

சித்தர்கள், அருளாளர்கள் என்கிற வாக்குப்படி பிறவியெடுத்த அருள் ஞானி ரெட்டியபட்டி சுவாமிகள். தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தில் இருந்து நாகலாபுரம் செல்லும் வழியில் ரெட்டியபட்டியில் வீரபத்திரர் - ஆவுடையம்மாள் தம்பதிக்கு, 1857ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு ‘சுப்பிரமணியன்’ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அவர் ஏட்டுப் படிப்பு படிக்காமலேயே அனைத்தையும் உணர்ந்தார். சிறிது காலம் கடந்ததும் ‘ரெட்டியபட்டி கிராமத்தை விட்டுப் புறப்படுக’ என்கிற அசரீரி அவரது காதில் ஒலித்தது.
அந்த அருள்வாக்குப்படி சுப்பிரமணியன், நடைப்பயணமாக திருச்செந்தூர் சென்றார். திருச்செந்தூரில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து திருக்காட்சி அருளினார். ‘ஆடி வருவாய் மயிலே... தேடி வருவாய் மயிலே’ என முருகப்பெருமான் அருளால் கவிபாடினார். சிறிது காலம் சென்றதும் திருச்செந்தூரில் தங்கி யிருந்த சுப்பிரமணியனுக்கு, ‘மதுரை செல்க’ என்கிற அருள்வாக்கு காதில் கேட்டது.
சித்தன் போக்கு சிவன்போக்கு என்றபடி மதுரைக்கு வந்தவர், மீனாட்சி அம்மன் சந்நிதிக்கு எதிரே பலசரக்கு கடை வைத்திருந்த திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த உருண்டை மீரான் மொகைதீன் என்கிற இஸ்லாமியர் கடையில் கணக்குப் பிள்ளையாக வேலைக்குச் சேர்ந்தார்.
ஒரு நாள் வைகையாற்றில் மூழ்கிக் குளித்தபோது நீருக்குக் கீழே ஒரு பொருள் கிடப்பதை உணர்ந்த சுப்பிரமணியன், அருகே குளித்துக்கொண்டிருந்தவர்களை அழைத்து அந்தப் பொருளை எடுத்தார். அது விநாயகப் பெருமானின் திருவுருவச்சிலை. அந்தச் சிலையை வைகையாற்றின் கரையில் பிரதிஷ்டை செய்து ‘பரிபூரண விநாயகர்’ என்று பெயர் சூட்டினார்.
அம்பாள் ஆசியும் செந்தூர் முருகப்பெருமான் அருளும் கிடைத்த சுப்பிரமணியனுக்கு பரிபூரண விநாயகரின் அருளும் சேர்ந்து கிடைத்தது. முழுமையான தவநிலைக்குச் சென்றார். தவத்தின் முதிர்ச்சியால் சித்த மருத்துவம் கைகூடியது.
பலசரக்கு கடைக்கு வரும் அன்பர்களின் குறைகளைக் கேட்டு, மனதளவில் உள்ள பிரச்சினைகளையும் உடல் அளவில் உள்ள நோய்களையும் தீர்த்து ஆசி வழங்கினார். சுவாமியின் பெயரை அறியாத மதுரைக்காரர்கள் அவரின் வல்லமையை பார்த்து மகிழ்ந்து அவரது ஊர்ப் பெயர் வைத்து ‘ரெட்டியபட்டி சுவாமிகள்’ என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே காலப்போக்கில் சுப்பிரமணியனை ‘ரெட்டியபட்டி சுவாமிகள்’ என்று அழைக்கும் வழக்கமாயிற்று.
பஞ்ச பூதங்களில் முக்கியமானது நீர். நீரை வைத்துப் பல நோய்களைக் குணமாக்கினார் ரெட்டியப்பட்டி சுவாமிகள். இறைவன் ஆணைப்படி தனது பக்தர்களுக்கு அருள் சட்டம் ஒன்றை இயற்றினார். ‘சிவன், திருமால், அல்லா, பரமபிதா என்று பலர் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் ஒரே பரம்பொருளைச் சாரும்.
மற்றவர்கள் பின்பற்றும் சமயங்களையும் மதங்களையும் இகழ்வது மாபெரும் பாவச்செயலாகும். மதுபானங்கள் போன்ற தீயப்பழக்கங்கள் உள்ளவர்கள் அவற்றிலிருந்து முழுமையாக விடுபட்ட பின்னரே அருள் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை விரதமிருந்து வந்தால் வினைகள் கழியும். விரதங்கள் அவரவர் பழக்கத்துக்கு ஏற்ப இருக்கலாம்’ எனப் பல அருள் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளார்.
ரெட்டியபட்டியில் மார்கழி மாதம் அனுஷம் நட்சத்திர (12.01.1923) தினத்தில் ஜீவ ஒடுக்கமானார் ரெட்டியபட்டி சுவாமிகள். தான் ஒடுக்கமாவதற்கு முன்பு தனது திருமேனி மேல் சிவலிங்கம் ஒன்றையும் விநாயகப் பெருமான் திருவுருவச்சிலை ஒன்றையும் பிரதிஷ்டை செய்யக் கட்டளையிட்டார். அதன்படி ரெட்டியபட்டியில் சுவாமிக்குத் திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
‘இந்த உடலில் குடிகொண்டிருக்கும் உயிர், ஊழ்வினையைக் கழிக்கவே பிறவி எடுக்கிறது. அதுவே பிறவிதோறும் தொடர்ந்துவருகிறது. பரிகாரங்கள், பிராயச்சித்தமாகி முழுவதும் வினைகள் அகல ஜீவ ஒடுக்கத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் சித்தர்களை தரிசித்தால், வினைகள் பிறவிதோறும் தொடர்ந்து வராது’ என்பது சுவாமிகளின் வாக்கு. இக்கோயிலில் மூலவராக ரெட்டியபட்டிசுவாமி சிலையும் வலதுபுறம் தனி சந்நிதியில் விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சுவாமிக்கும் விநாயகருக்கும் உற்சவர் சிலைகளும் உண்டு. குருபூஜையின்போது சுவாமிகள், விநாயகர் தனித்தனி யானை வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த ஜனவரி 8 அன்று அனுஷ நட்சத்திரத்தில் இங்கே குருபூஜை நடைபெற்றது.
- gomathivinayagam.s@hindutamil.co.in