

பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் ஒரு கருத்தை மையப்படுத்தி முழு நாட்டிய நிகழ்ச்சியையும் எப்படி நிறைவாக அளிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந் தது, அண்மையில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் திருவீழிமிழலை கனகா அவரின் மாணவிகளுடன் நடத்திய `சங்கர யார்கோல சதுரர்' நாட்டிய நிகழ்ச்சி.
சங்கரா யார்கலோ சதுரர் நாட்டிய நிகழ்ச்சியில் திருவாசகத்தை இரு பிரிவாகப் பிரித்து நடனம் அமைத்திருந்தனர். முதல் பிரிவில், காத்தல், கரத்தல், அழித்தல் என முத்தொழிலையும் புரியும் இறைவன், இந்த உயிர்கள் அனைத்திலும் எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறான் என்பதை காட்சிபூர்வமாக விளக்கினர்.
உத்தரகோசமங்கையிலிருந்து வரும் இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொள்ள, நரியைப் பரியாக்கி திருவிளையாடல் புரிந்தது, வேதத்தின் பொருளை சிவன், உமையவளுக்குச் சொல்ல, அதை விருப்பமின்றி கேட்டதால் உமையவள் பரதவர் குலத்தில் தோன்றும் நிலை ஏற்படுகிறது. அதன்பின், இறைவன் அருளால் அத்தலத்திலேயே இறைவனை மணக்கும் வாய்ப்பை சக்தி பெறுவதும் நடனத்தின்வழி நிகழ்த்தப்பட்டது.
இறைவனின் பெருமைகளைப் பாடி பெண்கள் கூடி, ஒவ்வொருவரின் தோளினைத் தொட்டும், தட்டியும் மகிழ்ந்து ஆடுவது `திருத்தோள் நோக்கம்' எனப்படும். தில்லையில் திருநடனம் ஆடும் கூத்தனின் புகழைப் பாடி, தன்னுடைய மாணவிகளுடன் சேர்ந்து ஆடினார் கனகா.
திருத்தசாங்கம் என்பது அரசனுக்குரிய பெயர், நாடு, ஊர், கொடி உள்ளிட்ட பத்து விஷயங்களின் சிறப்பை இறைவனைத் தொடர்புபடுத்திக் கூறுவது. தலைவி, கிளியை நோக்கி வினவுவதாக இந்த திருத்தசாங்கம் நடனத்தில் நிகழ்த்தியது, பக்திபூர்வமான புதிய காட்சியனுபவத்தை ரசிகர்களுக்குக் கடத்தியது.
இசை, பாட்டு, நட்டுவாங்கம், நடன உருவாக்கம் அத்தனையையும் வெகு நேர்த்தியாக செய்திருந்தார் கனகா. `சங்கர யார்கோல சதுரர்' என்னும் நாட்டியத்துக்கான இந்த கருத்தாக்கத்தை வடிமைத்தவர் டாக்டர் உமா சுப்ரமணியம்.
திருவாசகத்தின் இரண்டாவது பகுதியாக, இறைவனை மதுரபாவத்தில் மாணிக்கவாசகர் தன்னைத் தலைவியாகவும், இறை
வனைத் தலைவனாகவும் வழிபடும் சிறப்பை நடனத்தின் வழியாகக் கொண்டாடியது திருவீழிமிழலை கனகாவின் நடனக் குழு. இறைவனின் அஜபா நடனக் கருத்தை மையப்படுத்தி சிறப்பான தில்லானாவை அமைத்திருந்தது, நிகழ்ச்சியை நிறைவாக்கியது.