

மாமல்லையில் வீற்றிருக்கும் நிலமங்கைத் தாயார், நில பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பவராக போற்றப்படுகிறார். பங்குனி உத்திர தினத்தில், 108 தாமரை மலர்கள், கஸ்தூரி மஞ்சள், அகில், தேவதாரு, கருங்காலி ஆகிய திரவியங்களைக் கொண்டு, நிலமங்கைத் தாயார் ஸ்ரீஸூக்த ஹோமத்தை நடத்தி மகிழ்கிறார்.
வேதத்தின் சிறந்த பாகமான பஞ்ச ஸூக்தங்களில் முதன்மையானது புருஷ ஸூக்தம். இதில் பரம்பொருளின் தன்மைகள் விவரித்து கூறப்பட்டுள்ளன. அதன் முடிவில் திருமகளான மகாலட்சுமியின் மணாளன் என்பதாலேயே புருஷ ஸூக்தத்தில் குறிப்பிட்ட அனைத்து பெருமைகளும் பெருமாளுக்கு ஏற்புடையதாக அமைந்துள்ளது என விவரிக்கப்படுகிறது.
இருப்பினும் அதற்கும் முற்பட்ட பழமையான வேதமான ரிக் வேதத்தின் பின்னிணைப்பு என்று கூறப்படும் ஸ்ரீ ஸூக்தத்தில் திருமகளின் பெருமை மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது.
பதினைந்து ரிக்குகள் கொண்டது ஸ்ரீஸுக்தம். இந்த உலகத்துக்கு பொறுமையும், மன வலிமையையும் தரும் ஆற்றல் கொண்ட திருமகளே, திருமாலிடம் சரணைடையும் பக்தர்களுக்கு திருவருள் புரிய உறுதுணையாக இருக்கிறாள்.
பொன்னிறம் கொண்டவள். மானைப் போன்று மென்மையான குணம் படைத்தவள். சந்திரனைப் போன்ற குளிர்ச்சி உடையவள். பல வித ஆபரணங்களை அணிந்து கொண்டு அந்த ஆபரணங்களுக்கே அழகு சேர்ப்பவள். ‘ஸ்ரீ’ என்ற திருநாமம் கொண்ட திருமகளின் திருவருளால் ‘இவ்வுலக மக்கள் என்றென்றும் அன்போடும் மகிழ்ச்சியோடும் இருக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று அலைமகளைத் துதிக்க ஸ்ரீ ஸூக்தம் வழிகாட்டுகிறது.
அப்படி பெருமை வாய்ந்த ஸ்ரீ ஸூக்த ஹோமம் திருக்கடல் மல்லை என்று போற்றப்படும் மாமல்லபுரத்தில் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் நிலமங்கைத் தாயாருக்கு 108 தாமரை மலர்கள், கஸ்தூரி மஞ்சள், அகில், தேவதாரு, கருங்காலி ஆகிய திரவியங்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. வில்வத்தில் வாசம் செய்பவள் திருமகள் என லஷ்மி அஷ்டோத்திர ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹாலஷ்மிக்கு வில்வ பழம் மிகச் சிறந்தது. எனவே வில்வ பழங்கள் கொண்டு நடத்தப்பெறும் ஸ்ரீ ஸூக்த ஹோமம் இவ்வுலக மக்களின் அறியாமையையும், வறுமையையும் நீக்கி வாழ்வில் வளம் பெறச் செய்யும். மார்ச் 25-ம் தேதி திங்கட்கிழமை இந்த ஹோமம் காலை 9 மணிக்கு தொடங்கி, பகல் 12 மணிக்கு மஹா பூர்ணாஹூதியுடன் முடிவுற உள்ளது.
நிலப் பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டவள் நிலமங்கைத் தாயார். ஸ்தலசயனப் பெருமாள் தலத்தில் பங்குனி உத்திர திருநாள் 10 நாள் திருவிழாவாக கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் நிறைவு நாளில் (பங்குனி உத்திரம் தினம்) தன் நாயகன் உலகுய்ய நின்ற பிரானுடன் பிராட்டி நிலமங்கைத் தாயார் யாகசாலையில் வீற்றிருந்து ஸ்ரீஸூக்த ஹோமத்தை நடத்தி மகிழ்கிறார்.
ஒவ்வொரு பக்தரும் தம் கவலைகள் தீர, குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் வியாபாரம் நன்கு பெறுக நிலமங்கைத் தாயாரை சரணடைந்து, அவர் அருள் பெற்று, வாழ்வில் வளம் பெற வேண்டும்.
- perunthamizhan@yahoo.co.in