

மனிதர்களைச் சிறந்தவர்களாக்குவதே இஸ்லாத்தின் தலையாயக் கடமை. எல்லா இன்ப துன்பங்களுக்கும் நடுவே நின்று மனிதநேயத்தோடு வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கின்றன திருமறையும் அண்ணலின் வரலாறும். அந்தவகையில் இம்மை வாழ்வுக்குப் பொருள் சேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அப்படிச் சேர்த்தப் பொருளைத் தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தி மறுமையில் சுவனத்தை அடைவதன் வழியையும் மாந்தர்களுக்கு அறிவுத்துகிறது இஸ்லாம்.
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் எல்லோரும் கடைவீதிக்குச் செல்பவர்களாகவே இருந்துள்ளனர் என்று திருமறை கூறுவதன் மூலம் அவர்கள் உழைத்து உண்ணுபவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
இறைத்தூதர்கள் மட்டுமல்ல மக்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் உழைப்பதை அல்லாஹ் விரும்புகிறான். அவர்களின் உழைப்பிற்கேற்ற நற்பலனை அவன் நிறைவாக வழங்குவான். சதா சர்வகாலமும் இறைவனை மட்டுமே துதிப்பதை அவன் ஏற்கவில்லை. பூமியில் பரவிச் செல்லுங்கள்
அரேபியர்களில் பெரும்பாலானோர் வணிகர்கள். யவனர்கள் எனச் செந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடல் கடந்துவந்த வணிகர்களுள் அரேபியர்களும் அடங்குவர். தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து உப்பு, மிளகு, இலவங்கம், வாசனை திரவியங்கள், முத்து முதலானபொருட்களை அவர்கள் ஏற்றுமதி செய்துள்ளனர்.
‘பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ நன்கலங்கள் குதிரைகளையும் இறக்குமதி செய்திருக்கின்றன. இந்த வணிகர்களின் மூலமாகத்தான் இஸ்லாமும் உலகம் முழுவதும்பரவியது. தொலைதொடர்பு, விரைவுப் போக்குவரத்து வசதிகள் அற்ற அண்ணல் நபி மறைந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே இஸ்லாம் எனும் அமைதி மார்க்கம் வணிகர்களின் வழியாகத் தென்னிந்தியாவையும் வந்தடைந்தது.
அந்தஅளவுக்கு அரேபியர்களின் வாணிபம், உலகம் முழுதும் பரந்து விரிந்திருந்தது. வாணிபத்தில் சிறந்த குறைஷி குலத்தாரின் வாணிபப் பயணங்களை இறைவன் திருமறையில் புகழ்கிறான். கோடைக்கும் கடுங்குளிருக்கும் குறைஷிகள் நன்கு பழகிவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான். “தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள்” (திருக்குர்ஆன் 62:10) என இறைவன் கட்டளையிடுகிறான்.
இங்குஇறையருள் என்பது நாணயமான தொழிலும் அதில் கிடைக்கும் வருமானமுமே. வறுமையைக் கொண்டு அச்சுறுத்தும் சாத்தான் மனிதனை மானக்கேடான காரியங்களைச் செய்யத் தூண்டுவான். ஆனால் அதற்கு மனிதன் இணங்கக் கூடாது எனக்கூறும் அல்லாஹ், “என் சமூகமே! அளவையையும் நிறுவையையும் நேர்மையாக முழுமையாக்குங்கள்.
மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்துக்கொடுக்காதீர்கள். பூமியில் குழப்பம் செய்துகொண்டு திரியாதீர்கள்” (திருக்குர்ஆன் 11:85) என வாணிபத்தில் நேர்மையின் அவசியத்தை எடுத்துரைக்கிறான். வியாபாரம் நடக்கும்போது விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இணக்கமான சூழல் நிலவ வேண்டும். அப்படிப் பெறப்பட்ட செல்வமே சிறந்தது.
வாணிபம் தவிர கால்நடைகளை மேயவிடுவது, பயிரிடுவது, கடல் செல்வங்களை நுகர்வது என பலவிதங்களில் உழைத்துப் பொருளீட்ட மனிதனுக்குத் திருமறை வழிகாட்டுகிறது. வாழ்வாதாரத்துக்குச் செல்வம் சேர்க்கும் எந்தத் தொழில் ஆனாலும் அதில் மோசடி செய்வது, லஞ்சம் கொடுப்பது, வட்டி வாங்குவது கூடாது.
உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இம்மார்க்கத்தை வழிநடத்தும் இறைத்தூதர் அல்அமீன் என அழைக்கப்பட்டதும் அவருடைய சிறந்த வாணிபச் செயல்பாடுகளால்தானே! உயிருக்கு நெருக்கடியான சூழலில் மதீனாவுக்குத் தான் ஹிஜ்ரத் செல்லும் தருவாயிலும் தன்னிடம் பாதுகாப்புக்காகக் கொடுக்கப்பட்டப் பொருட்களை உரியோரிடம் ஒப்படைத்துவிட்டு வரும்மாறு அலீயிடம் அண்ணல் நபி கூறினார்.
அலீயும் அவ்வாறே செய்தார். நிலத்திலும் நீரிலும் வாணிபம் செய்து செல்வம் சேர்த்தாலும் மனிதனுக்கு கர்வம் வந்துவிடக்கூடாது. பெருஞ்செல்வத்தினைப் பெறும்பொருட்டு மனிதர்கள் இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக, அவன் அருளைப் பெறுபவர்களாகத் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும். அது அவர்களை மறுமையில் சுவனத்துக்குக் கொண்டு செல்லும்.
இறைவழியில் செலவு செய்யுங்கள்: பொன்னையும் பொருளையும் வெள்ளியையும் இறைவழியில் மக்களைச் செலவு செய்யவிடாமல் தடுத்துத் தானே விழுங்கும் துறவிகளுக்கும் மதகுருக்களுக்கும் நரகநெருப்பின் துன்பம் உண்டு என எச்சரிக்கிறான் இறைவன். எவ்வளவு கடுமையான எச்சரிக்கை இது!‘உழைத்துச் சேர்த்தச் செல்வத்தில் நம்பிக்கையாளருக்குக் கடமையாக்கப்பட்ட தர்மத்தைக் கொடுப்பதில் அவருடைய செல்வமும் தூய்மையானதாகிறது.
ஏழைகளுக்கு நேரடியாகக் கொடுப்பது சிறந்தது. மறைமுகமாகக் கொடுப்பது அதைவிடச் சிறந்தது. எதுவாயினும் இறைவன் அவற்றை அறிவான்’ பூமியில் இருந்து பெறப்பட்ட எல்லாம் எல்லோருக்கும் சொந்தம்எனும் சமதர்மக் கண்ணோட்டமே இது. ஆணவத்தைத் தகர்த்து இறைவன் முன் எல்லோரும் சமம் என்பதையே இஸ்லாம் நிலைநாட்டுகிறது. இறைவனுடைய நெருக்கத்தையும் மாமனிதர் அண்ணலின் பிரார்த்தனையையும் நல்வழியில் ஈட்டிய செல்வத்தின் தர்மம் பெற்றுத்தரும்.
(தொடரும்)
- bharathiannar@gmail.com