

இறைவனால் அருளப்பட்டத் திருக்குர்ஆனில் பெண்களுக்கென்றே தனித்துவமான அத்தியாயம்(4) இடம்பெற்றிருக்கிறது. அதில், முதல் வசனமே ஒரே ஆன்மாவில் இருந்து மனிதர்களை இறைவன் படைத்ததாகச் சொல்லியிருப்பதுதான். பிறப்பின் அடிப்படையில் எல்லோரும் சமம் என்பதே இதன் கருத்து. ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஆடையைப்போல உடலையும் மாண்பையும் பேணும்விதமாக பரஸ்பரம் இருக்க வேண்டும்.
மேலும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்பவர்களாக மட்டுமல்லாமல் நிம்மதியைப் பகிர்ந்துகொள்ளுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிறது இறைவேதம். இத்தகைய சமத்துவத்தை, ஆண்-பெண் உறவின் எல்லாப் படிநிலைகளிலும் பேண வழிகாட்டுகிறது திருக்குர்ஆன்.
இஸ்லாம் முகிழ்வதற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் குழந்தைகளை வறுமைக்குஅஞ்சி கொலை செய்வது நடைமுறையில் இருந்திருக்கிறது. குறிப்பாகப் பெண்குழந்தைகளை மணலில் புதைத்தார்கள். அவர்களை மூடர்கள் என்று திருமறை கூறுகின்றது.
“தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை இணைவைப்பாளர்களில் பெரும்பாலோருக்கு அவர்களின் இணைத்தெய்வங்கள் அழகாக்கிக் காட்டின” (திருக்குர்ஆன் 6:137)எனும் வசனத்திலிருந்து பலதெய்வ வழிபாடு செய்தோர் குழந்தைகளைப் பலிகொடுத்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, குழந்தைகளைக் கொலை செய்தல் மிகப்பெரிய குற்றம் என்று திருமறை குறிப்பிடுகின்றது. அண்ணலாரும் பெண்பிள்ளைகளைப் பேணி வளர்த்து அவர்களது தேவைகளை நிறைவு செய்பவருக்கு மறுமையில் சுவர்க்கம் கிடைக்கும் என்றார்.
இறைத்தூதர் அண்ணல் நபியிடம் இறைவன் அருளிய முதல் சொல் ‘ஓதுவீராக’ என்பதுதான். இஸ்லாம், நம்பிக்கையாளர்களைப் படிக்கச் சொல்கிறது. அதில் ஆண்-பெண் பேதமில்லை. பெண்தான் விளைநிலம் என்கிறது திருமறை. அதில் விளையும் மக்கள் அறிவுடையோராக இருக்க பெண், கல்வி கற்றல் அவசியம். அன்றைய அரேபியாவில் புரட்சி செய்த மார்க்கம் இஸ்லாம். அதுவரை இல்லாதவாழ்வியல் சட்டதிட்டங்கள், சமூகநீதி, நற்பண்புகளை மனிதர்களிடம் அது பரப்பியது. அதனை பெண்களும் கற்றனர். அறிந்துகொண்டனர்.
அதில் எந்தத் தடையும் இருக்கவில்லை. நபியின் மனைவிகளுள் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தார். அறிவுமிக்கப் பெண்ணாக அவர் திகழ்ந்து அண்ணலின் பொன்மொழிகளைப் பதிவு செய்திருக்கிறார். நபிகளிடம் நேரடியாகத் தங்கள் குறைகளைச் சொல்லும் பெண்களுக்குப் பேச்சுரிமை இருந்தது.
பெண்களின் சம்மதம் இன்றி திருமணம் செய்வதை அனுமதிக்காத இஸ்லாம், மஹர் கொடுத்தே திருமணம் செய்ய வேண்டும் எனவும் அந்த மஹர் மணப்பெண்ணுக்கு மட்டுமே சொந்தமானது எனவும் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறது. இஸ்லாம், ஒன்றுக்குக் மேற்பட்டத் திருமணங்களை ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. இரண்டு, மூன்று, நான்கு திருமணங்கள் வரை செய்துகொள்ள அனுமதிக்கும் இஸ்லாம், தொடர்ச்சியாக அதற்கு ஒரு நிபந்தனையை முன்வைக்கின்றது.
“மனைவிகளிடம் நியாயமாக நடக்க முடியாது என்று நீங்கள் அஞ்சினால் ஒரு திருமணம் மட்டும் செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களிடம் உள்ள அடிமைப்பெண்களை போதுமாக்கிக் கொள்ளுங்கள்” (திருக்குர் ஆன் 4:3)என்று சொல்வதோடு, “நீங்கள் என்னதான் விரும்பினாலும் மனைவியருக்கு மத்தியில் ஒருபோதும் நீதி செலுத்த முடியாது.
ஆகவே ஒருத்தியின் பக்கம் சாய்ந்து அடுத்தவளை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவள்போல் ஆக்கிவிடாதீர்கள்” (திருக்குர்ஆன் 4:129)என்கின்றது. ஒரு மனைவியுடன் நீதிதவறாமல் நல்ல முறையில் வாழ்ந்திடவே இஸ்லாம் அறிவுறுத்துகின்றது என்பது தெளிவாகிறது. பேராசை கொண்ட மனிதனை நெறிப்படுத்தவே திருமறை இறங்கியது.
அசாதாரண சூழலில், ஆணுக்கு எப்படிதலாக் கொடுக்க உரிமை உள்ளதோ அதேபோலப் பெண்ணுக்கும் குலா கொடுக்கும் உரிமை உண்டு. ஆனால் சமாதானமே சிறந்ததுஎன இருபாலருக்கும் திருமறை அறிவுறுத்துகின்றது. மண ஒப்பந்தம் முடிவுக்கு வரும்இடைப்பட்ட ‘இத்தா’ காலத்தில் மனைவியைதன் வீட்டில் இருந்து கணவன் வெளியேற்றக்கூடாது. அங்கு வாழ்வது பெண்ணின் உரிமை ஆகும். மறுமணம் பெண்ணின் உரிமை.
பெற்றோரின் சொத்தில் அவர்களது கடன்,இறுதிச்சடங்கிற்கான செலவு என எல்லாவற்றையும் நிறைவேற்றிய பிறகு, வாரிசுகளுக்குப் பங்கு இருக்கிறது என்று சொல்கிறது திருமறை. அதன் அடிப்படையில், ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒருபங்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.
கணவனால் கொடுக்கப்படும் மஹரைப் பெறும் பெண்ணுக்கு அதில் முழு உரிமைஉண்டு. தலாக் கொடுக்கப்பட்டாலும் அதைத் திருப்பிக் கேட்கக்கூடாது என்ற நிலையில் பெண்ணுக்குகூடுதலாக ஓர் உரிமைப்பொருள் கிடைக்கவாய்ப்புள்ளது. அன்றைய காலத்தில், பெண்களைப் பாதுகாப்பவர்களாக ஆண்கள் இருந்ததால் ஆணுக்கு 2 பங்கு என்று கூறப்பட்டது.
எவ்வித உரிமையும் இல்லாமல் பெண்கள் இருந்த நிலையில், பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெண்ணுக்கு சொத்துரிமை அளித்தது இஸ்லாம் செய்த புரட்சியாகும்.
ஒழுக்கமுள்ள பெண்ணின் மீது அவதூறுசொல்லி அதை நிரூபிக்கத் தவறினால் அவனுக்கு எண்பது கசையடிகளைக் கொடுக்கச் சொல்கிறது திருமறை. நம்பிக்கையுள்ள ஆண், பெண் இருவருக்கும் ஒரே அறிவுரைதான். “அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்.
தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும்” (திருக்குர் ஆன்24:30,31) பெண்களுக்குக் கூடுதலாக அவர்கள்முந்தானையைப் போட்டுக் கொள்ளவும் தலைமுக்காடுகளைக் கொஞ்சம் தாழ்த்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில், பெண்களை அடையாளம் கண்டு தொல்லை கொடுக்காமல் இருக்க இதுவே சிறந்த வழிஎன்கிறது திருமறை.
மேலும் நபியின் மனைவியருக்குச் சொல்லும் அறிவுரையில், ‘பேச்சில்நளினம் காட்டாதீர்கள்; உள்ளத்தில் நோய் உள்ளவன் சபலம் கொள்ளக்கூடும்’ என்கிறது இறைவேதம். அண்ணல் நபியின் மனைவியர் இஸ்லாமியர்களின் அன்னையர் ஆவர். அவர்களை நம்பிக்கையாளர்கள் அன்னையராகவே கருதவேண்டும்.
எந்த ஒரு பெண்ணையும் கண்ணியத்துடன் பார்க்க வேண்டும் என்பதையே இச்செய்தி கூறுகிறது. அல்லாஹ் மகத்தான கூலியையும் மன்னிப்பையும் தங்கள் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்குவான். இதில் எந்த பேதமும் இல்லை.
(தொடரும்)
- bharathiannar@gmail.com