பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்
Updated on
3 min read

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் கொடைக்கானலுக்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் பூம்பாறை என்னும் மலைக்கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள குழந்தை வேலப்பர் கோயில் நோய் தீர்க்கும் தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் பழநி தேவஸ்தானத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

பூம்பாறை ஊரின் நடுவில் குழந்தை வேலப்பர் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயில் பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இத்தலத்தின் தலமரம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சியாகும்.

பூம்பாறை கோயிலின் கருவறையின் நேர் எதிரே பிரகாரத்தில் மயில், பலிபீடம், கொடிமரம், விளக்குத்தூண் ஆகியன அமைந்துள்ளன. கருவறையின் வடக்கில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சந்நிதி கருவறையின் சமகாலத்ததாகும்.

இந்த மையக் கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் விநாயகர், பைரவர், நவகிரகங்கள், இடும்பன், நாகர், அருணகிரிநாதர், மள்ளர், பத்ரகாளியம்மன் ஆகியோருக்கு சந்நிதிகள் தற்காலத்தில் எழுப்பப்பட்டுள்ளன. கருவறை முன்புறம் இடைநாழிகையின் வெளிப்புறச் சுவரில் சிவகாமி சமேத நடராஜர், பிரம்மா ஆகியோர் நிறுவப்பட்டுள்ளனர்.

இக்கோயிலின் மையப்பகுதி கருவறை,இடைநாழிகை, மகாமண்டபம், முகமண்டபம்ஆகியவற்றை ஒரே நேர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டு அமைந்துள்ளது. கருங்கல் கருவறை மீது சுதையாலான ஏகதள விமானம் நாற்கர வடிவிலான சிகரத்துடன் (நாகரம்) உலோகக் கலசத்தை உச்சியில் கொண்டுள்ளது.

விமானக் கோஷ்டங்களை முருகனின் பல்வேறு திருவுருவங்கள், விமானத்தாங்கிகள், பக்தர்கள், முருகனின் மயில் வாகனம் ஆகியன அலங்கரிக்கின்றன. கூரைப்பகுதியில் உத்தரம், வாஜனம், கூடுகளுடன் கூடிய கபோதம் காணப்படுகிறது. சுவர்ப் பகுதியில் அரைத்தூண்களும், சிற்பங்களும், கோஷ்டங்களும் காணப்படுகின்றன.

மூலவர் குழந்தை வேலப்பர்: பதிணென் சித்தர்களுள் போகர் (பொ.ஆ. 1550-1650) வடிவமைத்த குழந்தை வேலப்பர் சிற்பம் இக்கோயில் கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ளது. இச்சிற்பம் நவபாஷாணத்தாலானது என்பதை போகரின் சீடரான புலிப்பாணி சரிதத்தின் மூலம் அறியலாம்.

நவபாஷாணங்களை மற்றைய பொருட்களுடன் பக்குவமாகச் சித்த முறைப்படி கலந்து புடம் போட்டு கட்டிய கலவையை அச்சிலிட்டு (மூப்பிலிட்டு) சிற்பமாக வடிவமைத்தார். எனவே இச்சிற்பம் குருமுப்பு என அழைக்கப்படுகிறது. இது சித்தர்களின் மரபு அறிவியலாகும். இது ரசவாத வித்தை என்றும் கூறப்படுகிறது.

பக்தர்களின் தோஷங்களை ஈர்த்துக் கொண்டு குளிர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உப்புக்கட்டு முறையில் அமைந்துள்ளது. மூலவர் மீது அபிஷேகம் செய்யப்படும் தேன், சந்தனம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.

நவபாஷாணம்: நவபாஷாணம் என்பது பூமிக்கடியிலும் மலைகளிலும் கிடைக்கக்கூடிய கனிம தாதுக்களாகும். இவை இயற்கைப் பாஷாணம் அல்லது பிறவிப் பாஷாணம் என அழைக்கப்படும். இவை இயற்கையில் மிக அரிதாகக் கிடைத்தமையால் செயற்கை முறையில் பாஷாணங்கள் தயாரிக்கப்பட்டன. அவை வைப்புப் பாஷாணங்கள் எனப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தாவர இனங்கள் நிறைந்த காடுகள் வெந்து கருகிப் பின் பாறைகளாக மாறின. இப்பாறைகளில் கருமை நிறத்திலான கார்பன் என்னும் அஞ்சனக் கற்கள் தோன்றின. அவை கரி, வைரம், கிராபைட், கார்பன் பிளாக், மைக்கல், மைக்கா, அப்பிரகம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இவை கருமை நிறமும் பாதரசக் கட்டும் கொண்டு மினுமினுப்பாக இருக்கும். இவை பிறவிப் பாஷாண வகைகளுள் அடங்கும். இக்கற்கள் படல்படலாக ஒளியுடனும், வளையத்தக்கதாகவும், மிருதுவாகவும், உடலை குளிரச் செய்யும் ஆற்றலுடையது. கண், புருவங்களில் பூசும் மை தயாரிக்க அஞ்சனக்கல் பயன்படுத்தப்படுகிறது.

திலகமாக நெற்றியில் இடும்பொழுது மூன்றாம் கண் – அறிவுக்கண் திறக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இதனாலே அஞ்சனக்கல் உள்ள இடம் மானிடப் பிறப்பு உண்டாக்கும் இடம் எனக் கூறப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான், கேரளா குருவாயூரப்பர், பழநி தண்டாயுதபாணி, பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆகியோர் அஞ்சனக்கற்களால் (நவபாஷாணம்) உருவானவர்களாவர். இத்தகைய அஞ்சனக்கற்களால் உருவான மூலவர் சிற்பங்கள் வானத்து சமநிலையை, தெய்வசக்தியை பூமிக்குப் பெற்றுத்தரும்.

போகர் அஞ்சனக்கல்லைத் தேடி கொடைக்கானல் பகுதிக்கு வந்தபோது பூம்பாறையிலிருப்பதை அறிந்து அங்கேயே தங்கி மூலவரை அஞ்சனக்கல்லால் உருவாக்கி வழிபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கருவறையின் நடுவில் மூலவர் முருகன் நின்றநிலையில் பாலகனாய் எழுந்தருளியுள்ளார். கல்வெட்டில் மூலவர் திருக்கை வேலப்பர் என அழைக்கப்பட்டுள்ளார்.

பூம்பாறை வேலப்பர், பழநி தண்டாயுதபாணி உருவில் இரு கைகளுடன் வலது கையில் தண்டத்தை பிடித்துக்கொண்டு, இடது கையை தொடையின் முன்புறம் கடியவலம்பித முத்திரையில் அமைத்து நின்ற கோலத்திலுள்ளார். பூம்பாறை முருகன் சமபாதத்திலும், பழநி தண்டாயுதபாணி திரிபங்க நிலையிலும் காணப்படுகின்றனர்.

பூம்பாறை முருகன் சதைப்பற்றுடன் அச்சுப் படிமமாக உள்ளூர் பாணியிலும், பழநி முருகன் சிற்ப சாத்திரப்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளனர். குழந்தை வேலப்பர் இளமையான தோற்றத்தில் ஆண்டிக் கோலத்தில் ருத்ராட்சமாலை தரித்த மொட்டைத் தலையுடன் இடையில் கௌபீனத்துடன் அருள்பாலிக்கிறார். தண்டாயுதபாணி சிற்பங்கள் சிற்பக்கலை வரலாற்றில் பிற்காலத்ததாகும் என்பதுகவனிக்கத்தக்கது. இச்சிற்பம் ஸ்ரீதத்துவ நீதி என்ற 19-ம் நூற்றாண்டு சிற்ப நூலில் வேலாயுத சுப்ரமண்யர் என அழைக்கப்படுகிறார்.

குழந்தை வேலப்பர் கோயிலின் பழமையான பகுதிகளான கருவறை மற்றும் சிவன்கோயில் சுவர் மகர தோரணம், கபோதகக் கூடு ஆகிய பகுதிகளில் சிற்பங்கள் காணப்படுகின்றன. தவத்தில் இருக்கும் முனிவர் மீது அம்பு எய்யும் வீரன், புலி வேட்டை ஆடும் காட்சி, மீன், ஆமை, முதலை, பலாமரத்திலுள்ள பலாக்கனியைச் சுவைக்கும் குரங்கு, மிருதங்கம், தப்பு ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள், மகாபாரதத்தில் காணப்படும் லிங்கத்தைப் பூஜை செய்யும் புருஷாமிருகம், மயில் உருவிலுள்ள வீணை வாசிக்கும் இசைக்கலைஞர், முனிவர், கர்ப்பிணி, நடனமங்கை, லிங்கத்தின் மீது பால் பொழியும் காராம்பசு, யாளி, கவரி வீசுபவர், விநாயகர், யானை, குதிரை மீது பாய்ந்து செல்லும் வீரர்கள், வாள் சண்டை, போர்க்களத்தில் யானை காட்டும் வீரம், நந்தி, பசு கன்று மேய்ப்பவர், பாலுருவச் சிற்பங்கள் என தெய்வ, புராண, இயற்கை, கற்பனைத் திருவுருவங்கள் மட்டுமின்றி மனித வாழ்வியலின் அன்றாட நிகழ்வுகளைச் சித்திரிக்கும் சிற்பங்கள் நாயக்கர் கலைப்பாணியில் அமைந்துள்ளன. மூலவர் கோயில் கோஷ்ட தோரணத்தில் கண்ணப்ப நாயனார் புராணச் சிற்பம் காணத்தக்கது.

குழந்தை வேலப்பர் கோயில் 15-ம் நூற்றாண்டுக்கு முன்பு முதல் சுமார் 500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட பழமையான கோயில். ஆண்டுதோறும் தை அல்லது மாசி மாதத்தில் பத்துநாள் உற்சவம், தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

- sheelaudaiachandran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in