

யாழ்ப்பாணத்திலுள்ள ஏழு தீவுகளில் ஒன்று நயினார் தீவு. இதன் மற்றொரு பெயர் நாகதீப். யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக தென்மேற்குத் திசையில் சுமார் 38 கி.மீ. பயணம் செய்தால் நயினார் தீவு வரும். இதற்குப் படகு வசதி மட்டுமே உள்ளது. சாலைவழிப் பயண வசதி கிடையாது. படித்துறையில் இறங்கி சுமார் ஒரு பர்லாங் பயணம் செய்தால் நயினார் தீவு நாகபூசணி அம்மன் கோயிலை அடையலாம்.
இந்தக் கோயிலுக்கும் தாட்சாயணிக்கும் தொடர்பு உண்டு. தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு அழையா விருந்தாளியாகச் சென்று, தந்தையால் அவமானப்படுத்தப்பட்டு, யாக குண்டத்தில் எரிந்தாள் தாட்சாயணி. கருகிய தாட்சாயணியின் உடலைச் சுமந்தபடி சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். விஷ்ணு, தன் சக்கராயுதத்தால் தாட்சாயணியின் உடலை 51 கூறுகளாக்கினார். அவை 51 சக்தி பீடங்களாகின. அப்படி விழுந்த பாகங்களில், சக்தியின் இடுப்புப் பகுதியும் சிலம்புகளும் இந்த இடத்தில் விழுந்ததாக ஆலயத்தின் ஸ்தல வரலாறு கூறுகிறது.
மகாபாரதத்தில் அர்ஜுனன் பாம்புகளைக் கொன்றதற்கு பிராயச்சித்தமாக நயினார் தீவில் அருள்பாலிக்கும் நாக பூசணியைத் தரிசிக்க வரும்போது, அங்கிருந்த நாககன்னியை மணந்து, அவர்களுக்கு பப்பரவன் என்னும் மகனும் பிறந்ததாக புராணக் கதை உண்டு. அந்த அர்ஜுனனின் மகன் பெயரில்தான் இன்றும் கோயில் பகுதி `பப்பரவன் திடல்' என அழைக்கப்படுகின்றது.
இனி, கோயிலுக்குள் செல்வோம். ராஜகோபுரம் 9 நிலைகள் 9 தங்கமுலாம் கலசங்களுடன் மிக கம்பீரமாக நிற்கிறது. ஏராளமான பொம்மைகள் (ஏறக்குறைய 2000!) கோபுரத்தை அலங்கரிக்கின்றன. இந்தக் கோயில் முழுவதும் எடுத்துக் கொண்டால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.
இவற்றைத் தமிழக கலைஞர்கள்தான் மிக அழகாக செய்துள்ளதுடன் பளிச்சென்று வண்ணம் பூசியும் ஜொலிக்க வைத்துள்ளனர். இந்த ராஜ கோபுரத்திற்கு 2012ல்தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயிலின் உள்ளும் மூன்று சிறிய, பெரிய கோபுரங்கள் உள்ளன. இந்த ஆலயத்தின் ஸ்தல மரமாக ஆலமரம் விளங்குகிறது. கைலாசரூப புஷ்கரணி என்பது தீர்த்தத்தின் பெயர்.
ஆலயத்தின் கிழக்கு பக்க ராஜகோபுரம் 1935இல் கட்டப்பட்டது. இதன் உயரம் 54 அடி. இதில் சிற்பங்கள் குறைவு. ஆனால் 108 அடி ராஜகோபுரம் (இலங்கையிலேயே பெரியது). கட்டப்பட்டபோது, இவற்றிலும் கூடுதலாக பொம்மைகள் வைக்கப்பட்டன. இங்குள்ள நந்தி சிலையும் இலங்கையிலேயே பெரியது. தெற்குவாசல் வழியாகத்தான் உள்ளூர் மக்கள் வருகின்றனர்.
இவர்களின் எண்ணிக்கை தோராயமாக 3 ஆயிரம் வரை இருக்கும். ஆனால், திருவிழாக்கள் நடக்கும் நேரங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். கோயில் சார்ந்து விடுதிகள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த விடுதிகளில் தங்கிவிட்டு, மறுநாள்தான் ஊர் திரும்புகிறார்கள். திருவிழாவின் போது, ஆலயத்தில் தினமும் இருவேளை அன்னதானமும் உண்டு.
கிழக்கு பக்கம் வழியாக கோயிலின் பிரதான நுழைவாயில் வழியாக ஆலயத்தினுள் பிரவேசித்தோம். கர்ப்பக் கிரகத்தின் மீது விமானம் (10 அடி வெளியே எழுப்பியுள்ளனர். ஆலயத்தில் வசந்த மண்டபம், வாகன மண்டபம், கல்யாண மண்டபம் எனப்பல மண்டபங்கள் உண்டு. நுழைவு வாயிலின் மேலே வெளிப்புறம் நடுவில் நாகத்தில் அமர்ந்த நாகபூசணி, வலதுபுறம் சிவனை (லிங்கத்தை) பூஜிக்கும் சக்தி, இடதுபுறம், ஐந்து தலை நாகத்தில் பள்ளி கொண்ட சக்தியைக் காணலாம்.
கருவறைக்குள் நிமிர்ந்து சீறுவது போல் நிற்கும் நாகத்தைப் பார்க்கிறோம். அதன் மடியில் நின்ற கோலத்தில் நாகபூசணி இருக்கிறாள். நின்ற கோலம் சிறப்பு. அதற்கு முன்பாக, அழகிய கோலத்தில் ஆசி வழங்கும் உற்சவ நாகபூசணியை தரிசிக்கிறோம். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.
தினமும் இந்த அம்மனை தரிசிக்க குறைந்தது ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். அம்மனுக்கு அருகிலேயே நயினார் சுவாமி (சிவன்) இருக்கிறார். அவரையும் தரிசிக்கிறோம். மூல அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து அலங்காரம் செய்து தீபாராதனை காட்டும்போது, பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. இங்கு தற்போது குருக்களாக இருப்ப வர்களின் மூதாதையர் பரம்பரை பரம்பரையாக இந்தக் கோயிலின் குருக்களாக இருந்திருக்கின்றனர். இந்தக் கோயிலுக்கு ஒரு பிரதட்சண வழி உள்ளது. கர்ப்பக்கிரகத்துக்கு இரண்டு நுழைவாயில்கள் உண்டு.
பிரதான வாயிலான கிழக்கு வாயில் வழியாக நாம் உள்ளே சென்றோம். தெற்கு பக்க கோபுரம் வழியாக வருபவர்கள், அந்த வாசல் வழியாக உள்ளே நுழைகின்றனர். கோயிலில் அம்மன், சிவன் விக்கிரகங்களைத் தவிர, விநாயகர், புவனேஸ்வரி, கார்த்திகேயன், வள்ளி, தேவயானையுடன் முருகன், சூரியன், சந்திரன், நவக்கிரகம், பைரவர், 63 நாயன்மார்கள், சைவ சமயக் குரவர்கள் நால்வர், சண்டிகேஸ்வரி எனப் பலரின் திருவுருவங்கள் உள்ளன. உண்மையில் இதுவொரு முழுமையான கோயில். இந்தக் கோயிலுக்கு புதிதாக கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
இந்த அம்மனுக்கு நடக்கும் ஆனித் திருவிழா மிகவும் பிரபலம். இது ஜூன், ஜூலையில் 16 நாள்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நான்கு நாள்கள் மிகவும் விசேஷமாக இருக்கும். லட்சக்கணக்கில் பக்தர்களின் கூட்டத்தால் தீவு திணறும். சப்பர திருவிழா, தேர்த் திருவிழா, தீர்த்தோற்சவம், தெப்ப உற்சவம் விழாக்கள் அமர்க்களப்படும். இவை தவிர, நவராத்திரி, சிவராத்திரி, ஆடிப்பூரம் ஆகிய வைபவங்களும் சிறப் பாக நடத்தப்படுகின்றன. இந்தப் பகுதியில் கும்பாபிஷேகத்தை `மறுமலர்ச்சி விழா' என அழைக்கின்றனர்.
அமைவிடம்: யாழ்ப்பாணத்திலிருந்து 38 கி.மீ. தொலைவிலும், கொழும்பிலிருந்து 431 கி.மீ. தொலைவும் உள்ளது.
படகுக் கட்டணம் 100 (இந்திய ரூபாயில்).
- radha_krishnan36@yahoo.com