கங்கையை மணந்த கங்காதரன்: மேல ஓமநல்லூர் ஸ்ரீ பிரணவேஸ்வரர்

கங்கையை மணந்த கங்காதரன்: மேல ஓமநல்லூர் ஸ்ரீ பிரணவேஸ்வரர்
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டம் மேல ஓமநல்லூர் ஸ்ரீ பிரணவேஸ்வரர் கோயில் திருமணத் தடை நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல ஈசன் கங்கையை மணந்த கங்காதரனாக அழைக்கப்படுகிறார். திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணி நதியைப் போலவே அதன் துணை நதிகளான சிற்றாறு, கடனா நதி, பச்சையாறும் பெருமையுடன் திகழ்கின்றன. கங்கை நதியே இங்கு சியாமளா (பச்சையாறு) என்னும் பெயரில் ஓடிக் கொண்டிருப்பதாக ஐதிகம்.

திருநெல்வேலி தலபுராணத்தில் மந்திரேசுவர சருக்கம் என்ற பகுதியில் பச்சையாறு பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த நதி தோன்றும் முன்பு இப்பகுதியில் இருந்த கந்தர்ப்ப நகரத்தில் வாழ்ந்த பெரும் தவசியான ரேணு முனிவர் புனித கங்கை நதியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று தவம் இருந்தார். அதேசமயம் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு, கங்காதேவி கயிலைநாதனைப் பிரார்த்தித்தாள். இதைக் கேட்ட உமா மகேஸ்வரி, கங்கையை பூலோகத்தில் மானிடராகப் பிறக்குமாறு சபித்துவிடுகிறாள்.

இதைத் தொடர்ந்து ஒருநாள், கங்காதேவி, குழந்தையாக வந்து ரேணு முனிவர் தம்பதி அருகே உறங்குகிறாள். வந்திருப்பது கங்காதேவி என்பதை உணர்ந்த முனிவர் தம்பதி, தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாகக் கருதி, குழந்தைக்கு ஆதிரை என்று பெயர் சூட்டி வளர்த்து வருகின்றனர். ஆதிரைக்கு 8 வயது ஆகும்போது, அவளை தான் வளர்ப்பதாக களக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மன்னர், ரேணு முனிவரிடம் வேண்டுகிறார். அதன்படி ரேணு முனிவர் அவளை மன்னருக்கு தத்து கொடுக்கிறார்.

அரண்மனையில் சுக போகங்களோடு இருந்தாலும், ஆதிரைக்கு அவற்றில் நாட்டமில்லை. எந்நேரமும் ஐந்தெழுத்தையே ஓதிய வண்ணம் இருந்தாள். பக்தி திளைப்பில், நாள்தோறும் சிவ பூஜை செய்துவந்தாள். ஆதிரையின் பக்தியில் மகிழ்ந்த ஈசன், அவளுக்கு காட்சியருளி, அவளை ஓமநல்லூருக்கு அழைத்து வந்தார்.

அதேசமயம், அரண்மனையில் ஆதிரையைக் காணாது மன்னர் தவித்தபோது, பொருணை நதிதீரத்தில் மந்திரேசுவரம் (ஓமநல்லூர்) என்னும் திருத்தலத்தில் ஈசனோடு ஆதிரை வீற்றிருப்பதாக அசரீரி ஒலிக்கிறது. இறைவன் கட்டளைப்படி யாகம் ஒன்றை நிகழ்த்தி, மகளைக் காண்கிறார். மகிழ்ச்சியில் திளைத்த மன்னர், தன் மகளை கரம் பிடிக்குமாறு ஈசனை வேண்டுகிறார். குறிப்பிட்ட நாளில் திருமணம் நடைபெற்று அனைவரும் தேவலோகம் கிளம்பத் தயாராகினர்.

மகளைப் பிரியும் துயரத்தில் இருந்தார் மன்னர். இதை உணர்ந்த ஈசன், ஆதிரையை இரண்டாகப் பிரித்து, ஒரு பாதியை தலையில் சூடிக் கொண்டார். மற்றொரு பாதியை மன்னரின் ஆட்சிப் பகுதியில் இருந்த வைர மலையில் தவழும்படி செய்தார். அங்கிருந்து கிளம்பிய கங்கை, சியாமளா என்ற பெயருடன் ஓமநல்லூர் என்ற ஊரைத் தாண்டி, தாமிரபரணியுடன் ஒன்றாக கலந்தாள். ஆதிரா நதியே பச்சையாறு என்று மக்களால் அழைக்கப்படுகிறாள்.

சிவபெருமானுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடக்க தேவ தச்சனால் கட்டப்பட்ட கோயிலே ஓமநல்லூரில் கிழக்கு பார்த்து உள்ளது. தெப்பக்குளம், வசந்த மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் அமைந்துள்ளது. பிரதான வாசலை அடுத்து பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியவை உள்ளன. வசந்த மண்டபம் பிரம்மாண்ட சிற்பத் தூண்கள் தாங்கி வனப்போடு திகழ்கிறது. முகமண்டப வலது புறம் செண்பகவள்ளி அம்மன் சந்நிதி உள்ளது.

மகாமண்டப வடபுறம் தில்லைக் கூத்தர் சந்நிதி உள்ளது. அர்த்த மண்டப வாசலில் அனுக்ஞை விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் விக்கிரகங்கள் உள்ளன. நாகர விமானத்தில் கீழ் உள்ள கருவறை மூலவராக, திருமணத் தடை நீக்கும் இறைவனாக ஸ்ரீபிரணவேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.

துர்மரணம் சம்பவித்தவர்களது குடும்பத்தினர் பங்குனி அமாவாசை நாளில் இத்தலம் வந்து நீராடி சுவாமி, அம்பாளை வணங்கி மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். அன்றைய தினத்தில் நடைபெறும் பரிகார பூஜைக்கு திரளான மக்கள் கூடுவது வழக்கம்.

பஞ்ச பூதங்களை எடுத்துச் சொல்லும் விதமாக காசி விஸ்வநாதர், சொக்கநாதர், கைலாசநாதர், சங்கரேஸ்வரர், பிரணவேஸ்வரர் என ஐந்து மூர்த்திகளின் சந்நிதிகள் இங்கு உள்ளன. தினமும் இருகால பூஜை நடைபெறுகிறது. திருநெல்வேலி - பத்தமடை நெடுஞ்சாலையில் 15 கிமீ தொலைவில் பிராஞ்சேரி பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து தெற்கே 3 கிமீ பயணித்து மேல ஓமநல்லூரை சென்றடையலாம்.

- vganesanapk2023@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in