

அப்பர் சுவாமிகள் தன் கையில் ஆயுதம் போல் ஒன்று வைத்திருப்பார், எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் சுத்தம் செய்வதே அவருடைய முதன்மையான பணி. `என் கடன் பணி செய்து கிடப்பதே' என அவர் கூறியது நம்மில் பலருக்கும் நினைவிருக்கும்.
கோயிலில் உழவாரப்பணி செய்வதும் சனி பகவானின் ஆதிக்கமே. முடிந்தவரை கோயில்களில் நடக்கும் உழவாரப்பணிக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். நீங்கள் அவர்களுக்கு என்ன நன்மை செய்கிறீர்களோ, அதற்கு பத்து மடங்கு சனிபகவான் உங்களுக்குத் திருப்பி நன்மை செய்துவிடுவார்.
சனி பகவானின் காரகத்துவம்: நம் அனைவரும் வீட்டிலும் தினசரி வந்து செல்லும் நபர் இந்த துப்புரவு தொழிலாளி. நாம் எதையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறோமோ அதையெல்லாம் நமது இடத்தில் இருந்து எடுத்துச் செல்லும் வேலையை தவறாமல் செய்பவர்கள்.
கெட்டுப்போன உணவுகள், அழுகிய காய்கறிகள், நாம் கையால்கூட தொட முடியாத அனைத்தையும் சேகரிப்பவர்கள் இவர்களே. காலையில் 6 மணிக்கு பணிக்கு வந்து மதியம் வரை ஓய்வில்லாமல் உழைக்கும் இவர்களைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கி றோமா?
`என்ன தொழில் செய்ய வேண்டும்?' என்பதை சனி கிரகமே தீர்மானிக்கிறது. அந்த தொழில் மேலும் எப்படி வளர வேண்டும் என்பதை மற்ற கிரகங்கள் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு தொழிலுக்கும் அதிபதியான கிரகம் நம்மை அந்தத் தொழிலில் ஈடுபடவைக்கிறது. அதன்படி துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரும் சனிபகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள். துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் சனி பகவானுக்கும் இடையேயான தொடர்பு என்ன? இதில் நம் பங்கு என்ன?
சனி பகவானே சுத்தம் செய்யும் வேலையைச் சரியாக செய்கிறார். சனிபகவான் சரியாக இயங்கும் பொழுது, அந்தத் தொழில் வளர்ச்சி பெறுகிறது. ஜாதகத்தில் சனி பகவான் சரியாக இல்லாதபோது அல்லது கோச்சாரத்தில் சனிபகவான் சரியான அமைப்பில் இல்லாத போது, தொழில் ரீதியாக நம்மை தோல்வியைச் சந்திக்க வைக்கிறார்.
உலகில் 90 சதவீதத்தினர் விருப்பப்பட்டு ஒரு தொழிலைச் செய்வது இல்லை. சூழ்நிலையின் நிர்பந்தந்தாலேயே ஒரு தொழிலைச் செய்கின்றனர். அதேபோலத்தான், துப்புரவுத் தொழிலாளர்களும் விருப்பப்பட்டு இந்த வேலைக்குள் வருவதில்லை.
சூழ்நிலையின் நிர்பந்தம், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாகவே இந்தத் தொழிலைச் செய்கிறார்கள். அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் குடும்பம், தனி மனித மரியாதை, கௌரவம் அனைத்தும் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும்.
காலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் வீட்டில் செய்து விட்டு, தனக்கும் உணவு எடுத்துக்கொண்டு, உங்கள் வீடுகளைத் தேடி குப்பைகளை வாங்கிச் செல்ல வருகிறார்கள். இவர்களிடம் சற்று முக மலர்ச்சியுடன் குப்பைகளைக் கொடுங்கள். மரியாதையுடன் நடத்துங்கள்.
பிரதமரின் வழியில்... நமது பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் நமக்குத் தெரியும். வாராணசி தொகுதியில் கழிப்பறை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, பிரதமர்பாதப் பூஜை செய்ததை நாம் பார்த்தோம். இவர்களை தயவு செய்து தரம் தாழ்த்தி நடத்தாதீர்கள். ஏனென்றால், இவர்கள் அனைவரும் சனி பகவானின் காரகத்துவத்தை உடையவர்கள்.
சனி பகவான், பொதுமக்கள் தொடர்பு, அரசியல், கர்ம காரகன், நீதிமான், தர்ம தேவதை, கால புருஷ தத்துவப்படி பத்தாம் இடத்துக்கு அதிபதி, ஒருவர் தன் தொழிலில் மேலும் மேலும் வெற்றி பெறவும், அரசியலில் தொடர்ந்து வெற்றிப் பயணமாக பயணிக்கவும், கர்மாவில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும், முன்னோர் செய்த தவறுகளுக்கு தண்டனையிலிருந்து விலக்குபெறவும், நல்ல தொடர்பு வைத்துக்கொள்ள வும் சனி கிரகமே வேலை செய்கிறது.
தொழில் என்றால் அது சனியே. தொழிலில் இறங்கு முகமாக இருக்கிறோம் என உங்களுக்கு தோன்றினால் தொடர்ந்து நமக்கு தொழிலில் லாபமே இல்லாத நிலை இருந்தால், ஏதாவது ஒரு கட்டத்தில் நீங்கள் துப்புரவுத் தொழிலாளர்களை மனம் புண்படும்படி நடத்தியிருப்பீர்கள்.
ஒருவேளை மேற்கண்ட பிரச்சினைகளில் நீங்கள் இருந்தால், ஒருமுறை துப்புரவு தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை அல்லது அமாவாசை அன்று உணவு, உடை, தண்ணீருடன் சேர்த்து கொடுத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதை நீங்கள் உணரலாம்.
சனி பகவானுக்குச் செய்யும் பரிகாரம் சனிபகவானின் ஆதிக்கம் இல்லாத ஒருவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கவே முடியாது. தொடர்ந்து, மூன்று மாதம் இவர்களுக்கு உணவு, உடை, தண்ணீருடன் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களின் முன்னேற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ, துப்புரவுத் தொழிலாளர்களை துன்புறுத்தி இருந்தால், மனம் புண்படும்படி நடந்திருந்தால், தயவு செய்து அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். ஏனென்றால், அவர்கள் உங்களை எதுவும் தண்டிக்கப் போவதில்லை. ஆனால், சனிபகவான் உங்களை தண்டிப்பார்.
என்னுடைய ஜோதிட அனுபவத்தைக் கொண்டு ஆலோசனை கொடுத்ததில், பல தொழில்துறையினர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உணவு, உடை, நீர் கொடுத்து, பிரச்சினைகளிலிருந்து மீ்ண்டிருக்கின்றனர். அன்பாக துப்புரவுத் தொழிலாளிகளிடம் இரண்டு நிமிடம் பேசுங்கள்.
அந்த நாள் நிச்சயம் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றம் தரும். பலர் துப்புரவுத் தொழிலாளர்களுக்காக நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள், அவர்களுக்கு எம்பெருமான் சொக்கநாதன் அருள்புரிய வேண்டும் என வேண்டிக் கொள்வோம்.
முடிந்தவரை நம் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்போம். துப்புரவுத் தொழிலாளர் களை, தூய்மைப் பணியாளர்களை, கோயில்களில் உழவாரப் பணி செய்யும் சிவனடியார்களைப் போற்றிப் பாதுகாத்து, சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.