

அயோத்தி ராமர் கோயிலுக்கு நிகராக, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 5 ராமர் கோயில்கள் போற்றப்படுகின்றன. அயோத்திக்கு செல்ல முடியவில்லை என்று நினைப்பவர்கள் இக்கோயில்களை ஒரே நாளில் தரிசிப்பதன் மூலம் அனைத்து புண்ணியங்களையும் பெற முடியும் என்பது ஐதீகம்.
ருத்தியூர் ராமர் கோயில், முடிகொண்டார் கோதண்டராமர் கோயில், தில்லைவிளாகம் வீர கோதண்டராமர் கோயில், அதம்பார் கோதண்டராமர் கோயில் ஆகியன அழைக்கப்படுகின்றன. இக்கோயில்களில் ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உற்சவங்கள், அமாவாசை தின ஆராதனை, புரட்டாசி சனிக்கிழமை திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறுகின்றன.
வடுவூர் கோதண்டராமர் கோயில்: திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள வடுவூரில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் தட்சிண அயோத்தி என்று போற்றப்படுகிறது. வனவாசம் முடிந்த பிறகு ராமபிரான் அயோத்திக்கு புறப்படத் தயாரானபோது, அவரை தரிசித்து மகிழ்ந்த மகரிஷிகள், அவரை தங்களுடன் தங்குமாறு வேண்டினர்.
அதற்காக ராமபிரான் தனது உருவத்தை சிலையாகச் செய்து, தான் தங்கியிருந்த இடத்தில் வைத்தார். சிலையைக் கண்ட ரிஷிகள், அதை தங்களுடனேயே வைத்திருக்க ராமபிரானிடம் அனுமதி கேட்டனர். அவர்களிடம் அச்சிலையைக் கொடுத்துவிட்டு ராமபிரான் அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் தஞ்சை மராட்டிய அரசர் சரபோஜி மன்னர் தலைஞாயிறு என்ற இடத்தில் கண்டெடுத்த விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து, இக்கோயிலை நிறுவினார்.
தில்லைவிளாகம் வீர கோதண்டராமர் கோயில்: திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள தில்லைவிளாகம் கோதண்டராமர் கோயில், வேலூர் தேவர் என்ற ராமபக்தரால் 1862-ம்ஆண்டு எழுப்பப்பட்டது. ஒருசமயம் வேலூர் தேவர் கனவில் தோன்றிய ராமபிரான் தனக்கு கோயில் கட்ட உத்தரவிட்டார்.
கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டபோது, அவ்விடத்தில் ஒரு கோயிலே புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1905-ம் ஆண்டுக்குப் பிறகு இக்கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கோயிலில் உள்ள தீர்த்தக் குளங்களில் அமாவாசை தினத்தில் நீராடினால், வீர கோதண்டராமர் அனைத்து தடைகளையும் நிவர்த்தி செய்வார் என்பது நம்பிக்கை.
பருத்தியூர் ராமர் கோயில்: குடவாசல் தாலுகாவில் உள்ள பருத்தியூர் ராமர் கோயில், ராமர் - லட்சுமணர் சூரிய நமஸ்காரம் செய்த இடமாகும். இத்தலத்தில் சூரியன் சிவபெருமானை தியானித்து தவம் இருந்துள்ளார். எண்ணற்ற ராமாயண சொற்பொழிவுகள், பட்டாபிஷேக வைபவங்கள் நடத்திய பிரவசன சக்கரவர்த்தி பிரம்ம பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரியால் இக்கோயில் கட்டப்பட்டது.
கோயில் கட்ட இவர் எண்ணியபோது, தடாகம் அமைக்குமாறு கனவில் ஓர் உத்தரவு வந்தது. தடாகம் அமைக்க நிலத்தை தோண்டியபோது, அங்கு கிடைத்த விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து இவர் இக்கோயிலை எழுப்பினார். வேதம், இசை, சொற்பொழிவு போன்றவற்றில் வெற்றி பெற பருத்தியூர் ராமர் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்: நன்னிலம் தாலூகாவில் உள்ள முடிகொண்டான் (மகுடவர்தனபுரம்) கோதண்டராமர் கோயிலில் தலையில் மகுடத்துடன் ராமபிரான் அருள்பாலிக்கிறார். ராமர் மற்றும் பரத்வாஜர் தவம் செய்தஇடமாக இத்தலம் போற்றப்படுகிறது.
இலங்கைக்கு செல்லும் வழியில் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்துக்கு விஜயம் செய்த ராமபிரான், இலங்கையில் இருந்து திரும்பும்போது வருவதாக உறுதியளிக்கிறார். அதன்படி ராமபிரான் சீதாபிராட்டி, லட்சுமணருடன் மீண்டும் முனிவர் ஆசிரமத்துக்கு வருகிறார். முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, ராமபிரான் அவருக்கு மகுடத்துடன் கிழக்கு நோக்கி தரிசனம் வழங்கியதாக ஐதீகம்.
அதம்பார் கோதண்டராமர் கோயில்: நன்னிலம் தாலுகாவில் உள்ள அதம்பார் கிராமத்தின் அருகில்உள்ள தாடகாந்தபுரம், நல்லமாங்குடி, வலங்கைமான், கொல்லுமாங்குடி, பாடகச்சேரி ஆகியன ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்கள் ஆகும். தாடகையை வதம் செய்த இடம் தாடகாந்தபுரம். அழகிய மானை சீதாபிராட்டி பார்த்த இடம் நல்லமாங்குடி. மான் வலதுபுறம் துள்ளி ஓடிய இடம் வலங்கைமான்.
மாயா மாரீசன் என்று அறிந்து அதை (மான்) வதம் செய்ய முடிவு செய்த இடம் அதம்பார். மானைக் கொன்ற இடம் கொல்லுமாங்குடி. தன் பாத அணிகலன்களை சீதாபிராட்டி கழற்றி வீசிய இடம் பாடகச்சேரி. மாய மானை வதம் செய்ய ராமபிரான் அம்பு எய்த இடமான அதம்பாரில் அமைந்த கோதண்டராமர் கோயிலில் இச்சம்பவம் தொடர்பான செய்தி உள்ளது.