

தனித்தனித் தீவுகளாக மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்! கரங்களுக்குள் தவழும் தொழில்நுட்பம், இன்னும் மனித உறவுகளுக்கு இடையே விலகலை ஏற்படுத்தியிருக்கின்றது. இரத்த உறவுகளாக இருந்தாலும் நட்புறவுகளாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகளால் எழும் கர்வம் மனித உறவுகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்துகிறது.
அது தீராத போராய் மாறுகின்றது. உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. கர்வம் கொண்டவர்களை இறைவன் நேசிப்பதில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதிலும் கருத்து இணக்கத்திலும் உறவுகள் பலப்படும். அதற்கு பரந்த உள்ளம் வேண்டும்.
ஏகஇறைவன் எனும் ஒருகுடையின்கீழ் இருக்கும் நம்பிக்கையாளருக்குள் ஏற்றத்தாழ்வு எதற்கு? முதலில் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. எதிரில் இருப்பவர் சொல்லாவிட்டாலும் நாம் முதலில் முகமன் கூறுவதில் எத்தகைய இழுக்கும் இல்லை. அதுதான் உறவுகளைப் பேணுவதன் தொடக்கப்புள்ளி!
நபி எதைக் கற்றுக்கொடுக்கிறார்? - இஸ்லாத்தை அரேபியாவைத் தாண்டி பரவச் செய்யும் பொருட்டு அண்ணல் நபி 300-க்கும் மேற்பட்ட நாடுகளின் மன்னர்களுக்கு தூது அனுப்பினார். மதீனாவில் இருந்து அத்தூதுகள் மன்னர்களைச் சென்றடைந்தன.
ரோமானியப் பேரரசர் ஹெராக்ளியஸுக்கும் பாரசீக மன்னன் குஸ்ரூவுக்கும் எகிப்து அரசர் முகாகிஸுக்கும் இறைத்தூதர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அத்தகைய அழைப்பைச் சிலர் ஏற்றுக்கொண்டனர். சிலர் புறம் தள்ளினர். அதற்கான பலன்களையும் அவர்கள் அடைந்தனர்.
அந்தவகையில் ரோமானியப் பேரரசரான ஹெராக்ளியஸ், அண்ணலிடமிருந்து வந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்டு இஸ்லாத்தைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள அரேபியாவில் இருந்து வாணிப நிமித்தம் வந்த யாரேனும் இருந்தால் அரசவைக்கு அழைத்துவர உத்தரவிட்டார்.
பல போர்களில் அண்ணலுக்கு எதிராகப் போரிட்டு பிற்காலத்தில் உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றவர் குறைஷி குலத்தைச் சேர்ந்த அபூசுஃப்யான் இப்னு ஹர்ப். பெரும் வணிகரான இவர், ஹெராக்ளியஸின் அரசவைக்கு அழைத்து வரப்பட்டார். ஹெராக்ளியஸ் அண்ணலைப் பற்றி அறிந்துகொள்ள அவரிடம் பல கேள்விகளைக் கேட்டார்.
அண்ணல்நபி மக்களுக்கு போதிப்பது என்ன? என்று ரோமானியப் பேரரசர் கேட்டதற்கு, “தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகின்றார்” என்றுஅபூசுஃப்யான் பதிலளித்தார். இச்செய்தியை ஸஹீஹுல் புகாரி(5980) பதிவு செய்திருக்கிறது.
ஏகஇறைவனை வணங்குவதற்கு அடுத்து மனிதர்களுக்கிடையே உறவைப் பேணி வாழ்வதும் இன்றியமையாத நற்பண்பு என்று அண்ணல் குறிப்பிட்டிருக்கிறார். இதைக்கேட்ட ஹெராக்ளியஸ் எந்தவிதமான ஆதாயமும் இன்றி, எளிய மக்களும் பின்பற்றத்தக்க அறவுரைகளையே அண்ணல் பரப்பி வருவதாக புகழ்ந்துரைத்தார். இறுதித்தூதர் இவர்தான் எனவும் அப்பேரரசர் கருதினார்.
உறவுகளைத் துண்டித்துக் கொள்வோரை இறைவன் சபித்து விடுவான் என்கிறது திருமறை. “நீங்கள் பூமியில் குழப்பம் செய்து உறவுகளைத் துண்டித்து விடுவீர்கள். இத்தகையவர்களைத்தான் அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களைச் செவிடாக்கி அவர்களின் கண்களையும் குருடாக்கி விட்டான்” (திருக்குர்ஆன் 47:22,23).
உறவுகளைச் சேராமல் வாழ்வோரின் உலகம் குறுகியது. அடுத்தவர் கருத்தைச் செவியேற்காமல், நேசத்தைப் பெறாமல், நட்பு பாராட்டாமல் வாழ்வது அவர்களின் வாழ்க்கை ஊடாட்டத்தைச் சுருக்கி விடுகின்றது. உறவுகளை முறித்துக்கொள்வோர் கேட்கும் திறனும்பார்க்கும் திறனும் அற்றவர் என திருமறை கூறுவது இந்தப் பொருளில்தான். அத்தகைய சூழல் இன்று நிலவுவது நிதர்சனம்.
உறவை பேணுதல் வளம் தரும்: உறவுகளுடன் இசைந்து இருப்பது ஏகஇறைவனுக்கு அணுக்கமானது என்று கூறிய அண்ணலிடம் ஒருவர், சொர்க்கத்தில் தன்னைக் கொண்டு சேர்க்கும் நற்செயல் என்ன? என்று வினவினார். அதற்கு அண்ணல், ‘ஏகஇறைவனைத் தொழுது, தர்மம் கொடுத்து உறவைப் பேணி வாழ வேண்டும்; உறவுகளை முறித்துக் கொண்டு வாழ்பவர், சொர்க்கத்தில் நுழையமாட்டார்’ என்று பதிலளித்தார்.
இம்மையில் உறவு நலன் எதைப் பெற்றுத்தரும் என்பதற்கும் அண்ணல் பதிலளித்திருக்கிறார். “தமது வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தமது உறவைப் பேணி வாழட்டும்” மனதில் ஆணவம் இன்றி இருப்பவரிடம் நல்லுறவு பாராட்ட எல்லோரும் விரும்புவார்கள்.
குடும்பத்திலும் சமூகத்திலும் வணிகத்திலும் பணியிடங்களிலும் நல்லுறவைப் பேணுபவருக்கு நன்மதிப்பு உண்டாகும். அதுவே அவரது வாழ்வாதாரத்தைப் பெருக்கித்தரும்; விரிவாக்கும். மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். மகிழ்வான மனது கொண்டோரின் வாழ்நாள் அதிகரிக்கும். இது வாழ்வுக்கான எளிய சூத்திரம்.
உறவைப் பேணுவோரை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் மனிதர்கள் இருக்கிறார்கள்.இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாணநன்னயம் செய்து விடுங்கள் என்பதைப்போலதொடர்ந்து நல்லுறவைப் பேணி அவர்களைநாண வைத்து விடுங்கள் என்கிறார் மாநபி. தொடர்ந்து நன்மையே செய்ய வேண்டும். அதுவே மானுட இலக்கணம் என்பதை நித்தம் நினைவூட்டுகிறார் அண்ணல்.
(தொடரும்)
- bharathiannar@gmail.com