

சுயம்புவான புற்றுக்கு மேலாக இந்தக் கோயில் அமைந்திருப்பதால் காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் நிவர்த்தி செய்யும் ஆலயமாக பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்த ஆலயத்தின் பிரதான தெய்வமாக ஸ்ரீ ஷோட
சி வித்யா திரிசூலினி துர்கா பரமேஸ்வரி, 16 கைகளுடன் ஷோடச கலையுடன் விசேஷ அனுக்ரக மூர்த்தமாய் காட்சி தருகிறாள். ஷோடசி - லலிதை - துர்கை என மூன்று அம்சங்களும் சேர்ந்த இவளை வழிபடுவதால் ருண, ரண, தோஷ நிவர்த்தி ஆவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
பிரதி மாத அமாவாசை நாளில் இம்முச்சக்தி அம்மைக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன. பிரம்ம சக்தி பீட ஆலயம், கற்கோயிலாக வெகுவிரைவில் உருப்பெறவிருக்கிறது.
ஆலயத்தில் பாலகணபதி, பாலமுருகன், சந்தான பகவதி, வாராஹி, பிரத்தியங்கரா, ஸ்ரீ சக்கரம், விஸ்வரூப ஆஞ்சநேயர், காமேஸ்வர காமேஸ்வரி ஆகிய இறை சொரூபங்களுக்கு நித்திய பூஜைகள் தனித்துவமாக நடக்கின்றன. பௌர்ணமி நாளில் நவா வர்ண பூஜையும் ஸ்ரீ வித்யா ஹோமும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணமும் அன்ன தானமும் ஆலயத்தில் நடைபெறுகிறது.
மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் பாலகணபதி, வலது கையில் சின்முத்திரையைத் தாங்கியும் இடது கையில் பூமி உருண்டையோடும் காட்சி தருகிறார். தும்பிக்கையால் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல் சிற்பம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
சூரசம்ஹார மூர்த்தியாக சேவல் வாகனத்தில் பாலமுருகன் அருள்பாலிக்கிறார். பால அம்சத்துடனும் துர்கை அம்சத்துடனும், அருள்நிறைந்தவர்களுக்கு விரல் சூப்பும் குழந்தையாகவும், மனதில் இருளுடன் வருபவர்களை நெற்றியில் திரிசூலத்துடனும் மிரட்டுபவளாக சந்தான பகவதி காட்சி தருகிறாள்.
மகிஷ வாகனத்தில் காளி சொரூபமாககாட்சி தருகிறாள் வாராஹி. வெள்ளிக்கிழமைகளில் நாணயம் வைத்து, வெண் தாமரை கொண்டு வாராஹியை இந்த ஆலயத்தில் பூஜிக்கின்றனர். பாலாலயத்தில், தியான நிலையில் அருள்பாலிக்கிறார் ஏழடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர்.