சியாமா சாஸ்திரியின் 262-வது ஜெயந்தி

சியாமா சாஸ்திரியின் 262-வது ஜெயந்தி
Updated on
1 min read

கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரி, தெய்வப் புலமை மிக்க வாக்கேயக்காரராக போற்றப்படுகிறார். சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட சாஹித்யங்களை இயற்றி, காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, சரணாகதி தத்துவத்தை உணர்த்தியுள்ளார்.

காஞ்சி காமாட்சி அம்மனின் உற்சவ மூர்த்தியாகிய ஸ்ரீ பங்காரு காமாட்சி தேவி, அந்நியர்களின் படையெடுப்பு காரணமாக, 18-ம் நூற்றாண்டில் திருவாரூரில் எழுந்தருளச் செய்யப்பட்டார். தமிழ் அந்தணர் குலத்தைச் சேர்ந்த வேங்கடாத்ரி ஐயர், பங்காரு காமாட்சிக்கு ஆராதனைகள் செய்து வந்தார்.

அவரது மகன் விஸ்வநாத ஐயர் சிறந்த வேதாகம ஜோதிட நிபுணராக இருந்தார். விஸ்வநாத ஐயர் - வெங்கலட்சுமி தம்பதிக்கு 1762-ல், சித்திரை மாதம், கார்த்திகை நட்சத்திர தினத்தில் (26-04-1762) சியாமா சாஸ்திரி (சியாம கிருஷ்ணன்) பிறந்தார்.

சிறுவயதிலேயே சியாம கிருஷ்ணன், சம்ஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் புலமை பெற்றார். அவ்வப்போது இம்மொழிகளில் சாஹித்யங்கள் இயற்றி வந்தார். தகுதிவாய்ந்த குருநாதரிடம் இருந்து ஸ்ரீவித்யா உபதேசத்தையும் பெற்றார். இசையில் தன்னை முன்னேற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் தனது 18-வது வயதில் பெற்றோர், பங்காரு காமாட்சி விக்கிரகத்துடன் தஞ்சாவூருக்குச் சென்றார் சியாம கிருஷ்ணன்.

1780-ல் தஞ்சை சரபோஜி மன்னரின் உதவியால் பங்காரு காமாட்சி அம்மனுக்கு தஞ்சையில் கோயில் அமைக்கப்பட்டு, பூஜை, ஆராதனைகளை விஸ்வநாத ஐயர் செய்து வந்தார். கோயிலில் சியாமக் கிருஷ்ணன் பாடுவதைப் பார்த்த, வட தேசத்து கர்னாடக சங்கீத விற்பன்னர் (சங்கீத சுவாமி), அவரை சீடராக ஏற்று அவருக்கு சங்கீத லட்சிய, லட்சணங்களை பயிற்றுவித்தார். பின்னர் அரச சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்த பச்சிமீரியம் ஆதியப்பய்யரிடம் இசை பயின்றார் சியாம கிருஷ்ணன்.

சில காலம் கழித்து பங்காரு காமாட்சியின் அருளால், சாஹித்ய நுட்பங்கள், இசைக் கற்பனைகள், தாள மடக்குகளை ஒன்றிணைத்து, ‘சியாமக் கிருஷ்ண’ என்ற நாம முத்திரையுடன் சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் க்ருதிகள், ஸ்வரஜதிகள் (தோடி, யதுகுல காம்போஜி, பைரவி), தான வர்ணங்கள் என்று 300-க்கும் அதிகமான சாஹித்யங்களை இயற்றினார்.

காமாட்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டு (1827-ல் தை மாதம் சுக்ல பட்சம் தசமி தினம் – 06-02-1827), ‘சிவேபாஹி காமாட்சி பரதேவதே’ என்று கூறியவாறு பங்காரு காமாட்சியின் திருவடிகளை அடைந்தார் சியாமா சாஸ்திரி. சியாமா சாஸ்திரியின் நினைவைப் போற்றும் வகையில் இந்திய அரசின் அஞ்சல் துறை, ஒரு ரூபாய் மதிப்பிலான அஞ்சல் தலையை (21-12-1985) வெளியிட்டுள்ளது.

இவரது 262-வது ஜெயந்தி இந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூர், திருவாருரில் உள்ள சபைகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இசைக் கலைஞர்கள் சியாமா சாஸ்திரியின் சாஹித்யங்களை பாடி இசை அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in