

யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய நினைவு சின்னங்கள் பாதுகாக்கப்பட்டுவரும் இடமாக ஹம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலாத் துறையின் சார்பாக 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத் தலமாக ஹம்பி நகரம் தேர்வு செய்யப்பட்டு வெண்கல பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என வெவ்வேறு சமயங்களும் இந்நகரத்தில் தழைத்துள்ளன. ஹம்பியின் வலதுபுறம் ஹேம கூடம் என்கிற உயர்ந்த மலையும் இடதுபுறம் ரத்னகூடம் என்கிற சிறு மலையும் உள்ளன. ஹேம கூடத்தில் ஸ்ரீ காயத்ரி பீட குரு ஆசிரமமும், ஸ்ரீ காயத்ரி, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயமும் உள்ளன. ரத்ன கூடத்தில் ஜைன மதத்தினருக்கான குருபீடம் உள்ளது. காயத்ரி பீடத்தின் ஆறாவது பீடாதிபதியாக ஸ்ரீ தயானந்தபுரி மகாசுவாமி அருளாசி வழங்கி வருகிறார்.
சிவனின் தியானத்தை தன் மலர்பானங்களால் கலைத்த மன்மதனை சிவன் நெற்றிக்கண் திறப்பால் பொசுக்கிய சம்பவத்தை நினைவுகூரும் வகையில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ விருப்பாட்சாநாதரின் கோயில் வடபுறம் உள்ள தீர்த்தக் குளத்திற்கு மன்மதன் தீர்த்தம் என்றே பெயரிட்டே அழைக்கின்றனர். இப்பகுதி ஹம்பதீர்த்தா, விருப்பாட்சா தீர்த்தா, பம்பா வரஷேத்ரா என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டன. பம்பா என்பது சிவனின் மற்றொரு பெயராகும்.
மூன்று சந்நிதிகள்: ஹேமகூட மலையில் காயத்ரி பீட நிர்வாகத்தின்கீழ், ஒரே நேர்கோட்டில் கிழக்குப்பார்த்தவண்ணம் ஸ்ரீ காயத்ரி, ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர், ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் ஆகிய சந்நிதிகள் அமைந்துள்ளன.
ஸ்ரீ காயத்ரி தேவி தாமரை பீடத்தில் மூன்று கால்கள், ஐந்து தலைகள், பத்து கரங்கள் என சர்வமங்கள நாயகியாக தன்னை நாடிவரும் அடியார்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் கருணாம்பிகையாக காட்சி தருகிறாள். தன் திருக்கரங்களில் தர்ம தேவதையின் அம்சத்தை வெளிப்படுத்தும் விதமாக சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், தாமரை, அட்சய பாத்திரம், ஏடு, கதாயுதம் போன்றவற்றைத் தாங்கியவண்ணம் அபய ஹஸ்த கோலத்தில் சக்தி சொரூபமாக எழுந்தருளி இருக்கிறாள்.
மூன்று சந்நிதிகளில் நடுநாயகமாக ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆவுடை மீதமர்ந்து சாந்நித்தியமிக்க தெய்வமாக எழுந்தருளியுள்ளார். காசி திருத்தலத்தில் கங்கைக் கரை பெருமானாக விஸ்வநாதர் அருள்பாலித்திருப்பது போன்றுஇந்த துங்கபத்திரை தீரத்தில் இராமலிங்கேஸ்வரர் காட்சி தருவதால் அடியார்கள் இத்தலத்தை உள்ளன்போடு “தட்சிணகாசி” எனச்சொல்லி பரவசமடைகின்றனர்.
தினமும் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. தசராவிழா, மகா சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி தோறும் சிறப்பு அலங்காரம், மாத சிவராத்திரி, மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, ஆடி வெள்ளிக்கிழமை தோறும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.
விருப்பாட்சாநாதர் கோயில்: துங்கபத்திரை நதியில் ஆனந்தமாய் தீர்த்தமாடியபின், மன்மத தீர்த்தக்குளம் தாண்டி வந்தால் விருப்பாட்சாநாதர் கோயிலை சென்றடையலாம். முக மண்டபம் 32 சிற்பத்தூண்கள் தாங்கிய வண்ணம் அமைந்துள்ளது. இதனை `ரெங்கா மண்டபம்' என அழைக்கின்றனர்.
இதில் உற்சவர் திருமேனிகள் உள்ளன. மண்டபவிதானத்தில் மூலிகை வண்ணத்தால் உருவான அழகிய ஓவியங்கள் மெருகு குலையாமல் உள்ளன. இதில் குருதேவர் வித்யாரண்யர், விருப்பாட்சா - பார்வதி கல்யாணம், விஷ்ணு, கல்யாண சுந்தரர், அர்ச்சுனன் தபசு, திரிபுரம் எரித்த சிவன் போன்ற காட்சிகள் அழகாக வரையப்பட்டுள்ளன. கருவறை மூலவராக நாகாபரண லிங்கேசுவரராக விருப்பாட்சாநாதர் எழுந்தருளியுள்ளார்.
மூலவர் விருப்பாட்சாநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இத்தல மூலவரை பஞ்சமுகேஸ்வரர் என்று பெயரிட்டும் பக்தர்கள் அழைக்கின்றனர். விருப்பாட்சா, ஜம்பு நாதா, சோமேஸ்வரா, வாணி பத்ரேஸ்வரா, கின்னரேஸ்வரா என்கிற ஐந்து வடிவங்களில் இத்தல ஈசன்அருள்பாலித்திருப்பதாக ஐதீகம். குரு வித்யாரண்யர் வகுத்த ஆகம விதிகளின்படியே இன்று வரை இத்தலத்தில் மூன்று கால நித்யபூஜைக் கட்டளைகள் நிறைவேற்றப்படுகின்றன.
ஹம்பி திருவிழா: மார்கழி மாதம் திருக்கல்யாண உற்சவமும், மாசி மாதம் பிரம்மோற்சவமும் நடைபெறும். மகாநவமி எனப்படும் தசரா விழா கொண்டாட்டமும், மகர சங்கராந்தி எனப்படும் தைப்பொங்கல் விழாவும் குறிப்பிடத்தக்கவை. தவிர, ஆண்டுதோறும் மார்ச் மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ஹம்பித் திருவிழாவில் பல்வேறு மாநில மக்களோடு அயல்நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொள்கின்றனர்.
ஆண்டு முழுவதும் கரைபுரண்டு ஓடும் துங்கபத்திரை நதியின் நீர் சிறிய கால்வாய் வழியாக விருப்பாட்சா நாதரின் கோயில் மடப்பள்ளிக்குள் சென்று வெளிப்பிரகாரம் வழியே மறுபடியும் நதியை அடையுமாறு அக்காலத்திலேயே வழிவகை செய்துள்ளனர்.
கோயிலின் எதிரே உள்ள சந்நிதித் தெருவில் இருபுறமும் ஈரடுக்கு நாளங்காடி கல் கட்டுமானம் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு நடந்த அமோகமான வாணிபத்தை, அயல்நாட்டு யாத்ரீகர்கள் தங்கள் பயணக்குறிப்பில் வியந்து குறிப்பிட்டுள்ளனர். சந்நிதித் தெரு முடிவடையும் கடைக்கோடியில் `எதிர் பசவண்ணா' என்கிற ஒரே கல்லால் ஆன நந்திதேவர் மண்டபம் உள்ளது.
இதன் முன்புறம் உள்ள அக்கால கலையரங்கில் தொன்றுதொட்டு வருடாந்திர உற்சவங்களின் போது இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நம் நாடு மேன்மையான கலாச்சாரம், நாகரிகம், சிற்பக்கலை மேன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்கு ஹம்பி நகரம் ஓர் அற்புதமான உதாரணம்.
அமைவிடம்: பெங்களுர் யஸ்வந்த்பூர் - ஹோஸ்பேட் ரயில் தினமும் உள்ளது. பயண தூரம் 400 கி.மீ. ஹோஸ்பேட் - ஹம்பி 12 கி.மீ. தூரம். அரசு பஸ், ஆட்டோ, டாக்சி வசதிகள் உள்ளன. தங்குமிடம், உணவு வசதி தமிழகத்தைப் போலவே உள்ளது. காலை 6.30 மணி - பகல் 1.00 மணி மாலை 5.00 மணி - இரவு 9.00 மணி வரை தரிசன நேரம்.
- vganesanapk2023@gmail.com