

எகிப்து, கிரேக்கம், ரோம் போன்ற பண்டையப் பேரரசுகளின் வரலாற்றில் அடிமைகளின் அத்தியாயம் மறைக்க முடியாதது. சொல்லப்போனால் பேரரசுகளின் உருவாக்கத்தில் அடிமைகளின் பங்கே அதிகமாக இருந்தது. உற்பத்திச் செயல்பாடுகளிலும் கட்டுமானப் பணிகளிலும் அடிமைகளின் உழைப்பு அளப்பரியது.
“உலக அதிசயங்களுள் இடம் பெறும் சீனாவின் நீண்ட பெருஞ்சுவரும் எகிப்து நாட்டின் பிரமிடுகளும் அடிமைகளின் நிணத்தாலும் ரத்தத்தாலும் உருவாக்கப்பட்டன” என்கிறார் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அந்தவகையில், உலகின் எல்லாவிதமான வியக்க வைக்கும் கட்டுமானப் பணிகளிலும் அடிமைகளின் வாழ்வு அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது என்பது பேருண்மை.
பரம்பரையாகவோ, கொடுத்த கடனுக்கு மாற்றாகவோ, போரில் பிடிபட்டோ அல்லது பெற்றோரால் விற்கப்பட்டோ அடிமைகள் உருவாயினர். இத்தகைய அடிமைகளின் வாழ்வு, உரியவருக்கு உழைத்தல் என்பதைத் தாண்டி வலி மிக்க கதைகளைச் சொல்லும். அவர்களுக்கெனத் தேர்வு என்பதே கிடையாது.
உணவு, உடை, உறக்கம், உறைவிடம் என அடிப்படைத் தேவைகள் எல்லாம் அடிமைகளைக் கொண்டோரின் தேர்வாகவே இருக்கும். திருமணம் என்பதே அவர்கள் வாழ்வில் இருக்கவில்லை. உரியவரின் உடைமையாகவே பெண் அடிமைகள் நடத்தப்பட்டனர்.
ஈரான், ஈராக், ஏமன் போன்ற அரபு நாடுகளிலும் அடிமைச் சந்தைகள் நடந்திருக்கின்றன என சான்றுகள் தெரிவிக்கின்றன. அடிமைகளை விலைக்கு வாங்கி மக்கள், தங்கள் தேவைக்குப் பயன்படுத்தி வந்தனர். உலகின் மற்ற நாடுகளிலும் அடிமைகளை விலைக்கு வாங்குவதும் விற்பதும் நடந்திருக்கின்றது.
ஒருசில உலக நாடுகளில் ஒரு பொருளாக, விற்பனை செய்யப்படாவிட்டாலும் மனிதனை அடிமையாக நடத்துவதற்கு வேறு சில சமூகக் கட்டமைப்புகள் இருந்திருக்கின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிமைப்படுத்துவதற்கான வழிமுறை, பல பரிமாணங்களைக் கொண்டிருந்தன. இன்றும் அதன் சுவடு இருக்கின்றது.
சமத்துவத்தை வலியுறுத்துவோம்: இறையச்சம் உள்ளவர்கள் யார் என்பதற்கு திருக்குர்ஆனில் அத்தியாயம் 2:177இல் ஒரு விளக்கம் இடம்பெற்றிருக்கின்றது. “நன்மை என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை……..அல்லாஹ்வின் மீதுள்ள அன்பால் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும் தம் செல்வத்தைச் செலவு செய்வதும்…” எனத் தொடரும் வசனம் அடிமைகளைத் தம் செல்வத்தைச் செலவு செய்து விடுதலை செய்வோர்தான் உண்மையாளர், இறையச்சம் உடையோர் என்று நல்வழி காட்டுகின்றது.
அடிமைகளை வைத்திருப்போர், அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றது திருமறை. ஒரு பெண்ணையோ அல்லது பல பெண்களையோ திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் நீதி தவறாமல் வாழ முடியாது என அஞ்சுபவர் தமது அடிமைப் பெண்ணை மட்டும் உரித்தாக்கிக் கொள்ளலாம்.
அவ்வாறு உரித்தாக்கிக் கொள்ளும்போது அவளுக்கு முழுபொறுப்பும் உரிமையாளன் மட்டுமே. பிறரின் அடிமைப் பெண்களை உரிமையாளர்களின் அனுமதியுடன் அப்பெண்களுக்கு உரிமையான மஹரைக் கொடுத்துத் திருமணம் செய்து கொள்ளவும் திருக்குர்ஆன் ஆணையிடுகிறது. கட்டற்ற சமூகத்தை நெறிப்படுத்தியிருக்கிறது திருமறை. அடிமைகளைக் குறிப்பாகப் பெண் அடிமைகளைச் சட்டங்கள் மூலமாக பாதுகாத்திருக்கிறது திருக்குர்ஆன்.
இறைத்தூதரின் இன்சொல்: அடிமைகளை வைத்துக் கொள்வது செழிப்பின் அடையாளமாக இருந்தபோது, அடிமைகளை விடுதலை செய்வது குறித்து அறிவிப்பதற்கு அசாத்தியத் துணிவு வேண்டும். அடிமைகளைத் தங்கள் சகோதரர்களைப் போல நடத்துங்கள் என்று கூறியதோடு, ‘தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு’ என அண்ணல் கூறியிருக்கிறார்.
அடிமைப் பெண்ணுக்குக் கல்வி கற்பிப்பது குறித்து 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு யாராவது பேசியிருப்பார்களா? என்பது சந்தேகம்தான். இரண்டு அல்லது பலருக்குரிய அடிமைப்பெண்கள் இருந்த நாகரிகமற்ற காலத்தில் அவர்களின் விடுதலையை, கல்வியை, முறையான திருமணத்தை தம் வாழ்நாளில் செய்துகாட்டியவர் அண்ணல் நபி.
ஆயிஷாவும் அண்ணலும் தங்கள் வாழ்நாளில் உரியவருக்குப் பிணைத்தொகையைக் கொடுத்துப் பல அடிமைகளையும் தங்களுக்கு அளிக்கப்பட்ட அடிமைகளையும் சேர்த்து 60-க்கும் மேற்பட்ட அடிமைகளை விடுதலை செய்துள்ளனர். கதீஜா பிராட்டி, திருமணத்தின்போது அண்ணலுக்குக் கொடுத்த ஸைத் எனும் அடிமையை அப்போதே விடுதலை செய்தார் அண்ணல்.
நபித்தோழர்களான அபூபக்கரும் உமரும் எண்ணிலடங்கா அடிமைகளை விடுதலை செய்துள்ளனர். ஏக இறைவனையும் இறைத்தூதரையும் பின்பற்றுபவர்கள் மனிதனைச் சமத்துவ எண்ணத் துடனேயே அணுகுவார்கள்.
(தொடரும்)
- bharathiannar@gmail.com