

பரிபூரணமான ராம நாமத்தை காவிரிக் கரையில் இருப்பவரும் ஜபிக்கலாம். கலிபோர்னியாவில் இருப்பவரும் ஜபிக்கலாம் என்பதை நிரூபிக்கிறது இந்த பஜனைப் பாடல். ராமா என்னைக் காப்பாய். தசரதன் மைந்தனே, மூவுலகையும் காப்பவனே, பத்து திசைகளையும் உன் மதிப்பிற்குரிய ஆளுமையால் ஆள்பவன் நீ. ஜானகியின் மணாளனே! சூரியன், சந்திரன், தேவர்களின் தலைவன் இந்திரன் முதலானவர்களால் வணங்கப்படுபவன் நீயே.
ஜனகர், நாரதர், வசிஷ்டர் போன்ற முனிவர்களின் உள்ளத்தில் வாழ்பவனே... பத்து தலை ராவணன் முதலான அரக்கர்களை வதம் செய்தவனே, ஆனை முகத்தோனான விநாயகன், ஆறுமுகத்தோனான முருகன் ஆகிய கடவுளர்களின் ஆசியைப் பெற்றவனாகிய ராமா என்னைக் காப்பாய் எனப் பாடலின் அர்த்தம் ராம நாமத்தின் மகிமையை உணர்த்துகிறது.
இந்த சம்ஸ்கிருத பஜனைப் பாடலை சித்திரவீணை இசைக் கலைஞரான ரவிகிரண் அவரின் 12ஆவது வயதிலேயே எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை சிந்துபைரவி ராகத்தில் இசையமைத்திருக்கிறார். கர்னாடக இசை உலகில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் இரட்டையரான கிரண், நிவி (சான் டியாகோவில் வசிப்பவர்கள்) இதனை தயாரித்திருக்கின்றனர்.
இம்மாதம் 22 அன்று அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்படும் ராமர் கோயில் வைபவத்தை ஒட்டி இந்தப் பாடலை தன்னுடைய யூடியூப் தளத்தில் வெளியிட்டிருக்கிறார் ரவிகிரண். சுந்தர்குமாரின் சௌக்கியமான கஞ்சிரா வாசிப்பு, பாடலைக் கேட்கும் அனுபவத்தை இரட்டிப்பாக்குகிறது. பாடலை நீங்களும் பார்க்கலாம். கேட்கலாம். உடன் பாடலாம்!