

விஸ்வ விஷ்ணு சஹஸ்ரநாம சம்ஸ்தான் (விஸ்வாஸ்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், 65 நாடுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உலகின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியில் இயங்கி வரும் ‘விஸ்வாஸ்’ உலகம் முழுவதும் 3 நிலைகளில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை மாதம்தோறும் பல்வேறு குழுக்களுக்கு, கற்பிக்கிறது. சரியான உச்சரிப்பு, அனைத்து நாமங்களின் அர்த்தம், அனைத்து நாமங்களின் ஆராய்ச்சி நோக்கு என 3 பிரிவுகளாக பயிலும் நிலை அமைந்துள்ளது.
குழந்தைகள் நமது வருங்கால சந்ததியாக இருப்பதால், ஒரு பெரிய மாற்றத்துக்காக இந்த மகா மந்திரத்தை கற்றுக் கொடுப்பதில், கவனம் செலுத்துவதையும், பக்தர்களை 21 நாட்களில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை திறம்பட உச்சரிக்க கற்றுக் கொடுத்து சத்சங்கங்களை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் 65 நாடுகளில் 2,000-க்கும் மேற்பட்ட சத்சங்கங்கள் உள்ளன. இவற்றில் விஸ்வாஸ் மாணவர்கள் உலக அமைதிக்காக விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடுவதற்கு ஒன்று கூடுகிறார்கள். விஸ்வாஸ் ‘நித்தியம்’ என்ற ஆன்லைன் சாண்டிங் சேனல் நடத்துகிறது. இதில் விஸ்வாஸ் உறுப்பினர்கள் ஆண்டு முழுவதும் ஆன்லைனில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடுகிறார்கள்.
விஸ்வாஸ் சஹஸ்ரநாம முகாம்களையும் நடத்துகிறது. இதில் மாணவர் பக்தர்கள் 7 நாட்களில் திறமையுடன் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாட கற்றுக் கொள்கிறார்கள். அயோத்தியில் ஸ்ரீராம் மந்திர் திறப்பு விழாவைக் கொண் டாட, விஸ்வாஸ் உலகம் முழுவதிலும் உள்ள விஸ்வாஸ் பக்தர்கள் 100 கோடி விஷ்ணு நாமங்களை உச்சரித்தனர்.
விஸ்வாஸ் பீஷ்மாஷ்டமியை ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சர்வதேச தினமாகக் கொண்டாடுகிறது. இந்த தினத்தில் விஸ்வாஸ் பக்தர்கள் 106 திவ்யதேசங்கள், அனைத்து திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களிலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் 3 ஆவர்த்திகளை (3 முறை) பாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பீஷ்மாஷ்டமி தினத்தில் விஸ்வாஸ் பக்தர்கள் ஆன்லைனில் தங்கள் சத்சங்க இணைப்புகளில் ஸ்ரீ விஷ்ணு சஹ்ஸ்ரநாமத்தைப் பாடி இந்த நாளைக் கொண்டாடினர்.
பீஷ்ம பிதாமகர் பாண்டவர்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முன்னிலையில் விஷ்ணுவின் 1,000 புனித நாமங்களை (விஷ்ணு சஹஸ்ரநாமம்) வழங்கிய புனித ஸ்தலமான ஹரியாணாவின் குருக்ஷேத்திரத்தில், விஸ்வாஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் டி.ஜே.ஸ்ரீதரன் மற்றும் விஸ்வாஸ் பக்தர்களுடன் சேர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் 3 ஆவர்த்திகளை பீஷ்ம பிதாமகருக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடினர்.
இந்த நிறுவனத்தைப் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு www.visvasvsn.org என்ற இணையதளத்திலும், 9790925804 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
- சுந்தரேஷ்