கப்படும் கஅபாவின் திசையை நோக்கி தொழுகையை நிறைவேற்றலானார். பள்ளிவாசல்கள் மட்டுமல்ல தொழுகையின் நேரம் வந்துவிட்டால் பூமியில் உள்ள எல்லா இடங்களும் தொழுகையை நிறைவேற்றும் இடம்தான்.

ஆனால் அவ்விடம் கஅபாவை நோக்கியதாக இருக்க வேண்டும். கஅபா எழுப்பப்பட்டு 40 ஆண்டுகள் கழித்துதான் அல்மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டது என்று அண்ணல்கூறியதாகக் குறிப்பு (ஸஹீஹ் முஸ்லீம் 903,904) உள்ளது. முதன்முதலில் ஆதாம் நபி கஅபாவைக் கட்டினார் என நம்பப்படுகிறது.

பிறகு ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் அது சிதைந்திருந்தாலும் இப்ராஹிம் நபியால் அவ்விடம் தேடிக் கண்டடையப்பட்டு மீண்டும் கஅபா கட்டப்பட்டது. மேலும் இதன் தென்கிழக்கு மூலையில் ஹஜ்ருல் அஸ்வத் எனும் கல் பதிக்கப்பட்டது என இஸ்லாமிய வரலாறு குறிப்பிடுகின்றது. காலப் போக்கில் கஅபா பல மாற்றங்களுடன் சதுர வடிவிலான பள்ளிவாசலாகத் தற்போது உயர்ந்து நிற்கிறது. ஹஜ் கடமையை நிறைவேற்ற வருவோர் கஅபாவைச்சுற்றி நின்று தங்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.

இறைவன் ஒரு வனே என்ற சத்தியமரபை தலைமுறை தலைமுறையாகக் கஅபாவின் நிர்மாணத்தின் வழியாக இறைத்தூதர்கள் நிரூபித்துள்ளனர். இன்றும் உலகம் முழுவதுமான ஏகஇறை நம்பிக்கையாளர்களை ஒருங்கிணைக்கும் மையமாக புனித இறையில்லமான கஅபா விளங்குகிறது.

தொழுகை: ஏகஇறைவனை ஏற்றுக்கொள்பவர்களையும் அதனை நிராகரிப்பவர்களுக்கும் இருக்கும் வேறுபாடு தொழுகைதான் என அண்ணல் நபி குறிப்பிடுகின்றார். “தொழுகை நம்பிக்கையாளர்களின்மீது நேரங்குறிக்கப்பட்ட கடமையாகும்” (திருக்குர்ஆன் 4:103) என்று கூறும் இறைவன் அந்தத் தொழுகையின் பயன் என்ன என்பதையும் கூறுகிறான்.

“நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான, தீய காரியங்களை விட்டும் தடுக்கின்றது” (திருக்குர்ஆன் 29:45) தொழுகை செய்யும் நேரம் வந்துவிட்டால் அண்ணல் நபி எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் எங்கு இருந்தாலும் தொழுகையை நிறை வேற்றிவிட்டே மீண்டும் தன் வேலையைத் தொடருவார்.

ஐந்துவேளை குளித்தால் உடல் அழுக்கு சிறிதளவும் இருக்காது. அதுபோலவே ஐந்து வேளையும் தொழுகையை நிறைவேற்றினால் மனிதனின் பாவங்கள் களைதோடும் என்கிறார் மாநபி. ஐந்து நேரத் தொழுகைகளிலும் அதிகாலை மற்றும் இரவு நேரத் தொழுகைகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

பெருநாளில் தொழுகைக்கும் அதன் பிறகு நிகழ்த்தப்படும் உரையைக் கேட்கவும் தொழுகை நடைபெறும் திடலில் ஆண்களுடன் கலக்காத விதத்தில் பெண்களும்நிச்சயம் பங்கேற்க வேண்டுமென அண்ணல் கட்டளையிட்டார்.

(ஸஹீஹ் முஸ்லீம், 1615). இறைவனை வணங்குவதற்காகவே மனிதர்களைப் படைத்த இறைவன் இறையச்சம் கொண்டவர்களின் இலக்கணங்களுள் ஒன்றாகக் குறிப்பிடுவது தொழுகையைக் கடைப்பிடிப்பதைத்தான். மனத்துக்கண் மாசிலனாக வாழ தொழுகை மிக அவசியம். தொழுகை இறையச்சத்தை மனதில் நிலை நிறுத்தும். இறையச்சம் நற்பண்புகளை வளர்க்கும். நற்பண்புகளை நாடுவதே இஸ்லாம் எனும் நன் மார்க்கம்.

(தொடரும்)

- bharathiannar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in