நல்லொழுக்கப் புரட்சியாளர் 23: இறைத்தூதரும் வஹியும்

நல்லொழுக்கப் புரட்சியாளர் 23: இறைத்தூதரும் வஹியும்
Updated on
2 min read

இறைத்தூதர் அண்ணல் நபியிடம் வேதவெளிப்பாடு (வஹி) முதன்முதலில் வந்தடைந்த மாதம் ரமலான். அதனைத் தொடர்ந்து சுமார் 23 ஆண்டுகாலம் தொடர்ந்து அண்ணல் நபிக்கு இறைவனிடம் இருந்து வேதவெளிப்பாடு வந்துகொண்டிருந்தது. அண்ணல் அவற்றை சளைக்காமல் மக்களுக்கு எடுத்துரைத்தார். அந்த நீண்ட பயணத்தில் அவர் எதிர்கொண்ட சவால்கள் எத்தனை எத்தனை? அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் தொடங்கி, அரசர்கள்வரை ஆயிரமாயிரம் எதிர்ப்புகளை அவர் சந்தித்திருந்தார்.

இப்ராஹிம் காலத்தில் இருந்தே ஓரிறை நம்பிக்கை மக்களிடையே போதிக்கப்பட்டது. அண்ணல் நபிக்கு முன்னர் தோன்றிய பல இறைத்தூதர்களும் அதனை மக்களிடையே பரப்பியிருந்தனர். காலப்போக்கில் அதை மறந்து தங்கள் மனஇச்சைகளுக்கு ஏற்ப மக்கள் பல தெய்வங்களை வழிபடத்தொடங்கினர்.

இறைத்தூதர்களையே தெய்வங்களாக்கினர். ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன. குழப்பங்கள் எஞ்சின. மீண்டும் ஏகத்துவத்தை வலுவாக நிலைநிறுத்த மக்களிடையே அதை அழுத்தமாக எடுத்துச்சொல்லி சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்தெடுக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார் மாநபி.

அண்ணல் நபிக்கு ஹிரா குகையில் முதன்முதலில் வஹி வந்தவுடன் அதன் அதிர்ச்சி தாளாமல் வீட்டிற்குச் சென்று நடுக்கத்தில் போர்வையைப் போர்த்திப் படுத்துக்கொள்கிறார். அத்தகையவரை மீண்டும் வஹி வந்தடைகின்றது.

“போர்வையைப் போர்த்திக் கொண்டவரே! எழுந்து எச்ச ரிக்கை செய்வீராக” (திருக்குர்ஆன் 74:1,2) என்று இறைவன் இறைத்தூதரிடம் கூறினான். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறியக்கூடிய இறைச்செய்திகளைக் கொண்டு மனிதர்களை எச்சரிக்கச் சொன்னான் இறைவன்.

மனிதர்களை நேர்வழிப்படுத்தும் அந்த அறிவுரைகளை ஏற்றுக்கொள்பவர்கள் சுவனத்தை அடைவார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்கள் துன்பத்தையே அனுபவிப்பார்கள். இறைச்செய்தியை ஒருவர் ஏற்றுக்கொள்வதற்கும் தன் நாட்டம் இருந்தாக வேண்டும் என்கிறான் இறைவன்.

தான் சொல்லும் அறிவுரைகள் இறைச்செய்திதான் என மக்களிடம் அண்ணல் கூறியபோது அதை அவர்கள் நம்பவில்லை. அவை புனையப்பட்டது எனவும் முன்னோர் சொன்ன கதைகள் எனவும் இறைச்செய்திகள் விமர்சிக்கப்பட்டன.

திருக்குர்ஆன் மொத்தமாக இறக்கி அருளப்பட்டிருக்கக்கூடாதா? என்றெல்லாம் விவாதித்த மக்கள், “இத்தூதருக்கு என்னவாயிற்று? உண்ணவும் செய்கிறார்! கடைவீதிகளில் உலவவும் செய்கிறார்!” (திருக்குர்ஆன் 25:7) என்று அண்ணல் நபியை ஏளனமும் செய்தனர். மேலும் இறைவனுக்கும் இறைத்தூதருக்குமான உரையாடலை நம்பாத மக்கள், இறைவனைத் தாங்கள் பார்க்க வேண்டாமா? வானவர்கள் தங்களிடம் ஏன் வரவில்லை? என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள்.

இவை அனைத்துக்கும் இறைவன் வஹியின் மூலம் பதிலளித்திருக்கிறான். இறைவன் இதுவரை மக்களிடையே அனுப்பிய இறைத்தூதர்கள் எல்லோரும் மக்களுளொருவராகவே இருந்துள்ளார்கள். அவர்கள் உணவு தேவைப்படும் உடலைக் கொண்டவர்களாகவும் மரணிப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள்.

அதுமட்டுல்ல, இறைத்தூதர்களாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் பகுத்தறியும் அறிவும் கருணையும் நேர்மையும் பணிவும் மக்களிடம் நன்மதிப்பையும் பெற்றவர்களுமாக இருந்திருக்கிறார்கள்.

இந்த அடிப்படை நற்குணங்களோடு, மிகமுக்கியமாக அவர்கள் தங்களை இறைவன் என எப்போதும் கூறிக்கொண்டதில்லை. சமைப்பதற்குத் தேவையான விறகுகளைக்கூட அண்ணல்நபி அலைந்து எடுத்துச் சுமந்து சென்றிருக்கிறார். மனிதர்களில் தன்னைத் தனித்துக் காட்டிக் கொள்பவரை இறைவன் விரும்புவதில்லை என்பது மாநபியின் தன்னடக்கம் ததும்பும் இறையச்சம். எந்த வகையிலும் தன்னை உயர்வானவராகக் காட்டிக்கொள்ளும் கர்வம் அண்ணலிடம் இருந்ததில்லை.

இவரை இறைவன் இறுதி இறைத்தூதராகத் தேர்ந்ததில் வியப்பேதும் இல்லை. ‘ஏளனம் செய்து துன்புறுத்தும் நிராகரிப்பாளர்களைத் திருக்குர் ஆன் கொண்டே அவர்களுக்கு எதிராகக் கடுமையாக முயற்சி செய்யுங்கள்’ என இறைத்தூதருக்கு இறைவன் பொறுமையையும் போதித்தான். “நாம் உம்மை நற்செய்தியாளராகவும் எச்சரிக்கையாளராகவும் அனுப்பியுள்ளோம். நீர் கூறும்: ‘நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்க
வில்லை.

ஆயினும் விரும்பியவர் தம் இறைவனின் வழியில் செல்வதைத்தவிர’ (திருக்குர்ஆன் 25:56,57). இதே போன்று திருமறையின் மற்றொரு இடத்தில், “நான் உங்களிடத்தில் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும் உறவினர்மீது அன்பு கொள்வதைத் தவிர” திருக்குர் ஆன் 42:23).

இறைச் செய்தி கூறுவோருக்குக் கூலி என்னவென்றால் இறைவனின் வழியில் மனிதர்கள் பரஸ்பர அன்பு செலுத்தி வாழ்வதுதான். அண்ணல் நபியை இறைத்தூதர் எனப் பறைசாற்ற கைமாறு கருதாது மக்களை நல்வழிப்படுத்தும் பண்பே சான்றாகும்.

அவசரக்காரனான மனிதனின் உள்ளத்தில் இறைவேதம் உறுதியாக பதிந்திடும் பொருட்டே, அது பகுதிபகுதியாக அருளப்பட்டது என இறைத்தூதருக்கு வஹியின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான். அவ்வாறு அருளப்பட்டதால்தான் இன்றும் திருமறை அதன் செறிவில் சிறந்து நிற்கின்றது.

எக்காலத்திற்கும் திருமறையில் சான்றுகளைப் பெறலாம். திருக்குர் ஆனில் இடம்பெற்றிருக்கக்கூடிய பல்வேறு அறிவியல் செய்திகளை எழுத்தறிவு பெற்றிராத அரேபியர்களில் ஒருவரான இறைத்தூதரிடத்தில் வஹியின் மூலமே இறைவன் வெளிப்படுத்தினான். இவை எல்லாம் வஹியின் சான்றுகள்.

வஹியின் முறைகள்: மனிதன் இறைவனின் முன் நேரடியாக நிற்கவோ, பேசவோ ஆற்றல் அற்றவன். எனவே, இறைச்செய்திகள் வானவர்(ஜிப்ரில்) மூலமாகவோ, திரைக்குப் பின்னால் இருந்தோ, உள்ளுணர்வாகவோ அல்லது மணியோசை போன்றோ இறைத்தூதர்களை வந்தடைந்தன.

மூஸா நபி, ஈசா நபி ஆகியோரின் அன்னையருக்கும் உள்ளுணர்வின் மூலம் வஹி இறைவனிடமிருந்து வந்தது. அன்றைய அரேபியர்களின் முறையற்ற வாழ்க்கையை மாற்ற வேண்டும் என கரிசனம் கொண்டிருந்த அண்ணல் நபியைப் பொறுத்தவரை, ஜிப்ரில் மூலமாக அதிக வேதவெளிப்பாடுகள் வந்திறங்கின.

சிலநேரங்களில் உள்ளுணர்வாகவும் மணியோசை போன்றும் வஹி வந்திறங்கின. அப்போது அண்ணலின் உடல் குளிர்காலத்திலும் வியர்வையால் நனைந்ததையும் கனமானதாக மாறியதாகவும் ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன

. என்றும் நிலைத்து நிற்கும் மனிதர்களுக்கான இறுதி இறைச்செய்திகளை அகிலத்தாருக்கு அறிவித்த அண்ணலும் இறைவனின் அருட்கொடைதான். தேனீக்களுக்குக்கூட தன் வாழ்க்கை முறை யினைப்பற்றிய உள்ளுணர்வை இறைவன் அருளியிருக்கிறான். அதில் மனிதர்களுக்கும் சான்று இருக்கிறது என்கிறது திருமறை.

(தொடரும்)

- bharathiannar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in