

இஸ்ரவேல் நாட்டில் உள்ள பெத்லகேமில் யேசு பிறந்த பொழுது, அப்பகுதியை ஏரோது என்னும் அரசன் ஆண்டு வந்தான். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்“ என்றார்கள்.
ஞானிகள் யேசுவை யூதருடைய ராஜா என்று நினைத்ததால் அவர் ராஜாவின் அரண்மனையில் தான் பிறந்திருப்பார் என்று நினைத்து, அவர்கள் எருசலேமில் இருந்த ராஜ அரண்மனைக்கு வந்து விசாரித்தார்கள். அவர் யூதரின் ராஜா என்று ஞானிகள் சொல்லக் கேட்டதும், தன் பதவிக்கும் குடும்பத்திற்கும் ஆபத்து நேரிடுமோ என்று ஏரோது அரசன் பயந்தான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.
அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியாவாகிய யேசு எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்”.
ஏனெனில், “யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை: ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரவேலை ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்” என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும்தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.
மேலும் அவர்களிடம். “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்தஇடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அவர்கள் வீட்டிற்குள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியாள் வைத்திருப்பதைக் கண்டார்கள். முகங்குப்புற விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பொக்கிஷபெட்டியை திறந்து விலையுயர்ந்த பொன்னையும், சாம்பிராணியையும் வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
பிறகு ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்“ என்றார்.
யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார்.
ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். ஆனாலும் அப்பொழுது யேசு எகிப்தில் இருந்ததால், அவர் கொல்லப்படவில்லை!
ஏரோது இறந்ததும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்“ என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.
- merchikannan@gmail.com