

காஞ்சிபுரத்தில் இருந்து கலவை போகும் வழியில் 19 கிமீ தொலைவில் அமைந்துள்ள சுமங்கலி திருத்தலம் திருமணம் வரம் அருளும் தலமாக போற்றப்படுகிறது. சத்தியவானுக்கு அருள்புரிந்ததால், ஈசனுக்கு ஸ்ரீ சத்தியநாதேஸ்வரர் என்றும், சாவித்திரிக்கு சுமங்கலி வரம் அருளியதால், அம்பிகை சுமங்கலி அம்மன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
தொண்டை நாட்டில் உள்ள 24 கோட்டங்களில் ஒன்றான காலீயூர் கோட்டத்தில் பிரம்மதேச நாட்டில் சுமங்கலி திருத்தலம் அமைந்துள்ளதாக கல்வெட்டுகள் உரைக்கின்றன. ‘சத்யவ்ரத க்ஷேத்ரம்’ என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள சுமங்கலி அம்மன் கோயிலில் ஸ்ரீசத்திய நாதேஸ்வரர் ஸ்ரீ சுமங்கலி அம்மனுடன் அருள்பாலிக்கிறார்.
அளவில் சிறியதாக இருந்தாலும் இக்கோயில் பல பெருமைகளைக் கொண்டது. கோயிலுக்கு கிழக்கு, தெற்கு என்று 2 வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயிலில் நுழையும் முன்பு நந்தி, பலிபீடத்தை தரிசிக்கலாம். அதைத் தொடர்ந்து முக மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றதும் ஈசன் கருவறையை அடையலாம்.
கருவறை நுழைவாயிலின் இருபுறமும் விநாயகரும், வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் லிங்கத் திருமேனியராக ஸ்ரீசத்திய நாதேஸ்வரர் அருள்பாலிக்கிறார். தெற்கு நோக்கிய கருவறையில் 4 திருக்கரங்களுடன் ஸ்ரீ சுமங்கலி அம்மன் அருள்பாலிக்கிறார். மேல் 2 திருக்கரங்களில் பாசம், அங்குசம், கீழ் 2 திருக்கரங்களில் அபய வரத முத்திரைகள் காணப்படுகின்றன.
நுழைவாயிலுக்கு மேற்குபுறத்தில் ஈசன் ரிஷபாரூடராக அம்பிகையுடன் அருள்பாலிக்கிறார். சுற்றுப் பிரகாரத்தில் நவக்கிரகங்கள், பஞ்ச கோட்டங்களின் தெய்வங்கள், சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கின்றனர். கோயிலில் கோமசிவன்குளம் என்ற தீர்த்தம் உள்ளது. இத்தலத்தில் காகபுஜண்டர், கண்ணுவர், புலத்தியர் வழிபாடு செய்துள்ளனர்.
சாவித்திரியின் பெருமைகள் மகாபாரதம் மற்றும் தேவி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளன. மகாபாரதத்தில் வன பர்வதத்தில், 299-ம் அத்தியாயத்தில் மார்க்கண்டேய உபதேசத்தில் சத்தியவான் மற்றும் சாவித்திரியின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. தர்மபுத்திரர் திரௌபதியின் பெருமைகளைப் பற்றி மார்க்கண்டேயரிடம் பேசும்போது, சிறந்த நற்குணங்களைக் கொண்ட திரௌபதிக்கு இணையாக வேறு யாரும் கிடையாது என்று கூறுகிறார்.
உடனே மார்க்கண்டேயர் சாவித்திரியின் பெருமைகளை எடுத்துக் கூறுவார். காகபுஜண்டர் நாடியில், ‘சிவத்தல மஞ்சரி என்னும் பகுதியில் உதய காண்டத்தில் சாவித்திரி தன் கணவன் சத்தியவானைக் காப்பதற்காக சுமங்கலி நோன்பு (பதி சஞ்சீவனி விரதம்) இருந்து இத்தலத்தில் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.
மாசியும் பங்குனியும் சேரும் நேரத்தில் கடைபிடிக்கப்படும் விரதம், காமாட்சிநோன்பு, சாவித்திரி விரதம், சுமங்கலிநோன்பு, சம்பத் கௌரி விரதம், காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டில் கர்வா சவுத் என்ற பெயரில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது.
அஷ்வபதி மன்னன் மகள் சாவித்திரி, சால்வ நாட்டு மன்னன் மகன் சத்தியவானை விரும்பி திருமணம் புரிந்துகொண்டாள். சத்தியவான், எதிரிகளிடம் நாட்டை இழந்ததால் விறகு வெட்டி பிழைத்து வந்தான். தேவரிஷி நாரதர் மூலம், சத்தியவானுக்கு ஆயுள் குறைவு என்றும் இன்னும் ஒரு வருடம்தான் உயிர் வாழ்வான் என்றும் அறிந்த சாவித்திரி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், தன் மாங்கல்யத்தைக் காத்துக் கொள்ளவும் விரதம் இருக்கத் தொடங்கினாள்.
மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கும்நேரம். அன்றைய தினத்தில்தான் சாவித்திரி தன் விரதத்தை முடித்திருந்தாள். சாவித்திரியின் மடியில் உயிர் நீத்தான் சத்தியவான். சத்தியவானின் உயிரை பறித்துக் கொண்டு எமதர்மராஜன் புறப்படும்போது, எமதர்மராஜனைப் பின் தொடர்ந்து அவனோடுவாதம் செய்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட எமதர்மராஜன், தர்ம சாஸ்திரங்களை விளக்கிக் கூறி, எடுத்த உயிரை மீண்டும் கொடுக்க முடியாது என்று கூறி, அவளுக்கு வேறு வரம் அளிப்பதாக உறுதி அளித்தான்.
சாவித்திரியும் சமயோசிதமாக தன்வம்சம் தழைக்க வேண்டும் என்று வரம்கேட்டாள். எமதர்மராஜன் தந்தோம் என்றுகூறியதும், அதற்கு தன் கணவன் தன்னுடன் வர வேண்டும் என்று சாவித்திரி வேண்டினாள். சத்தியவானுக்கு மீண்டும் உயிர் தந்து, சாவித்திரி தீர்க்க சுமங்கலியாக இருக்க வாழ்த்திவிட்டுச் சென்றான் எமதர்மராஜன்.
காரடையான் நோன்பு: விரதத்தை முடித்திருந்த சாவித்திரி மண்ணையே பிசைந்து சிறு சிறு அடைகளாகத் தட்டி, அம்மனுக்கு படைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் மண் சோறு உண்டு நேர்த்திக் கடன் நிறைவேற்றும் வழக்கம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
சாவித்திரி விரதம் இருந்ததை நினைவு கூர்ந்து, கார் அரிசியில் அடை செய்து அம்பாளுக்குப் படைப்பதால் ‘காரடையான் நோன்பு’ என்று பெயர் பெற்றது. பெண்கள், கும்பம் வைத்து அம்மனை வழிபட்டு, மஞ்சள் சரடு அணிந்து கொள்வார்கள்.
சிவனுக்காக உப்பு அடை, பார்வதிக்காக வெல்ல அடை படைத்து, அதை உண்டு, “உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்றேன், மறுக்காமல் எனக்கு மாங்கல்ய பாக்யம் தா” என்று வேண்டி கணவன் மற்றும் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பெண்களை வணங்குவர்.
நம்பிக்கையுடனும் பக்தி சிரத்தையுடனும் இந்த நோன்பைக் கடைபிடித்தால் தம்பதிகள் இடையே இருக்கும் பிரச்சினைகள் (கருத்து வேறுபாடுகள்) நீங்கி அன்பும் அன்யோன்யமும் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் இணைவார்கள்.
பெண்கள் ஜாதகத்தில் இருக்கும் அஷ்டம ஸ்தான தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்ய தடை நீங்கி வம்சம் விருத்தியாகும். கன்னிப் பெண்கள் இந்த நோன்பில் கலந்து கொள்வதால், தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது திருமண கனவுகள் நிறைவேறும்.