

மதம் என்பது கடவுள் வழிபாடு சார்ந்தது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்வியல் சட்டங்கள் தொடர்பான நடைமுறைகளை உள்ளடக்கியது. அத்தகைய நடைமுறைகளை பின்பற்றி நடப்பவர் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராகக் கருதப்படுவார். உலகின் எல்லாப்பகுதிகளிலும் பல்வேறு மதங்கள் முகிழ்த்திருக்கின்றன. அனைத்திற்கும் பண்பாடு உண்டு.
இவை அனைத்தையும் மதிப்பதே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். ஆதிகால மனிதனின் நிழல் முற்றிலும் மாறாத மக்கள் சமூகத்தில் பல ஒழுக்க நெறிகளை, பண்பாட்டை அவர்களுக்குக் கற்பிக்க வந்தது இஸ்லாம் எனும் நன்மார்க்கம். இன்றும் இஸ்லாம் நமக்குக் கற்றுக்கொடுப்பதில் மிகமுக்கியமானது நல்லிணக்கம் எனும் நற்பண்பு.
மாநபியின் மாண்பு: இஸ்லாமிய வரலாற்றில் மத நல்லிணக்கத்திற்குச் சான்றுகள் பல உள்ளன. அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுவது ஏமன் நாட்டின் நஜ்ரான் பகுதியில் இருந்து வந்த கிறித்துவப் பாதிரிகளுடன் அண்ணல் செய்து கொண்ட உடன்படிக்கை. மெக்காவில் இருந்து மதீனா வந்து சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாமியர் ஆட்சி முழுமையாக உருவாகியிருந்தது.
அப்போது, அரேபியாவில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர். சிறுபான்மையினரில் கிறித்துவர், யூதர் மற்றும் உருவ வழிபாடு செய்வோர் ஆகியோர் அடங்குவர். அவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அண்ணலைச் சார்ந்திருந்தது.
அந்த நேரத்தில், அண்ணலைச் சந்திக்க வந்திருந்த நஜ்ரான் பாதிரியார்கள், அண்ணல் மதீனாவில் கட்டிய பள்ளிவாசலான அல் மஸ்ஜித் அந்நபவியில் தங்கவைக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் அங்கு வழிபடவும் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, பரஸ்பரம் கிறித்துவ-இஸ்லாமிய மதக்கொள்கைகள் விவாதிக்கப்பட்டபோதும் கிறித்துவர்கள் தங்கள் மதக்கொள்கையில் வழுவாமல் இருந்தனர்.
இதன் பிறகும் தங்கள் பாதுகாப்பிற்காக அண்ணலிடம் குறிப்பிட்ட வரிசெலுத்தி அவர்கள் உடன்படிக்கை செய்துகொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட விதிகள் கொண்ட அந்த உடன்படிக்கையில் மிகமுக்கியமானது ஓர் இஸ்லாமியர் கிறித்துவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
ஓர் இஸ்லாமியர், “கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கவும் அவர்களின்கோயில்கள், மடாலயங்கள் குருமார்களின் இல்லங்கள் ஆகியவற்றைக் காப்பாற்றவும், தீங்குகளினின்றும் விடுவிக்கவும் கடமைப்பட்டுள்ளான்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் “எந்தக் கிறிஸ்தவனையும் அவனுடைய மதத்தைக் கைவிடுமாறு நிர்பந்திக்கக்கூடாது”, “பள்ளி வாசல் அல்லது முஸ்லிம்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக கிறிஸ்தவர் கோயில்களை இடித்துத் தகர்க்கக் கூடாது” என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.
இவைதவிர அவர்கள் மீது தேவையில்லாத வரிகளை விதிப்பதும் தடைசெய்யப்பட்டது. கூடுதலாக, கிறித்துவர்களின் கோயில்கள், மடாலயங்கள் ஆகியவற்றை மராமத்து செய்து கொடுக்கவும் இஸ்லாமியர் உதவவேண்டும் என்றும் விதி ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன் படிக்கையில் இன்னுமொரு சிறப்பம்சம் என்ன வென்றால், வேற்று நாடுகளில் உள்ள கிறித்துவருடன் போரிடும் நேரத்தில் தங்கள் நாடுகளில் வாழும் கிறித்துவர்கள் மீது வெறுப்புணர்ச்சி கொள்வது கூடாது எனவும் அண்ணல் நபியால் இஸ்லாமியருக்கு அறிவுரை கூறப்பட்டது. இதை விட மதநல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டை உலக வரலாற்றில் கூறிவிட முடியாது என அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இஸ்லாமியர் திருமணம் செய்துகொண்ட கிறித்துவப் பெண்ணை மதம் மாறும்படி வற்புறுத்தக்கூடாது எனவும் அண்ணல் அந்த உடன்படிக்கையில் விதியை உருவாக்கியிருந்தார். மதநல்லிணக்கத்தை விரும்பும் எவரும் இவற்றை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.இதேபோன்ற பல ஒப்பந்தங்கள் அண்ணலால் உருவாக்கப்பட்டன.
அவை எல்லாம் அடிப்படை மனிதஉரிமைக்கு மதிப்பளிக்கும் விதமாக இருந்தன. யூதரின் இறுதி ஊர்வலம் கடந்து சென்றபோது எழுந்துநின்று மரியாதை செய்தவர் அண்ணல். இத்தகைய பண்பினால் தான் அவர் மாநபி என அழைக்கப்படுகிறார்.
மதநல்லிணக்கம்: ஏகஇறைவன் சொல்கிறான், “இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். எனவே விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும்; விரும்பியவர் நிராகரிக்கட்டும்” (திருக்குர்ஆன்18:29). ஏக இறைக்கொள்கை மக்களிடம் கட்டாயமாக்கப் படவில்லை; எடுத்துரைக்கப்பட்டது. இறைவன் எண்ணியிருந்தால் இக்கொள்கையை மக்கள் அனைவரையும் தழுவச்செய்திருக்கலாம்.
ஆனால் இறைவனே மிகப்பெரிய ஜனநாயக வாதியாக இருக்கிறான். நிர்பந்திப்பது இஸ்லாத்தில் இல்லை என்ற பொருளில் திருக்குர்ஆனில் பல வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. “மார்க்க விஷயத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை” (திருக்குர்ஆன் 2:256). இன்னும் மேலதிகமாக இறைவன் அண்ணல் வழியே, “உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்” (திருக்குர்ஆன் 109:6) என்ற நல்லிணக்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறான்.
அனைத்து மனிதர்களையும் நேர்வழிக்கும் சத்தியத்தின்வழிக்கும் வழிகாட்டும் பொதுவான மார்க்கம் இஸ்லாம். அண்ணல் அதன் திருத்தூதர். இதில் நம்பிக்கைகொண்டோர் பங்கேற்கலாம். இதில் கட்டாயம் இல்லை. இதுவே இஸ்லாம் நாடும் நல்லிணக்கம்.
(தொடரும்)
- bharathiannar@gmail.com