தடைகளைக் களையும் பாறைப் பிள்ளையார்

தடைகளைக் களையும் பாறைப் பிள்ளையார்
Updated on
2 min read

தடைகளைக் களையும் பாறைப் பிள்ளையார்உமா சங்கரன் குடைவரைக் கோயிலாக உள்ள மகேந்திரவாடி பாறைப் பிள்ளையார் கோயில், சக்தி வாய்ந்த கோயிலாக அறியப்படுகிறது. கல்வி, திருமணம், வியாபாரம் ஆகியவற்றில் உள்ள தடைகளைக் களைந்து, வெற்றி கொடுக்கும் விநாயகராக இத்தல பிள்ளையார் போற்றப்படுகிறார்.

பல்லவர்கள் தமிழகத்தில் கிபி 3-ம் நூற்றாண்டில் இருந்து 9-ம் நூற்றாண்டு வரை காஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு அரசாட்சி புரிந்தனர். பல்லவ மன்னர்களில் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், ராஜ சிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்ம வர்மன், பரமேஸ்வர வர்மன், நந்தி வர்மன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல்லவ மன்னர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தாலும், தங்களுடைய படைகளை காஞ்சியில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள மகேந்திரவாடி என்ற ஊரில் வைத்திருந்தனர். கிபி 585 முதல் 630 வரை ஆட்சி புரிந்த பல்லவ மன்னரான முதலாம் மகேந்திரவர்மன் குன்றுகளைக் குடைந்து, குடைவரைக் கோயில் அமைக்கும் முறையை முதலில் கையாண்டார்.

அவர் காலத்தில் எழுப்பப்பட்ட ஒரு குடைவரைக் கோயில் இவ்வூரில் உள்ளது. ஊரில் பல சீரமைப்புப் பணிகளை மேற்கொண்ட இவர், விசித்ர சித்தன், குணபரன், அவனி பாஜனன், சத்ரு மல்லன், லலிதாங்குரன், சங்கீரண கதி, மத்த விலாசன், சித்திரகாரப்புலி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். பரிவாதனி என்ற வீணை வாசிப்பிலும் சிறந்து விளங்கினார்.

பாலாற்று நீரை ஒரு கால்வாய் மூலம் இவ்வூருக்கு கொண்டு வந்து பெரிய ஏரியை அமைத்து, அதில், நிரப்பி விவசாயம் செழிக்க வழி வகை செய்தார். இந்த ஏரிக்கு ‘மகேந்திர தடாகம்’ என்று பெயரிடப்பட்டது. தான் அமைத்த குடவரைக் கோயிலுக்கு ‘மகேந்திர விஷ்ணுக் கிரஹம்’ என்று பெயரிட்டார். அந்த குடவரைக் கோயிலுக்கு அருகிலேயே சற்று எதிர்ப்புறமாக அமைந்துள்ளது பாறை விநாயகர் கோயில். இந்த விநாயகரை கோட்டை விநாயகர் என்று அழைக்கின்றனர். பாறையில் விநாயகர் செதுக்கப்பட்டுள்ளார்.

அந்த பாறையைச் சுற்றியே கோயில் எழுப்பப்பட்டுள்ளது. சிறிய கோயில்தான். விநாயகர் தலையில் கிரீடத்துடன் நான்கு திருக்கரங்களோடு அருள்பாலிக்கிறார். தும்பிக்கையை சற்றே சாய்த்து இடது கீழ்க்கரத்தில் ஏந்தியிருக்கிறார். வலது கீழ்க்கரத்தில் உடைந்த தண்டை உடைய கொம்பையும் இடது கீழ்க்கரத்தில் மோதகத்தையும் ஏந்தியுள்ளார். தடைகளைக் களைந்து, பாறை விநாயகர் அனைத்திலும் வெற்றியைத் தருவார் என்பது நம்பிக்கை.

கோயிலுக்கு மேலே உள்ள விமானத்தில் எண்ணற்ற சுதைச் சிற்பங்கள் உள்ளன. ரிஷபத்தில் காட்சி அருளும் பார்வதி பரமேஸ்வரன், முருகன் மயில் மீது எழுந்தருளிய கோலம், நின்ற நிலையில் விநாயகர் போன்ற சுதைச் சிற்பங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன. கருங்கற்களால் கோயில் கட்டப்பட்டிருந்தாலும், ஓர் இடத்தில் சுவரில் விரிசல் காணப்படுகிறது.

கோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருக்கும் நீர் தெள்ளத் தெளிவாக காணப்படுகிறது. இவ்வளவு தூய நீர் அந்த இடத்தில் இருப்பது அதிசயமாகத் தெரிகிறது. கோயில் விமானம் பல்லவர்கள் காலத்ததாகத் தெரியவில்லை. அது பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.
மகேந்திரவர்மன் காலத்து பாறை விநாயகர் கோயிலாகக் கருதப்படும் இக்கோயில், நீண்ட நாட்களாக சரிவர பூஜை, அபிஷேகம் போன்றவை நடைபெறாமல் உள்ளது. பிள்ளையார்பட்டியிலும் இது போன்ற பாறையில் விநாயகர் சிலை செதுக்கப்பட்டுள்ளது.

அங்கே ஒரு பெரிய கோயில் எழுப்பப்பட்டு, கோலாகலமாக விழாக்கள் நடத்தப்பட்டு, உலகளவில் அந்த விநாயகர் பேசப்படுகிறார். ஆனால் இந்தக் கோயில் உள்ளூர் மக்களாலேயே சரி வர கவனிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

பாரம்பரிய கோயில்களை மீட்டெடுக்கும் முயற்சிகளை அனைவரும் எடுத்தால், இதுபோன்ற பல கோயில்கள் புத்துயிர் பெறும். சென்னையில் இருந்து 88 கிமீ தொலைவிலும், சோளிங்கர் ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும், காஞ்சியில் இருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது மகேந்திரவாடி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in