

கோயம்புத்தூரில் 1920இல் சுந்தரம் அய்யர் அலமேலு தம்பதிக்கு ஜனவரி 25 தைப்பூசம் அன்று பிறந்தவர் பாலசுப்ரமணியன். ஓடிவிளையாடும் பாலகப் பருவத்திலேயே இறை சிந்தனையை மனதிற்குள் நிறைவாகக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.
பிரம்மானந்த பரதேசி அந்தக் குழந்தையை ஆட்கொண்டார். "நீயும் என்னைப் போல பித்துக்குளியாகப் போகிறாய்" என்பதே குருவின் ஆசியாக அந்தக் குழந்தைக்குக் கிடைத்தது. முருகனின் மீது பித்தாகி, அவரின் புகழைப் பாடிய அந்தக் குழந்தையே, வளர்ந்ததும் `பித்துக்குளி முருகதாஸ்' என்னும் பெயரில் முருகதாசனாக அறியப்பட்டவர். 90 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த பித்துக்குளி முருகதாஸ், தன் வாழ்நாளில் 38 ஆண்டுகள் மருதமலை திருப்படிக்கட்டு திருவிழாவில் பங்கெடுத்தவர்.
ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் நாடு இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 அன்று ஆட்சியில் இருந்த துரைகளை சந்திக்கும் வழக்கத்தில் இருந்த மக்களை, திருத்தணி, மருதமலை, பழநி போன்ற குன்றுதோறும் இருக்கும் முருகன் சந்நிதிகளை நாடச்செய்யும் `திருப்படிக்கட்டு' என்னும் பெயரில் மக்களை, பக்தர்களாக்கிய பெருமை இந்த முருகதாசனையே சாரும்.
பஜனை சம்பிரதாயத்தை சாமான்யனிடமும் பரவலாக்கியதில் முருகதாஸ் ஒரு முன்னத்தி ஏர். அவர் பாடிய `பச்சைமயில் வாகனனே, சிவபாலசுப்ரமணியனே வா' பாடலை, கச்சேரியைப் பார்க்கும் கூட்டமும் `வா...வா..வா..' என எதிரொலிக்கும் அழகே தனி.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி உள்பட ஏழு மொழிகளில் திறன் பெற்றிருந்த முருகதாஸ், `தெய்வம்' திரைப்படத்தில் தோன்றி `நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை' பாடலையும் பாடினார். இந்தியாவின் புகழ் பெற்ற மேடைகளிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற உலகின் பல நாடுகளிலும் நம் பக்தி இசையைப் பரப்பியவர்.
தமது கச்சேரிக்கு வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் அளிக்க வேண்டும் என்னும் உத்தரவாதத்துடன், இலவசமாகவே பக்தி இசையை வழங்கி மக்களின் பசியைப் போக்கியவர் பித்துக்குளி முருகதாஸ்.