

கோடைக்காலம் தொடங்கி விட்டது. மாமரங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கிவிட்டன. இன்னும் சில நாட்களில் மாங்காய்கள் கொத்துக்கொத்தாகக் காய்த்துக் கொட்டும். எங்கு மாமரங்களைக் கண்டாலும் ஒரு மாங்காயையாவது அடித்து ருசிக்கும் ஆர்வம் நம்மில் சிலருக்கு ஏற்படும். திருட்டு மாங்காய்க்கு சுவை அதிகம் என்ற சொலவடைக்குப் பழக்கப்பட்டவர் பொதுவாகக் குறும்புத்தனமாக இதை செய்வார்கள். அப்படிப் பறித்த மாங்காய் கையில் கிடைத்தவுடன் அவர்கள் முகத்தில் தொற்றிக்கொள்ளும் பரவசத்திற்கு அளவிருக்காது. பலர் பக்குவப்பட்ட மனநிலையில் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் ஒதுங்கிச் செல்வார்கள். மரத்தில் காய்க்கும் கனியில் தொடங்கி ஒரு தனிமனிதனின் உடைமைவரை அனுமதியின்றி நுகர்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.
ஒருமுறை, அண்ணல் நபியின் பேரன்கள் ஹசைன் ஹுசைன் குழந்தைகளாக இருந்தபோது, சாப்பிட ஏதும் கிடைக்காத வேளையில், சோர்ந்துபோய் ஒரு பேரீட்சம் மரத்தின் நிழலில் படுத்து உறங்கி விட்டார்கள். அதுவழியாக வந்த அண்ணல் அவர்களை எழுப்பிக் கேட்டு விஷயத்தை அறிந்து கொண்டார். ஹசைனும் ஹுசைனும் படுத்திருந்த பேரீட்சம் மரத்தடியில் பேரீட்சைப் பழங்கள் பழுத்து விழுந்து கிடந்தனவாம். அதை எடுத்து பசிக்கு சாப்பிட்டு இருக்கலாமே? என அண்ணல் வினவியபோது, பேரன்கள் இருவரும், ‘இந்த மரம் நமக்குச் சொந்தமானது அல்லவே! அவ்வாறு உண்டால் அது ஹராம்’ என்றார்களாம். இந்த பதிலைக் கேட்டதும் அண்ணல் நபி மனம் நெகிழ்ந்தார்.
செல்வங்கள் எத்தனை ஈட்டியபோதும், அன்பளிப்பாக வந்தபோதும் அண்ணலும்சரி, அண்ணலின் மனைவி, மகள்களும் சரி அவற்றை ஏழை இஸ்லாமியர்களுக்கு பகிர்ந்து அளித்து விடுவதுதான் வழக்கம். அன்னை ஆயிஷா சொல்கிறார், “முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை” (ஸஹீஹுல் புகாரி, 5416)
தமது மனைவியருள் யார் நீண்ட கைகளை உடையவரோ அவரே எனது மறுமை நாளில் என்னை முதலில் சந்திப்பார்கள் என்று அண்ணல் கூறினார். நீண்ட கைகள் என்று அவர் குறிப்பிட்டது வள்ளல்தன்மையைத்தான். அவ்வாறு வாழ்ந்தவர், அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ். இவ்வாறு கொடைத்தன்மையால் வறுமையை ஏற்று வாழ்ந்த அண்ணலின் குடும்பம் ஒழுக்க நெறியில் மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.
பசியால் அண்ணல் வாடியபோதும் தோழர்கள் கொடுக்கும் ஆட்டுப்பாலை அருந்துவதற்கு முன்னர், ‘ஆட்டின் உரிமையாளரின் அனுமதியோடுதானே பால் பெறப்பட்டது’ என விசாரித்துக்கொள்வார். ஆம், என்றால்தான் அருந்துவார்.
திருமறையின் தீர்ப்பு: ஒரு மனிதன் காலையில் கண்விழித்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லுதல் வரை வாழ்க்கையின் வழிகாட்டும் கையேடாக திருமறை விளங்குகிறது. அந்தவகையில், யாருமற்ற அநாதைகளாக இருப்பவர்களிடமும் நிச்சயமாக நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிறது திருக்குர்ஆன். அநாதைகளின் உடைமைகளை உண்ணாமல் உரியமுறையில் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிறது. “அநாதைகளின் செல்வங்களை அநியாயமாக உண்பவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக்கொள்கிறார்கள்” (திருக்குர்ஆன் 4:10) என்று சொல்லும் இறைவன், இன்னும் ஒரு கவித்துவமான, எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவத்தை மக்களுக்குக் கொடுத்துள்ளான். “தாங்கள் இறந்தால் ‘தங்கள் பலவீனமான குழந்தைகளின் நிலைமை என்னவாகும்?’ என்று அஞ்சுபவர்களைப்போல் அவர்கள் அநாதைகளின் விஷயத்தில் அஞ்சிக்கொள்ளட்டும்” (திருக்குர்ஆன் 4:9) குழந்தைகளை நிர்கதியாக விட்டுவிடுவது துயரத்திலும் துயர்மிக்கது. அத்தகைய நினைவே உறக்கத்தைக் கலைக்கும் துர்கனவு. அப்படிப்பட்ட துயரத்தைக் கொடுக்கக்கூடியது, அடுத்தவரின் பொருளை அதுவும் அநாதைகளின் பொருளை நுகர்வதாகும். மக்களின் மனதில் நுட்பமாக ஊடாடும் எண்ணத்தை இறைவன் அப்பட்டமாக வெளிப்படுத்துவது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்.
சொத்து விஷயத்தில் நீதிமன்றங்களின் துணையுடனோ அல்லது பேச்சுத்திறமையாலோ ஒருவர் தனக்கு அனுமதிக்கப் பட்டதைவிட அதிகமாக எடுத்துக் கொண்டால் அது ஹராம் ஆகும். எனவே, “அடுத்தவர்களுடைய பொருள்களில் ஒருபகுதியை பாவமான முறையில் தின்பதற்காக அறிந்துகொண்டே அதிகாரிகளை அணுகாதீர்கள்” (திருக்குர்ஆன் 2:188) என்று திருமறை தீர்ப்பு சொல்கிறது.
மேலும் ஒருவரால் உவந்து கொடுக்கப்படும் பொருளை உண்ணலாம். அது கொடுப்போருக்கு மறுமை நாளில் நன்மை பயக்கும். அதேபோல, ஜகாத் பெறுவதும் அன்பளிப்பு பெறுவதும் அனுமதிக்கப்பட்டதாகும். ஒருவருக்கு உடைமையில்லாத பொதுவான மரங்களில் இருந்துபறவைகளைப் போலக் கொஞ்சம் கனிகளைப் புசிப்பதும் அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்வது என்று திருமறை சொல்வதெல்லாம் அறத்தோடு வாழ்வதே ஆகும்.
(தொடரும்)