

யேசு இந்த உலகத்தில் வாழ்ந்த போது தனது விண்ணக தந்தையின் நோக்கத்தை நிறைவேற்ற எந்த ஒரு பாவமும் செய்யாமல் வாழ்ந்தார். அதாவது, குற்றமற்ற தன்னுடைய ரத்தத்தை உலக மக்களின் பாவங்களை மன்னிக்க சிலுவையில் சிந்தும் படியாக இயேசு இந்த உலகத்தில் வந்தார். ஆனாலும், அவரை பாவம் செய்ய தூண்டும் படி சாத்தான் ஒரு திட்டம் தீட்டி யேசுவை அணுகினான்.
யேசு இந்த உலகத்தில் தன்னுடைய திருப்பபணியைஆரம்பிக்கும் முன்னர், நாற்பது நாள் இரவும் பகலும்நோன்பிருந்தார். அதன் பிறகு அவருக்கு பசி உண்டாயிற்று. சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகனே ஆனால், இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான்.
அதாவது, பசியாக இருக்கும் யேசுவை எப்படியாவது தன் சொல்லுக்கு கீழ்ப்படிய வைக்க வேண்டும் என்பது அவனது திட்டம். ஆனாலும்யேசு சாத்தானிடம், “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல,மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்“ என மறைநூலில் எழுதியுள்ளதே என்றார்.
பின்னர் சாத்தான் யேசுவை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்று, கோவிலின் உயர்ந்த கோபுரத்தில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்: “கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்“ என்று மறைநூலில் எழுதியுள்ளது என்று சாத்தான் அவரிடம் சொன்னான்.
அதாவது, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள உயரமான கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்தும், தனக்கு ஒரு சேதமும் ஏற்படாமல் இருப்பதை மக்கள் காணும்பொழுது, அவர் ஒரு சிறப்பு சக்தி கொண்டவர் என்ற தோற்றம் மக்கள் மத்தியில் ஏற்படும். அதுவும் சாத்தானின் சொல்லைக்கேட்டு அவனுக்கு கீழ்ப்படிந்தது போல் ஆகிவிடும். அதனால், யேசு சாத்தானிடம், “உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்“ எனவும் எழுதியுள்ளதே என்று சொன்னார்.
மறுபடியும் சாத்தான் யேசுவை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காண்பித்து, யேசுவிடம், “நீர் தாழ விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்“ என்றான்.
ஆனாலும் இயேசு சாத்தானைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, “உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்“ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது என்றார்.
சாத்தான் யேசுவுக்கு ஆசை காட்டி தன்னுடைய சொல்லுக்கு அவரைக் கீழ்ப்படிய வைக்க முயற்சித்தும் அதில் தோற்றுப் போனான். இப்படியாக யேசு தன் வாழ்நாள் இறுதிவரை சாத்தானின் சோதனைகளை வெற்றி கொண்டு பாவம் செய்யாதவராய் வாழ்ந்தார். “இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை” என்று வேதங்கள் சொல்லுகிறபடி, குற்றமற்ற தன்னுடைய ரத்தத்தை உலக மக்களின் பாவங்களைப் போக்க சிலுவையில் சிந்தினார்.
- merchikannan@gmail.com