

திருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 26-வது திவ்ய தேசமாகப் போற்றப்படும் திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில், ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக இருந்த தலமாகவும், சந்திரனின் சாபம் நீங்கப் பெற்ற தலமாகவும், பஞ்ச ரங்கத் தலத்துள் ஒன்றாகவும் விளங்குகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறையில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது திருஇந்தளூர். இத்தலத்தில் பரிமள ரங்கநாதர், பரிமள ரங்கநாயகித் தாயாருடன் அருள்பாலிக்கிறார். கங்கையை விட காவிரி புனிதமானவள் என்று பெயர் பெற்ற தலமாக விளங்கும் இத்தலம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.
தலவரலாறு: நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் என்று, அம்பரீச மன்னரின் முன்னோர் உரைத்ததால், அதன்படி மன்னரும் பல ஆண்டுகளாக ஏகாதசி விரத்தை தவறாமல் கடைபிடித்து வந்தார்.
ஏகாதசி தினத்தில் ஏதும்உண்ணாமல், மறுநாள் துவாதசி தினத்தின் நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு, அவர் விரதத்தை முடிப்பது வழக்கம். இவரது நூறாவது விரத நாளுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் தேவலோகத்தில் உள்ளவர்கள் மிகவும் கலக்கம் அடைந்தனர்.
அம்பரீச மன்னர் தனது 100-வது ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டால், அவருக்கு தேவலோகப் பதவி கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. ஒரு சாதாரண மானிடனுக்கு இப்பதவி கிடைத்துவிட்டால், தங்கள் மரியாதை குறைந்து விடும் என்று தேவர்கள் அஞ்சினர்.
இதுகுறித்து துர்வாச முனிவரிடம் கூறினர். அவரும் தேவர்களுக்கு உதவி புரிவதாக தெரிவித்தார். மன்னரின் ஏகாதசி விரதத்துக்கு இடையூறு செய்வதற்காக பூலோகம் வந்தார்.
துர்வாச முனிவர் அம்பரீச மன்னரின் அரண்மனைக்கு வருவதற்குள், மன்னர் ஏகாதசி விரதத்தை முடித்திருந்தார். துவாதசி நேரம் இன்னும் இருந்தது. (ஏகாதசி விரதம் நிறைவடைந்திருந்தாலும், துவாதசி நேரம் முடிவதற்குள் உணவு அருந்தினால் மட்டுமே ஏகாதசியின் முழுப் பயனும் கிட்டும் என்ற விதி உள்ளது.
உணவு உண்பதற்குள் துவாதசி நேரம் முடிந்து விட்டால் ஏகாதசி விரத பலன் கிடைக்காது) துவாதசி திதியின் நல்ல நேரத்தில் மன்னர், உணவருந்த தயாராக இருந்தபோது, துர்வாச முனிவர் வந்து, மன்னரின் பெயர் சொல்லி அழைத்தார்.
தன் விரதத்தை தடுப்பதற்காகவே முனிவர் வந்திருக்கிறார் என்பதை அறியாத மன்னர், அவரை உணவருந்தஅழைக்கிறார். உணவருந்துவதற்கு சம்மதம் தெரிவித்த முனிவர், தான் நீராடிவிட்டு வருவதாகக் கூறி, அதுவரை மன்னரைகாத்திருக்குமாறு பணித்தார்.
தான் நீராடிவிட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்துவிடும் என்றும், அதனால் அம்பரீஷரின் விரதம் தடைபடும் என்றும் முனிவர் நினைத்தார்.
துவாதசி முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்தது.துர்வாச முனிவர் வருவதற்குள் உணவருந்தினால், அவரது கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று மன்னர்யோசனை செய்தார். இது தொடர்பாக வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் மன்னர் ஆலோசனை செய்தார்.
உடனே தலைமைப் பண்டிதர், “குறிப்பிட்ட நேரத்துக்குள் உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை உட்கொண்டு விட்டால், ஏகாதசியின் முழுப் பயனும் கிடைக்கும்” என்று அறிவுறுத்தினார். அதன்படி செய்து, மன்னர் தனது விரதத்தை நிறைவு செய்துவிட்டு, முனிவருடன் சேர்ந்து உணவருந்துவதற்காக காத்திருந்தார். தனது ஞான திருஷ்டியால் நடந்தவற்றை உணர்ந்த முனிவர், ஒரு பூதத்தை அழைத்து, மன்னரை கொல்வதற்கு உத்தரவிட்டார்.
இதையறிந்த மன்னர் பரிமள ரங்கநாதரிடம் சரண் புகுந்து நடந்தவற்றைக் கூறினார். பரிமளரங்கநாதர் பூதத்தை விரட்டியடித்தார். அனைத்தையும் உணர்ந்த துர்வாச முனிவர், பெருமாளிடம் சரணடைந்து தன்னை மன்னித்தருள வேண்டினார். பெருமாளும் அவரை மன்னித்தருளி, மன்னர் வேண்டியபடி இத்தலத்திலேயே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிய சம்மதம் தெரிவித்தார். அதன்படி இத்தலத்தில் பரிமள ரங்கநாதர் அருள்பாலித்து வருகிறார்.
கோயில் சிறப்பு: பரிமள ரங்கநாதர் கோயில், 5 நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்டதாக விளங்குகிறது. கோயில் நுழைவாயில் அருகே உள்ள சந்திர தீர்த்தத்தில் சந்திரன் (இந்து) நீராடி, தாயாரின் அருளால் தனது சாபம் நீங்கப் பெற்றான். இதனால் இத்தல தாயார் சந்திர சாப விமோசன வல்லி என்று அழைக்கப்படுகிறார். ஊரும் (இந்து ஊர்) இந்தளூர் என்று அழைக்கப்படுகிறது.
வேத சக்ர விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் வீர சயனத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலிக்கும் பெருமாளின் முகத்தை சந்திரனும், திருவடிகளை சூரியனும், நாபிக் கமலத்தை பிரம்மதேவரும் பூஜிக்கின்றனர். சிரத்தருகே காவிரித் தாயாரும், பாதங்கள் அருகே கங்கைத் தாயாரும் வணங்கியபடி உள்ளனர்.
எமதர்மனும் அம்பரீசரும் பெருமாளின் திருவடிகளை பூஜிக்கின்றனர். 12 அடி * 6 அடியாக முழுவதும் பச்சைக்கல்லால் ஆன பெருமாளின் அழகை ஆரத்தி காட்டும்போது காணலாம். பட்டுப் பீதாம்பரத்தின் மடிப்புகள், கை விரல் நகங்களும் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சித்திரை தமிழ் வருடப் பிறப்பு தினத்தில் பெருமாள் புறப்பாடு, ஆடி மாதத்தில் 10 நாள் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம், ஆவணியில் 5 நாள் கண்ணன் புறப்பாடு, புரட்டாசியில் தாயாருக்கு நவராத்திரி உற்சவம், ஐப்பசியில் 10 நாள் துலா பிரம்மோற்சவம், மார்கழியில் 21 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம், தை முதல் நாளில் பொங்கல் உற்சவம், பங்குனியில் 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
பஞ்சரங்கத் தலங்கள்: ரங்கம் என்றால் அரங்கம், மண்டபம், சபை, ஆறு பிரியும் இடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும். காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கனின் கோயில் அமைந்துள்ள 5 மேடான நதித்தீவுகள் பஞ்சரங்கத் தலங்கள் என்று அழைக்கப்படும்.
ஆதிரங்கம் (ரங்கநாத சுவாமி–ஸ்ரீரங்கபட்டணம்–கர்நாடகா), மத்தியரங்கம் (கஸ்தூரி ரங்கன்–ஸ்ரீரங்கம்), அப்பாலரங்கம் (அப்பகுடத்தான் கோயில்–கோவிலடி), சதுர்த்த ரங்கம் (சாரங்கபாணி கோயில்–கும்பகோணம்), பஞ்சரங்கம் (பரிமள ரங்கன் கோயில்–திருஇந்தளூர்) ஆகியன பஞ்சரங்கத் திருத்தலங்கள் ஆகும்.