சத்தீஸ்கர் விஷ்ணு கோயிலில் சிவராத்திரி தினத்தில் கும்பமேளா

சத்தீஸ்கர் விஷ்ணு கோயிலில் சிவராத்திரி தினத்தில் கும்பமேளா
Updated on
3 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் காரியா பாண்ட் ஜில்லாவில் ராஜிம் என்ற ஊரில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு கோயில் உள்ளது. ராஜீவலோசனன் என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கும் பெருமாள், மகா சிவராத்திரி தினத்தில் கும்பமேளா வைபவத்தில் திரிவேணி சங்கமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ராஜிம் ஒரு திரிவேணி சங்கமம் பகுதி. இங்கு மகாநதி, பைரி, சொந்தூர் என்று மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன. மகா சிவராத்திரி தினத்தில் முதல் சங்கமம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் மூன்று நதிகளிலும் நீராடி, விஷ்ணுவை தரிசிப்பது பெரும் பேறாகக் கருதப்படுகிறது. அன்று கும்பமேளா கொண்டாடப்பட்டு பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர்.

தல வரலாறு: மன்னர் ரத்னாகர் என்பவர் விஷ்ணு பக்தராக இருந்தார். ஒரு யாகம் செய்யும்போது சில பேய்கள், மன்னரைத் தாக்கியதாகவும், அவரது யாகத்துக்கு இடையூறு அளித்ததாகவும் கூறப்படுகிறது. மனச்சோர்வடைந்த மன்னர், தேவர்களிடம் இதுகுறித்து சைகையால் முறையிட்டார். அதே சமயம் அவரது அரச யானை கஜேந்திரா கிரா, ஒரு முதலையிடம் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

தன்னை காப்பாற்றும்படி மகாவிஷ்ணுவை யானைவேண்டிக் கொண்டது. ஆதரவற்ற யானைக்கு உதவும்பொருட்டு வெறுங்காலுடன் வந்த மகாவிஷ்ணு, யானையைக் காப்பாற்றி, ஜொலிக்கும் தாமரை போன்ற கண்களை உடைய ரஜிம் லோசனனாக (ராஜீவலோசனன்) மன்னனுக்கு தரிசனம் கொடுத்தார். இப்படி விஷ்ணுவை ரத்னாகர் பார்த்ததும், அதே கோலத்தில் இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று விண்ணப்பம் வைத்தார்.

பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி, விஷ்ணுவும் அதே கோலத்தில் எழுந்தருளினார். அந்த விக்கிரகமே ராஜீவலோசனனாக அழைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயிலும் கட்டப்பட்டதாக தகவல்கள் உள்ளன. இந்த இடம் வெங்கடேஸ்வரா அல்லது மகாவிஷ்ணுவின் உறைவிடமாக இருப்பதைக் குறிக்கும்விதமாக குடவிழா நடைபெறுகிறது.

கோயில் அமைப்பு: ராஜீவலோசனன் கோயில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்றும், நள வம்சத்தைச் சேர்ந்தவிலாஸ்துங்கா என்பவர் இக்கோயிலை எழுப்பினார் என்றும் ஒரு கல்வேட்டு தெரிவிக்கிறது. இக்கோயிலை தெய்வச் சிற்பி விஸ்வகர்மா கட்டினார்என்றும் கூறப்படுகிறது. ஆங்கில தொல்பொருள் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம், இக்கோயில் 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கோயிலுக்கு ராஜகோபுரம் என்று எதுவும் கிடையாது. மூலவருக்கு மேல் வெளிப்பக்கம் ஒரு விமானம் எழுப்பப்பட்டுள்ளது. நிலத்தில் இருந்து 50 அடிஉயரத்தில் உள்ள விமானம், சதுர பிரமிட் பாணியில்5 அடுக்காக அமைந்துள்ளது. முன் மண்டபம், நடுமண்டபம், கருவறை என்று கோயில் விரிவடைகிறது.

இரு மண்டபங்களிலும் தலா 6 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் துவாரபாலகர்கள், சீதை, நரசிம்மர், வராகர், 8 கைகளுடன் சிங்கத்தில் அமர்ந்த துர்கை, குதிரைகள் பூட்டிய சூரியன் என்று பெரிய சிற்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் கருவறைக்கு செல்லும் பாதை மிகவும் நீண்டது. மூன்று அடுக்குகளில் வளைந்த நுழைவு வாயில்களைக் கொண்டுள்ளது. வளைந்த வாயில்களில் ஏராளமான வேலைப்பாடுகளைக் காணலாம். முதல் முன் அடுக்கில் மேல் மாடத்தில் இருபுறமும் யானைகளுடன் கூடிய மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். இரண்டாவது உள் அடுக்கில் சிவபெருமான் நாகர்களுடன் அருள்பாலிக்கிறார். மூன்றாவது உள் அடுக்கில் மகாவிஷ்ணு 4 கைகளுடன் சேஷன் மீது அமர்ந்துள்ளார்.

கருவறை மாடத்தில் கருடன் மீது மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.கருவறைக்குச் செல்லுமுன், புத்தர் ஒரு புறமும்,மற்றொரு புறம் ஆஞ்சநேயரும் காட்சிஅருள்கின்றனர் உள்ளே மூலவராக கருப்புக் கல்லில் நின்ற கோலத்தில் பஞ்சகச்சம் வேட்டி அணிந்து, கழுத்தில் பூமாலைகளுடனும், 4 கைகளுடனும் ராஜீவலோசனன் அருள்பாலிக்கிறார். அவருக்கு இருபுறமும் சிறிய அளவில் ஸ்ரீதேவி, பூதேவி அருள்பாலிக்கின்றனர்.

மூலவருக்கு தினமும் 3 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. காலையில் சிறுவயது கோலம் (இளையவிஷ்ணு), முற்பகலில் நடுத்தர வயது கோலம் (இரு கைகளுடன் நடுத்தர விஷ்ணு), மாலையில் முழுமனித கோலம் (நான்கு கைகளுடன் முதிர்ந்த விஷ்ணு) என்றுமூன்று வித கோலத்தில் ராஜீவலோசனன் அருள்பாலிக்கிறார்.

கோயிலைச் சுற்றிவரும்போது, நரசிம்மர், வாமனர், வராகர், பத்ரிநாதர் சந்நிதிகள் காணப்படுகின்றன. கோயில் மகாபோதி கோயிலை நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் புத்தமத கோயிலாக மாறி, பின்னர் மீண்டும் பழைய கோயிலாக மாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராஜிம் கும்பம்: ராஜிம் கும்பம் என்று அழைக்கப்படும் கும்பமேளா, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடைபெறும். இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருந்தும் நாகா சாதுக்கள், ரிஷிகள், முனிவர்கள் என்று எண்ணற்றோர் இந்த சமயத்தில் வந்திருந்து திரிவேணி சங்கமத்தில் நீராடி, பெருமாளை தரிசிக்கின்றனர். இதே திருவிழா சமயத்தில் ரஜிம் லோச்சன் மஹோத்சவ் வைபவம் நடைபெறுகிறது.

சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல்வேறு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். சிவராத்திரி தினத்தில் வைணவர்கள், சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள், பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் வந்திருந்து கும்பமேளாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர். பாரம்பரிய புண்ணிய மேளா என்றும் ஐந்தாவது கும்பம் என்றும் இவ்விழா அழைக்கப்படுகிறது.

கோயில் காலை 6 மணி முதல் இரவு 7.30 வரை திறந்திருக்கும். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து 50 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து புரி ஜெகந்நாதர் கோயிலுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக தரிசிக்கும் கோயிலாக இக்கோயில் அமைந்துள்ளது.

- radha_krishnan36@yahoo.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in