

கலைகள் மிகுந்த தக்கலை நகரில் மறைந்தும் வாழ்கின்ற ஞானமாமேதை பீர் முஹம்மது அப்பா வலியுல்லாஹ் நினைவு நாள் ரஜப் பிறை 14 (25/01/2024) அன்று கந்தூரி விழா நடைபெற இருக்கிறது.
தமிழாய்ந்த மக்களின் நெஞ்சங்களை நெகிழ்ச்சியடையச் செய்கின்ற `அப்பா பாடல் என்று அனைவராலும் அறியப்படுகின்ற இவ்விழா ஒரு சமய நல்லிணக்க விழாவாகவே ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
பீரப்பா மீது கொண்ட நேசத்தினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் பொன் ஆசாரியான எக்கீன் பாவா. பீராப்பாவின் சமாதியின் அருகிலேயே இவரின் சமாதியும் உள்ளது. எக்கீன் பாவாவின் சந்ததியைச் சேர்ந்தவர்கள்தான் பீரப்பாவின் தர்ஹாவிற்கு முதன் முதலில் பால்குடம் எடுத்துவந்து பாத்திஹா செய்யத் தொடங்கினர்.
அதன்பின், அவர்களின் வழிவந்தவர்கள் ஆண்டுதோறும் பால் குடங்களை தங்களது தலையில் சுமந்துவந்து தர்ஹாவில் பாத்திஹா செய்கின்றனர். விழாவில் பங்கெடுக்கும் மக்களுக்கு அந்தப் பால் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அதன் பின்னரே இரவு 9 மணிக்கு ஞானப்புகழ்ச்சி பாடல்கள் ஓதப்படுகின்றன. இந்நிகழ்ச்சியானது விடிய விடிய நடைபெறுகிறது. பல்வேறு சமய நெறிகளைக் கொண்டவர்களும் துறவிகளும் பல ஊர்களிலிருந்து வருகின்ற மக்களும் பெருந்திரளாக இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
தமிழிலேயே இறைவனிடம் பிரார்த்தனை புரிகின்ற இந்த நடைமுறையானது, தமிழகத்தில் நடைபெறுகின்ற ஓர் அரிய நிகழ்ச்சியாகவே கருதப்படுகிறது.
நிகழ்ச்சியின் இறுதியாக அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புடன் கூடிய கனிவர்க்க நேர்ச்சைகள் வழங்கப்படுகின்றன. சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் தமிழின் உயர்வை பறைசாற்றுகின்ற நிகழ்ச்சிக்காகவும் இந்த கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது.
- ervaimohdsalahudeen@gmail.com