நல்லொழுக்கப் புரட்சியாளர் 22: நாவடக்கம் நன்மை பயக்கும்!
நோன்புக்காலம் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி ஏகஇறைவனைச் சிந்தனை செய்யவும் நற்குணங்களைப் பேணவும் பயிற்றுவிக்கிறது. இம்மையின் நிலையாமையை அறிவுறுத்தி மறுமையின் நன்மையினை உணர்த்துகிறது. புலனடக்கப் பயிற்சி பெற தனியே துறவறம் தேவையில்லை.
இல்லறத்தில் இருந்துகொண்டே புலனடக்கத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்கிறது இஸ்லாம். “மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்” (திருக்குர்ஆன் 4:28). பலவீனமானவர்களை வலிமையானவர்களாக மாற்றுவதே இறைவனின் எண்ணம். இறையச்சம் கொண்டு நேர்வழியில் நடப்பவர்களுக்கு அதற்கான நற்கூலியை இறைவன் தருகிறான். ‘மனஇச்சைகளைப் பின்பற்றுபவர்கள் நேர்வழியைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டவர்கள்’ என்கிறது திருமறை.
நாவடக்கம்: ஐம்புலன்களில் தன்னிச்சையாகச் செயல்பட்டு அடுத்தவருக்குத் தீங்கு செய்யக்கூடியவற்றுள் முதன்மையானது நாக்கு. சுவையறியவும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் படைக்கப்பட்ட எலும்பில்லா உறுப்பு சகமனிதர்களை காயப்படுத்துவதற்கும் எளிதில் பயன்பட்டுவிடுகிறது.
புறம்பேசாமல் நாவடக்கம் கொள்ளல் பற்றி திருக்குர்ஆன் தனியே ஒரு அத்தியாயத்தைக்(104) கொண்டுள்ளது என்பதே அதற்கான முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. ‘குறைகூறிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்’ என்றும் ‘புறம்பேசுதல் என்பது இறந்துபோன தன் சொந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவதற்குச் சமம்’ என்றும் சொல்கிறது திருமறை.
வாய்திறந்து பேசினால், நன்மை தருவனவற்றைப் பேச வேண்டும். மற்றவை வீண்பேச்சுகள்தான். இது மனிதர்களிடம் சாத்தியமா? புறம்பேசியே பொழுதைக் கழிப்பவர்கள் தொடங்கி, புறம்பேசித் தன்காரியப் புலிகளாக ஆதாயம் அடைவோர் வரைஎங்கு நோக்கினும் புறம் பேசுதல் மலிந்து கிடக்கிறது. ஆனால் இது மனிதனை அழிவிற்கு இட்டுச்செல்லும். காலத்தையும் சேர்த்து வைத்த செல்வத்தையும் மதிப்பையும் வீணாக்கிவிடும்.
அநீதி இழைத்தவர்கள்: எட்டுவகையான மெய்ப்பாடுகளில் முதலில் இருப்பது நகை-சிரிப்பு. நகைத்தலில் மூன்று வகை உண்டு. ஒன்று புன்முறுவல். இரண்டாவது, அளவாகச் சிரிப்பது. மூன்றாவது பெருச்சிரிப்பு. நகைத்தல் எள்ளல், இளமை, பேதைமை, மடன் ஆகிய நான்கு நிலைகளில் உண்டாகும் என்பது இலக்கணம்.
அந்த வரிசையில் மனித இயல்பை நுட்பமாக அறிந்து முதலில் வைக்கப்பட்டுள்ளது எள்ளல். பிறரைக் கேலி செய்வதுதான் எள்ளல். அதில் வருவது பெருஞ்சிரிப்பு. அதன் விளைவைப்பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. உள்ளத்திற்கு மருந்தாகும் சிரிப்பு மற்றவரை மலினப்படுத்துவதால் வரக்கூடாது.
வகுப்பறையில் ஒரு குழந்தையை ஆசிரியரோ சக மாணவர்களோ கேலி செய்வதால் அவர்களின்ஆளுமை காயமடைகிறது. வேலை செய்யும்இடத்திலோ வெளியிடங்களிலோ கேலி செய்துசிரிப்பது வெறுப்புச் சூழலை உருவாக்கிவிடுகிறது. வெளியுலகில் ஊடாடும் பெண்களைக் கேலிசெய்வதன் மூலம் அவர்களுடைய இருப்பு தடைபட்டு வாழ்க்கையே முடங்கிவிடுகிறது. இவை யாவும் மனித ஆற்றலை முடக்கும் மடச்செயல்.
மனிதனுக்கு மனிதன் உயர்ந்தவனும் அல்ல, தாழ்ந்தவனும் அல்ல. எல்லோரும் சமமானவர்களே. கேலிசெய்பவர்கள் சக மனிதர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் என்று கருதப்படுவார்கள். “நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் பிற ஆண்களைப் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களைவிட சிறந்தவர்களாக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் பிற பெண்களைப் பரிகாசம் செய்ய வேண்டாம்.
அவர்கள் இவர்களைவிட சிறந்தவர்களாக இருக்கக்கூடும். நீங்கள் ஒருவரையொருவர் இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப்பெயர் சூட்டி அழைக்காதீர்கள். நம்பிக்கைகொண்ட பின்னர் பாவமான பெயரைச் சூட்டுவது மிகவும் கெட்டதாகும். இவற்றைவிட்டு விலகாதவர்கள்தான் அக்கிரமக்காரர்கள்” (திருக்குர்ஆன் 49:11) என்று கடுமையாக எச்சரிக்கிறது திருமறை.
இன்றைய சூழலில், உடலில் உறுப்பு சார்ந்தோ, பாலினம் சார்ந்தோ ஏதேனும் மாறுபாடு உள்ளவர்களை மாற்றுத்திறனாளிகள், மாற்றுப்பாலினத்தவர் என மதிப்பளித்து அழைக்கி்றோம். அறிவியல்யுகமான இன்றும் எத்தனைப் பட்டப்பெயர்கள் கொண்டு சகமனிதர்களை அழைத்திருப்போம். உடல் குறைபாட்டோடு சேர்ந்து இப்பட்டப்பெயர்கள் அவர்களுக்கு இன்னும்வலியை ஏற்படுத்தியிருக்கும். அறியாமை இருள் மனதை மறைத்திருப்பதே அதற்குக் காரணம்.
மக்களை கண்ணியத்துடன் நடந்துகொள்ளுமாறு இறைத்தூதர் அண்ணல் நபி வாயிலாக இறைவன் அறிவுறுத்துகிறான். ஒருவர், தன் தாயை இழிவாகக் குறிப்பிட்டு ஏசினார் என அண்ணலிடம் வழக்கு கொண்டுவந்தார். விசாரித்து உண்மை அறிந்த அண்ணல்,இழிச்சொல் சொன்னவரை, “நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர்”(புகாரி.6050) என்று சாடியிருக்கிறார். எப்போதும் அறியாமையில் உழலும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
அவர்களையும் இரக்கத்தோடு கையாண்டிருக்கிறார் அண்ணல். ‘உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்பதைப்போல தன் வாழ்நாளில் யாரும் வருந்தும்படி அண்ணல் பேசியதே இல்லை என நபித்தோழர்கள் சாட்சி சொல்கிறார்கள். இறைவனின் எண்ணத்தை ஏற்று நம்பிக்கையாளர்கள் பின்பற்ற ஏதுவாக, முன்னுதாரணமாக இரத்தமும் சதையுமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் அண்ணல்நபி. அவரை அறிவதே அறியாமையைப் போக்கும் வழி.
(தொடரும்)
- bharathiannar@gmail.com
