சிற்பக் கலைக்கு உதாரணமாக விளங்கும் அயோத்தியா பட்டணம் கோதண்ட ராமர் கோயில்

சிற்பக் கலைக்கு உதாரணமாக விளங்கும் அயோத்தியா பட்டணம் கோதண்ட ராமர் கோயில்

Published on

சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டணம் கோதண்ட ராமர் கோயில், தட்சிண அயோத்தி என்று போற்றப்படுகிறது. ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நடைபெற்ற ஸ்தலம் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிசயங்களைக் கொண்ட கோயிலாக இருப்பதால், எண்ணற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

அயோத்தியா பட்டணம் கோதண்ட ராமர் கோயிலில் வீற்றிருக்கும் ராமபிரான், பக்தர்களுக்கு அனைத்து செல்வங்களையும் அளிக்க வல்லவராக உள்ளார். பக்தர்களுக்கு நல்லாட்சியை (ராம ராஜ்ஜியத்தை) வழங்கக் கூடியவராக பட்டாபிஷேக கோலத்தில் சீதாபிராட்டி, லட்சுமணர், ஆஞ்சநேய சுவாமியுடன் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு: சீதாபிராட்டியை மீட்க ராமபிரான், வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை வீழ்த்தினார். வெற்றியுடன் இலங்கையில் இருந்து திரும்பிய ராமபிரான், புஷ்பக விமானத்தில் இருந்து தனுஷ்கோடியில் இறங்கினார். மாலை வேளையாக இருந்தது. அயோத்தி திரும்ப வேண்டும் என்றால் சைல (தற்போதைய சேலம்) மலை, குன்றுகள் வழியாகச் செல்ல வேண்டும்.

சீதாபிராட்டி, லட்சுமணன், ஹனுமன், சுக்ரீவன், விபீஷணர் ஆகி யோருடன் ராமபிரான் சைல மலை குன்று பகுதியை வந்தடைந்தார். சற்றே இருட்டத் தொடங்கியது. அனைவரும் எங்கே தங்குவது என்று யோசனை செய்தபோது, சற்று தூரத்தில் ஒரு கோயில் தென்பட்டது. அங்கு பரத்வாஜ முனிவரை சந்தித்த பிறகு, அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, அனைவரும் அன்றிரவு அக்கோயிலிலேயே தங்கினர்.

அதிகாலை விடிந்தபோது, ராமபிரானின் பட்டாபிஷேகத்துக்கான நாள், திதி, நட்சத்திரம் ஆகியன நெருங்கிவிட்டது. நேரம் தவறி பட்டாபிஷேகம் செய்து கொள்வது முறையாக இருக்காது என்று கருதிய ராமபிரான், இத்தலத்திலேயே தனது பட்டாபிஷேகத்தை நடத்திக் கொண்டார். பின்னர் அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

கோயில் அமைப்பும் சிறப்பும்: அயோத்தியா பட்டணம் கோதண்ட ராமர் கோயில் 5 நிலை ராஜகோபுரமும், உயர்ந்த விளக்குத் தூணும் கொண்டு, கிழக்கு திசை நோக்கிய கோயிலாக விளங்குகிறது. விளக்குத் தூணின் அடியில் கருடாழ்வார், சங்கு, சக்கர உருவங்கள் காணப்படுகின்றன. கருவறை 3 நிலை விமானத்துடன் அமைந்துள்ளது. கருவறை நுழைவாயிலில், மூலவருக்கு பாதுகாவலர்களாக இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

கருவறையில் மூலவர் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார். வழக்கமாக வலது புறத்தில் எழுந்தருளும் தாயார், இத்தலத்தில் இடதுபுறத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கருடாழ்வார் ராமபிரானை வணங்கியபடி நின்ற நிலையில் உள்ளார். பிரகாரத்தில் தெற்கு நோக்கியபடி ஆஞ்சநேய சுவாமி அருள்பாலிக்கிறார். தனி சந்நிதியில் பன்னிரு ஆழ்வார்கள் எழுந்தருளியுள்ளனர்.

மகா மண்டபம் 28 கலை நயமிக்க தூண்களைக் கொண்டது. ஒரே தூணில் தசாவதாரக் காட்சிகள் அனைத்தும் செதுக்கப்பட்டுள்ளன. கண்ணன் கோபியரோடு நீராடும் காட்சி, பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணன் சிற்பம், பாமா - ருக்மிணி சுதைச் சிற்பங்களை காணலாம். கலை நுட்ப வேலைப்பாடுகள் கொண்ட இக்கோயில் தூண்களைத் தட்டினால், இசை ஒலிகள் எழுகின்றன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பத்தில், சிங்கம், கீழே யானை என்று காட்சியளிப்பது அதிசயமாக கருதப்படுகிறது.

அசுரனை வதம் செய்யும் தேவர், குதிரை, யானை, யாழி, சிங்கம் போன்றவற்றின் மீது அமர்ந்திருப்பது போன்று காணப்படுகிறது. இச்சிற்பம் ஒரே கல்லில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராமர் பட்டாபிஷேக காட்சி, பரதன், சத்ருக்னன், லட்சுமணர் கற்சிற்பங்கள், தூணில் செதுக்கப்பட்டுள்ள திருமலை நாயக்கர் மற்றும் அவரது தேவி சிற்பம் ஆகியன காண்போரை வியக்க வைக்கும்.

தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், திருச்செங்கோடு முருகன் கோயில், மதுரை திருமலை நாயக்கர் மஹால் ஆகியவற்றைக் கட்டிய திருமலை நாயக்கர், அதே காலத்தில் இக்கோயிலையும் கட்டினார் என்று கூறப்படுகிறது, சிற்பக் கலைக்கு சிறந்த உதாரணமாக இக்கோயில் விளங்குகிறது. கோயிலின் உட்கூரையில் காணப்படும் கஜேந்திர மோட்சம் ஓவியம், கண்ணனின் சிறுவயது விளையாட்டு ஓவியங்கள் ஆகியன காலத்தால் அழியாத ஓவியங்களாக காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.

சித்திரை பௌர்ணமி தினத்தில், இக்கோயில் அருகே உள்ள ஹனுமன் கோயில் கதவின் துளை வழியாக வரும் சூரிய ஒளி, இறைவன் மீது பட்டுக் கொண்டிருக்கும். பங்குனித் திருவிழா, புரட்டாசித் திருவிழா, ஸ்ரீராம நவமி, நவராத்திரி நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா காண்பார்.

வட இந்தியா சென்று அயோத்தி ராமரை வழிபட்டால் எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் அயோத்தியாபட்டணம் பட்டாபிஷேக ராமரை வழிபட்டாலே கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, 10 கிமீ தொலைவில் உள்ளது அயோத்தியா பட்டணம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in