

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட 108 திவ்ய தேசங்களில் 63-வது திவ்ய தேசமாக போற்றப்படும் திருக்கடல் மல்லை ஸ்தலசயனப் பெருமாள் கோயில் 14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசனால் கட்டி முடிக்கப்பட்டது. துன்பங்கள் போக்கும் திருத்தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.
பற்றுடை அடியவர்க்கு எளியவன் பரந்தாமன். பக்தியுடன் தன்னலமின்றி தொண்டு செய்யும் அடியவர்க்கு எளிதில் அடையும்படி இருப்பவராக பரமாத்மா இருக்கிறார். புண்டரீக மகரிஷி என்னும் மாமுனிக்கு தான் பள்ளி கொண்டிருந்த பாற்கடலை விட்டு இறங்கி வந்து அருள் தந்த அற்புதன் திருமால். ஆதிசேஷன் மீது கிடந்து இருந்தவன் தன் அடியவர்க்கு அருள கடற்கரையில் தரையில் படுத்து அருளிய அற்புதமே ‘மல்லாபுரி மஹாத்மியம்’. மல்லாபுரி என்றும், திருக்கடல் மல்லை என்றும், மகாபலிபுரம் என்றும் அழைக்கப் படும் திருத்தலம் தற்போதைய மாமல்லபுரம்.
பல்லவர்களின் துறைமுகமாய் விளங்கிய திருத்தலம். பல்லவர்களின் சிற்பங்களை காண தென்னாட்டவர் மட்டுமின்றி, வடநாட்டவர், வெளிநாட்டவர் என பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வருகை புரியும் வராக ஷேத்திரம் மாமல்லை என்னும் மாமல்லபுரம். பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாவதாக அவதரித்த பூதத்தாழ்வாரின் அவதார ஸ்தலம். இந்த அவதார ஸ்தலம் தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சம்ப்ரோக்ஷணம் கண்டுள்ளது. நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கும் பரிகார ஸ்தலமாக இத்தலம் விளங்குகிறது.
உற்சவர் : உலகுய்ய நின்றான்.
தாயார் : நிலமங்கைத்தாயார்.
ஸ்தலம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நிகராக திருமங்கையாழ்வார் இத்தலத்து நாயகியை, ‘ஏனத்தினுருவாகி நிலமங்கை எழில்கொண்டான்’ என தன் திருமொழியில் பாடி மகிழ்ந்தார். ‘தமருள்ளம் மாமல்லை’ என பூதத்தாழ்வார் பாடிய பெருமை பெற்ற தலம்.
தமர்கள் என்றால் அடியவர்கள் என்று பொருள். அப்படி தன்னை தரிசிக்க விருப்பமுடன் வாருங்கள் என்று தன்னுடைய நான்கு திருக்கரங்களில் இடது கையை தூக்கி அடியவர்களை அழைத்தவாறு கிடந்த கோலத்தில் கருவறையில் அருள்பாலிக்கிறார் ஸ்தலசயனப் பெருமாள். நவம்பர் மாதம் 2021-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு அனைத்து சந்நிதிகள், கொடி மரம், பூதத்தாழ்வார் அவதரித்த இடம் ஆகியற்றில் சுமார் ரூ.3.5 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து மஹாசம்ப்ரோஷணம் என்னும் திருக்குடமுழுக்கு விழா கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற்று தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஒரு மண்டலத்துக்குள் சுவாமி தரிசனம் செய்தால், கும்பாபிஷேகத்தை தரிசித்த பலனைத் தரும்.
புண்டரீக மாமுனிகள் பக்தி மேலீட்டால் பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனைக் காண மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து கடல் நீரைத் தன் கைகளால் இரைக்க ஆரம்பித்தார். பக்தனின் துயர் தீர்க்க பாற்கடல் வாசனே எளிய கோலத்தில் முதியவராக வந்து கடல் நீரை தன் கைகளால் இரைத்து அருள் புரிந்தார். பகவானின் திருக்கைகள் பட்ட தீர்த்தம் என்பதால் இதற்கு ‘அர்த்த சேது’ என்று பெயர் ஏற்பட்டது. ராமபிரானுக்கு சேது புண்ணிய தீர்த்தம் என்பது போல் இந்த மாமல்லை கடற்கரையும் ஸ்தலசயனப் பெருமாளின் திருக் கைகள் பட்டு புண்ணிய தீர்த்தம் ஆனது. அதனால் இந்த கடற்கரையில் எந்த காலத்திலும், எந்த நேரத்திலும் நீராடி புண்ணியம் பெறலாம். அதுவும் மாசி மகம் பௌர்ணமி நாளில் பெருமாளுடன் நீராடுவது எத்தனை பெருமைக்குரியது?
‘சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லை’ என போற்றப்பட்ட தலம் இது. புண்டரீக மகரிஷி, ஸ்தலசயனப் பெருமாள் , பூதத்தாழ்வார் ஆகிய மூன்று முத்துக்கள் வந்து சேர்ந்த தொண்டை நாட்டு திவ்ய தேசம் திருக்கடல் மல்லை. அடியவர் பெருமை பேசும் திருத்தலத்தில் அடியவர்களுக்காக வரும் மாசி மாத மக நட்சத்திரத்தில் பௌர்ணமி தினத்தில் காலை கருட வாகனத்தில் ஸ்தலசயனப் பெருமாளும், ஞானப் பிரானும், பெருந்தமிழன் பூதத்தாழ்வாருடன் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. நாமும் கடல்மல்லை கடற்கரையில் மாசி மகத்தன்று காலை புனித நீராடி, கருட வாகனத்தில் இறைவனை தரிசித்து எங்கும் திருவருள் பெற்று இன்புற்று வாழ்வோம்.
நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். நிலத்துக்கு அதிபதி நவக்கிரகங்கள் ஒருவரான செவ்வாய். எனவே செவ்வாய்கிழமை இந்த தலத்துக்கு வந்து ஒன்பது வெண் தாமரை மலர்களால் தாயாரை நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் பிரச்சினைகள் எளிதாகத் தீரும்.
டி.ஏ.கே.ஸ்தலசயனம் | perunthamizhan@yahoo.co.in