

சிவபெருமானுக்கு உரிய விரதமாக மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரவில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ‘இருள் மற்றும் அறியாமை நீங்கி’ ஒளி பெறுவதை நினைவூட்டும் விதமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் இவ்விழா தினத்தில் சிவபெருமானை தியானித்து, நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு, விரதம் இருப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இரவு முழுவதும் கண்விழித்து, சிவபெருமானுக்கு நடைபெறும் நான்கு கால பூஜை மற்றும் அபிஷேகத்தைக் காண்பது பெரும் பேறாக கருதப்படுகிறது.
நான்கு கால பூஜை மற்றும் அபிஷேகங்கள் மாலை 6.30 முதல் இரவு 9.30 வரை, இரவு 9.30 முதல் நள்ளிரவு 12.30 வரை, நள்ளிரவு 12.30 முதல் அதிகாலை 3.30 வரை, அதிகாலை 3.30 முதல் காலை 6 மணி வரை நடைபெறும். இந்த பூஜை சமயங்களில் எந்த எந்த பொருட்களைப் பயன்படுத்தி வழிபட வேண்டும் என்று புனித நூல்கள் எடுத்துரைத்துள்ளன.
முதல் கால பூஜை, படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மதேவர் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. இதில் பஞ்சகவ்யம் (பசும்பால், தயிர், நெய், கோமியம், கோசாணம்) கொண்டுசிவபெருமானுக்கு ரிக் வேத பாராயணத்துடன் அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானுக்கு மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்து, சிறப்பு அலங்காரம் நடைபெறும். தாமரை மலர்களால் அர்ச்சனை, பாசிப்பருப்பு பொங்கல் நிவேதனம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், பிறவி கர்மாவில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் கால பூஜை, காத்தல் தொழிலைச் செய்யும் திருமால், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. இதில், யஜூர்வேத பாராயணத்துடன் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும். சிவபெருமானுக்கு சந்தனக் காப்பு சாற்றி, வெண்பட்டு ஆடை அணிவித்து, சிறப்பு அலங்காரம் நடைபெறும். பாயாசம் நிவேதனம் செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து செல்வங்களும் சேரும்.
மூன்றாம் கால பூஜை சக்தி வடிவமான அம்பாள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. சாமவேத பாராயணத்துடன் சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும். சிவபெருமானுக்கு சிவப்பு ஆடை அணிவித்து, பச்சைக் கற்பூரம் மற்றும் வில்வ இலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
எள் அன்னம் நிவேதனம் செய்து ஜாதிமல்லி பூக்களால் அர்ச்சனை செய்தால் எவ்வித தீய சக்திகளும் நம்மை அண்டாது. லிங்கோத்பவ காலம் என்று அழைக்கப்படும் இந்த நேரத்தில் சிவபெருமானின் அடிமுடியைக் காண பிரம்மதேவர் அன்னப் பறவை வடிவத்தில் மேலேயும், மகாவிஷ்ணு வராக வடிவத்தில் பாதாள உலகத்திலும் தேடினர். இந்த நேர வழிபாட்டால் அம்பிகையின் அருள் கிடைக்கும்.
நான்காம் கால பூஜை, முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், பூதகணங்கள், மனிதர்கள், பிற உயிரினங்கள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாக அமைந்துள்ளது. அதர்வண வேத பாராயணத்துடன் சிவபெருமானுக்கு கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்யப்படும்.
குங்குமப்பூ சாற்றி, நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறும். மேலும் தூப தீப ஆராதனைகளுடன் பூஜைகள் நிறைவுபெறும். இந்த மகா சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்து, சிவபெருமானை வழிபட்டால், அனைத்து செல்வங்களும் கிடைத்து, வாழ்வில் மகிழ்ச்சி அடையலாம்.