

ரமலான் - ஈகையைக் கொண்டாடும் மாதம். இறைவனால் மனித சமூகத்திற்குக் கொடுக்கப்பட்ட ஆகச் சிறந்த ஈகை, திருக்குர்ஆன். சத்தியத்தைத் தரிசிக்க, தடம்மாறிய மனிதர்களிடையே சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்த ஏகஇறைவனால் அருளப்பட்ட மாபெரும் அருட்கொடை திருக்குர்ஆன்.
அத்திருமறை, முதன்முதலில் இறைவனால் முஹம்மது நபிக்கு அருளப்பட்ட மாதமே ரமலான். ‘ரமதான்’ என்னும் அரேபிய சொல்லுக்கு அதீத வெம்மை என்று பொருள்.
இந்த வெம்மை, மனித மனங்களில் இருக்கும் தீய எண்ணங்களைச் சுட்டெரித்து மனதைத் தூய்மைப்படுத்தும். இந்தப் புனித ரமலான் மாதம் முழுவதும் இறைவனின் திருப்பெயரால் நோன்பு நோற்கவும் இரவுத்தொழுகையை நிறைவேற்றவும் நிய்யத்து(உறுதி) ஏற்கப்படுகிறது.
உண்ணாமல் பருகாமல்: ரமலான் நோன்புக்குமுன் மாதந்தோறும் மூன்று நோன்புகள் இருப்பது, மொஹரம் 10ஆம் நாள் நோன்பு இருப்பது போன்ற வழக்கங்கள் இருந்துள்ளன.
யூதர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் நோன்பு கடமையாக இருந்துள்ளது எனத் திருமறை கூறுகிறது. அண்ணல்நபி மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற இரண்டாண்டுகள் கழித்து கி.பி.624இல் ரமலான் நோன்பு இஸ்லாமியர்களுக்குக் கடமையாக்கப்பட்டது.
ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் கிழக்கில் வெண்நிறஒளிக்கீற்று தெரியத் தொடங்கியதில் இருந்துமேற்கில் இரவு தொடங்கும் நேரம்வரை நோன்பை நோற்க வேண்டும். மாதத்தின்முதல் பிறை பார்த்து நோன்பு வைக்கவேண்டும். அடுத்த மாதத்தின் பிறை பார்த்து நோன்பைக் கைவிட வேண்டும்.
இந்தப் புனித மாதத்தில் உண்ணாமல் பருகாமல் இருப்பதன் வழியாகப், பசியின் அருமை உணர்த்தப்படுகிறது. பசித்திருக்கும் ஒருவரின் நிலை உணர்ந்து ஈதல் என்பதன் முக்கியத்துவமும் உணர்த்தப்படுகின்றது.
அதுமட்டுமல்ல, நோன்பு நோற்கும் காலத்தில் ஒருவர், கோபம்கொள்ளக் கூடாது, பொய் பேசக்கூடாது, புறம் பேசக்கூடாது, சண்டைச் சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது. இவை அடிப்படை ஒழுக்கங்கள். இவைதவிர, மது அருந்துதல், கொலை செய்தல், சூதாடுதல் போன்ற மனித மாண்பைக் கெடுக்கும் செயல்களில் இருந்து மனிதனை இறைவன் தடுத்து வைக்கிறான்.
நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் திருக்குர்ஆனை இந்த மாதத்தில் அருளிய இறைவன் மனிதனுக்கு நேர்வழியைக் காட்டுகிறான். ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க முடியாமல் நோய்வாய்ப்பட்டவர்கள், பயணிகள் ஆகியோருக்கு நோன்பு கட்டாயமாக்கப்படவில்லை.
மற்ற நாட்களில் அந்நோன்புகளை அவர்கள் நிறைவேற்றலாம். ஏதேனும்மற்ற காரணங்களால் நோன்பைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள் ஒருநாள் நோன்புக்குஈடாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். இன்னும் கூடுதலாக ஏழைகளுக்கு வழங்குதல் சிறப்பு வாய்ந்ததாகும். நோன்பின் அடுத்த நிலை தர்மம் செய்தலே!
நோன்புக் கடமையைச் செய்யமுடியாதபோது அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்குஉணவளிப்பதை இறைவன் ஏற்றுக்கொண்டுள்ளான். மனிதர்களிடையே ஈகைக் குணம் வளர்வதை இறைவன் நாட்டம் கொள்கிறான்.
நோன்பு கால இரவில் ஒருவர் மனைவியுடன் கூடுவது அனுமதிக்கப்பட்ட நிலையில், மறதியாக நோன்பு நோற்றப்பொழுதில் தமது மனைவியுடன் ஒருவர் கூடிவிட்டார். அல்லாஹ்வுக்கு அஞ்சி, தன் தவறுக்கு வருந்தி அதற்குப் பகரமாக என்ன செய்வதென அறிய அண்ணலிடம் ஓடோடி வருகிறார்.
“அவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!’ என்றார். நபி, ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார். ‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன்!’ என்று அவர் சொன்னார். அண்ணல் நபி, ‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?’ என்று கேட்டார்.
அவர், ‘இல்லை!’என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்கஉமக்கு சக்தி இருக்கிறாதா?’ என்று நபி கேட்டார். அவர், ‘இல்லை!’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?’ என்று நபி கேட்டார். அதற்கும் அவர், ‘இல்லை!’ என்றார். அண்ணல் நபியிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி ‘கேள்வி கேட்டவர் எங்கே?’ என்றார்.
‘நானே!’ என்று அவர் கூறினார். ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!’ என்று இறைத்தூதர் கூறினார். அப்போது அம்மனிதர். ‘இறைத்தூதரே, மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரைவிடப் பரம ஏழைகள் யாருமில்லை’ என்று கூறினார். அப்போது நபி, தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு ‘இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!’ என்றார்” (ஸஹீஹுல் புகாரி:1936)
அண்ணல்நபி, திருமறையின் வழியில் நின்று நோன்பு காலத்தில் ஏற்பட்டத் தவறுக்குப் பரிகாரம் சொல்கிறார்; அல்லது தண்டனை கொடுக்கிறார். அதுவும் அம்மனிதனைப் பண்படுத்தும் விதமாக! ஏக இறைவனுக்கும் அவன் தூதர் மாநபிக்கும் மனிதகுலத்தின் மீது அளவற்ற அருளும் நிகரற்ற கருணையும் உள்ளதற்கு இதுவே சான்று.
நோன்பு நோற்காமல் விடுவதற்குப் பகரமாக ஈகையைச் செய்யச் சொன்னாலும் இச்சைகளைக் கட்டுப்படுத்தி இறைச்சிந்தனையில் நோன்பிருத்தல் சிறப்பானது. அது மறுமையில் ரய்யான் எனும் வாயில் வழியே சொர்க்கம் அடைய வழிசெய்யும். இம்மையில் மற்ற 11 மாதங்கள் மாண்புடன் வாழ மனதைப் பக்குவப்படுத்தும். நோன்பிருந்து மாண்புடன் வாழ்வோம்!
(தொடரும்)
- bharathiannar@gmail.com