

அல்லாஹ்வுடனும் இறைத்தூதர் அண்ணல் நபியுடனும் போரை அறிவிக்கும் செயல் என கருதப்படுவது வட்டித் தொழில். அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்கும்போது, தான்மட்டும் புசிப்பது பாவச்செயல் என்றும் தனக்கு எது கிடைக்க வேண்டுமோ அது தனது சகோதரனுக்கும் கிடைக்க வேண்டும் என இறைவனிடம் இறைஞ்ச வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கும் சமதர்மச் சமத்துவ மார்க்கம் இஸ்லாம்.
உழைப்பவனின் வியர்வை காயும் முன்அவனுக்குக் கூலி கொடுக்கப்பட வேண்டும் என்ற கண்ணிய நோக்கம் கொண்டது இஸ்லாம் எனில், ஒருவனுடைய உழைப்பை உறிஞ்சி மற்றொருவன் வாழும் வாழ்க்கை முறையை எப்படி அது ஆதரிக்கும்.
அவரச காலத்திற்கு அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக ஒருவனுக்குப் பணம் தேவை என்றால் தேவைக்கு அதிகமாகப் பணம் வைத்திருப்பவர் கடனாக அவருக்குக் கொடுத்து உதவலாம். அல்லது தர்மம் செய்யலாம். அதற்கான நற்கூலியை உதவிசெய்பவருக்கு இறைவன் அருள்வான்.
இறைவனுக்கு நெருக்கமாக ஒருவரைக் கொண்டு சேர்ப்பதும் அதுவே. கொடுத்த கடனுக்கு மேலாகக் கடன் வாங்குவோரிடம் இருந்து பணம் பெறுவது இறைவனால் வெறுக்கப்படுகின்ற செயல் ஆகும். ‘உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றையே உண்ணுங்கள்’ என்ற
இறைவசனத்திற்கு, வட்டிப்பணத்தில் உண்ணக்கூடாது என்ற உள்ளர்த்தமும் உண்டு. வட்டி ஹராமானது. தடைசெய்யப்பட்டது.
இன்றைக்கு வட்டி ஒரு தொழிலாக மாறிப்போயிருக்கிறது. அதனால் பேரிழப்புகள் உண்டாவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். கடன் வாங்கி வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றப்பாதையில் மாற்றியமைப்பதற்கு மாறாக வட்டி கட்டியே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம்.
ஒரு நாட்டுக்கே வேந்தனாக இருந்தாலும் வட்டிக்குக் கடன்பட்டுவிட்டால் கலங்கித்தான் நிற்க வேண்டும். உலகப் பொருளாதாரமே வட்டியில் உழன்றுகொண்டிருக்கிறது. எனவேதான் ஏழை ஏழையாகவும் பணக்காரன் பணக்காரனாகவுமே இருக்கிறார்கள்.
இறைவனின் கட்டளை: “வட்டியை உண்பவர்கள் மறுமைநாளில் சாத்தான் தீண்டியதால் பைத்தியமாகி விட்டவர்களைப் போலல்லாமல் எழ மாட்டார்கள். இதற்குக்காரணம் வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான் என்று அவர்கள் கூறியதேயாகும். உண்மையில் அல்லாஹ் வியாபாரத்தை அனுமதிக்கப்பட்டதாகவும் வட்டியைத் தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான்.
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான்” (திருக்குர்ஆன் 2:275,276 வியாபாரம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு கொண்ட பொருளுக்கு அதற்கேற்பப் பணம் கொடுத்து வாங்குவது.
வட்டி என்பது கொடுத்த பொருளுக்கு அல்லது பணத்திற்கு அதிகமாக திருப்பி வாங்குவது. இதையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். எனவே வட்டி என்பது வியாபாரம் அல்ல. மேலும், ‘ஒருவர் இதுவரை வட்டி வாங்கியிருந்தாலும் அல்லாஹ்வின் அறிவிப்புக்குப் பிறகு வட்டி ஹராம் எனத் தெரிந்தபிறகு அதை விட்டுவிட வேண்டும்.
அவ்வாறு விட்டுவிட்டு அசல் மூலதனத்தை மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள். அப்படியும் கடன்பெற்றவரால் அதைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அவருக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தும் அவரால் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அவரை மன்னித்து விடுங்கள்’ என்கிறான் அளவற்ற கருணையாளன் அல்லாஹ்! கடன்கொடுப்பவர் மீதும் அல்லாஹ்வுக்குக் கரிசனம் உண்டு. “நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகக் கடன் கொடுக்கல் வாங்கலை வைத்துக்கொண்டால் அதனை எழுதிக்கொள்ளுங்கள்” (திருக்குர்ஆன் 2:282) என்று வழிகாட்டும் இறைவன், கால வரையறை, சாட்சிகள் ஆகியவற்றையும் ஏற்படுத்திக் கொண்டு கடன் வழங்கச் சொல்கிறான். ஆனால் “வட்டியைப் பன்மடங்காகப் பெருக்கி உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” (திருக்குர்ஆன் 3:130) என்பதுதான் இறைவனின் கட்டளை.
அண்ணலின் வழிகாட்டல்: ‘யூதர்கள் வட்டித்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்டார்கள். அதனாலேயே அவர்களிடம் இருந்து நன்மை தரும் தூய்மையானப் பொருள் களை நாம் தடை செய்தோம்’ என அல்லாஹ் கூறுகின்றான். சிலர் அல்லாஹ்வின் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். எனவே, அவர்களுக்கு அல்லாஹ் மகத்தான அன்பளிப்பைக் கொடுத்தான்.
செல்வத்தை விரும்பாதவர்கள் யாருமில்லை. ஆனால் அது நல்வழியில் சம்பாதித்ததாக இருக்க வேண்டும். அதைக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும். வட்டி வாங்கும் பொருட்டு யாரேனும் சாட்சிகளை வைத்துக் கொள்வார்களெனில் அவர்களை அண்ணல் வெறுத்தார்.
ஸஹீஹுல் புகாரி 2298இல் அபூஹுரைரா பின்வருமாறு குறிப்பிடுகிறார். “கடனில் இறந்துபோன ஒருவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் கொண்டு வரப்படும் போதெல்லாம். ‘அவர் தனது கடனைத் திருப்பிச் செலுத்த ஏதாவது விட்டுச் சென்றாரா?’ என்று கேட்பார். கடனைத் திருப்பிச் செலுத்த ஏதாவது விட்டுச் சென்றதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டால் அவர் தனது இறுதித் தொழுகையைச் செய்வார்.
இல்லையெனில் அவர் தனது நண்பரின் இறுதித் தொழுகையை முஸ்லிம்களுக்குச் சொல்வார்” இஸ்லாம் நிலைபெறத்தொடங்கியக் காலத்தில், “கடனில் இருக்கும்போது ஒரு முஸ்லிம் இறந்தால், அவனுடைய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நான் பொறுப்பு.
மேலும் எவர் செல்வத்தை விட்டுச் செல்கிறாரோ அது அவருடைய வாரிசுகளுக்குச் சொந்தமாகும்” என்றார் அண்ணல். வட்டி என்பது பாவச்செயல் என்று சொல்வதோடு நில்லாமல் கடனைத் திருப்பிச் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதுவே இஸ்லாம் எனும் சமதர்ம மார்க்கம்.
(தொடரும்)
- bharathiannar@gmail.com