

படைத்தவன் ஒருவனே. எத்தகைய ஏற்றத்தாழ்வும் படைப்பில் இல்லை. ஆண், பெண், செல்வந்தர், ஏழை என எத்தகைய பாகுபாடும் இறைவன் பார்ப்பதில்லை. அனைவரும் இறைவனுக்கு முன் சமமானவர்கள். “மனிதர்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்” என்று சொல்கின்றது திருமறை. பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, கேட்டால் தீட்டு, பேசினால் தீட்டு என ஒரு மனிதனைச் சக மனிதன் உதாசீனம் செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
சாதி, மதம், நிறம், இனம், பாலினம், வர்க்கம் என எல்லாத் தளங்களிலும் தீண்டாமை இன்றைய முன்னேறிய சமூகத்திலும் ஊடுருவி இருக்கின்றது. தீண்டாமை எனும் அநீதியை ஒழிக்க இஸ்லாம் எனும் ஏக இறைவழி தோள்கொடுக்கின்றது. தீண்டாமையை எதிர்த்துக் குரல் கொடுத்தச் சமூகப்போராளிகளின் பரிந்துரையும் அதுவாகவே இருந்தது.
தோளோடு தோள் நிற்போம்: இஸ்லாமியரின் கடமைகளுள் ஒன்றான தொழுகை, கூட்டமாகத் தோளோடு தோள் நின்றே தினந்தோறும் ஐந்து வேளையும் நிறைவேற்றப்படுகின்றது. குழுவாக நின்று தொழுகை செய்வதே சிறப்பானது. காலைநேரத் தொழுகையும் இரவு நேரத் தொழுகையும் குழுவாக நின்றே நிறைவேற்றப்பட வேண்டும் என்று அண்ணல் நபி வலியுறுத்தியுள்ளார். அவர் அவ்வாறு செய்யாதவரைக் கண்டித்துள்ளார்.
தொழுகைக்காக பள்ளி வாசலில் நம்பிக்கையாளர் யார் வேண்டுமானாலும் நுழையலாம். அதில் பேதம் ஏதும் இல்லை. ஒருவரோடு ஒருவர் நெருங்கி நின்று தொழுவதால்தான் பெண்களை ஆண்களோடு சேர்ந்து நின்று தொழுகை செய்ய அனுமதிப்பதில்லை. தொழுகையின் இலக்கு அங்கு தவறிவிடும். ஆனால், பெண்கள் குழுவாகத் தொழுகை செய்யப் பள்ளிவாசலில் தனி இடம் உண்டு.
தொழுகைநேரத்தின் அறிவிப்பு பாகுபாடின்றி எல்லோருக்குமானது. ஒரே நேரத்தில் பொதுவான முறைப்படி இறைவனை வணங்க இஸ்லாத்தில் வழிவகுக்கப்பட்டிருக்கின்றது. ஏக இறைவனை வணங்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலனை இறைவன் அருள்வான். அது சொர்க்கமாக இருக்கும். இறைவன் சொல்கிறான், “என்னையே அழையுங்கள்.
நான் உங்கள் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன்” (திருக்குர்ஆன் 40:60). “நிச்சயமாக அல்லாஹ் பெருமையடித்துக் கர்வங் கொள்வோரை நேசிப்பதில்லை”(திருக்குர் ஆன் 4:36) மேலும் அவன் பின்வருமாறும் அறிவிக்கிறான், “உங்களை நீங்களே புனிதர்களாகக் கருதி விடாதீர்கள்” (திருக்குர்ஆன் 53:32).
அண்ணல் நபி, இறைவனின் தூதராக இருந்தபோதும் அவரும் மற்ற மனிதர்களைப்போல வாழ்ந்தார். வாணிபம் செய்தார், இல்லற வாழ்க்கையில் மகிழ்வோடு ஈடுபட்டிருந்தார், தனது பணிகளை அவரே செய்து கொண்டார். ஒருபோதும் அவர் தன்னை உயர்வாக எண்ணவில்லை. இன்னும் ஒருபடிமேல் சென்று, “அரபு அல்லாத வேறு மொழி பேசுபவரைவிட, அரபு மொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை.
அரபுமொழி பேசுபவரைவிட அரபு அல்லாத வேறு மொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை” என்றார் அண்ணல். (அஹ்மது 22391) இஸ்லாம் பிறந்த இடம் அரபு தேசம். திருக்குர்ஆன் மொழியப்பட்டதும் படியெடுக்கப்பட்டதும் அரபுமொழியில்தான். அத்தகைய சிறப்பு கொண்ட அரபு மொழியையும் அந்நிலத்தின் மக்களையும் அண்ணல் உயர்வாகக் கருதவில்லை. உலக மக்கள் அனைவரையும் அவர் சமமாகக் கருதினார்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் திருக்குர்ஆன் ஓதுவது தடை செய்யப்படவில்லை. அண்ணல் நபித் தோழர்களின் காலத்தில் வாழ்ந்த இப்ராஹீம் அந்நகயீ என்னும் இஸ்லாமிய சட்ட அறிஞர், மாதவிடாய்ப் பெண் குர்ஆன் வசனங்களை ஓதுவதில் எந்தக் குற்றமுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணலின் மனைவிகளுள் ஒருவரான ஆயிஷா, “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குரானை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி 297) என்று பதிவு செய்திருக்கிறார்.
திருக்குர்ஆன், மாதவிடாயை ‘ஓர் இடையூறு’ என்றே குறிப்பிட்டிருக் கின்றது. அந்த நேரத்தில் பெண்கள் தொழுகையையும் நோன்பையும் விட்டுவிட அறிவுறுத்தப்பட்டனர். ஹஜ் செய்யும் போது கஅபத்துல்லாஹ்வைச் சுற்றி வருவதைத் தவிர, மற்ற ஹஜ் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மாதவிடாய் காலத்தில் ஐந்து நேரத் தொழுகை செய்யவும் நோன்புக்காலத்தில் நீர்கூட அருந்தாமல் நோன்பைக் கடைப்பிடிக்கவும் ஹஜ்ஜின்போது, ஏழுமுறை கஅபத்துல்லாஹ்வைச் சுற்றவும் பெண்களின் உடல் வலு குறைந்துசோர்வுற்று இருக்கும் என்கிற எண்ணமே அதற்குக் காரணமாக இருக்கலாம்.
மாதவிடாய் காலத்தில் இருந்தபோது, தான் வாய்வைத்து நீர் அருந்திய குவளையின் அதே இடத்தில் அண்ணல் வாய்வைத்து நீர் அருந்தியதாக ஆயிஷா குறிப்பிட்டுள்ளார். ஆதாமின் பெண் மக்கள் மீது இறைவன் விதித்த ஒன்றுதான் மாதவிடாய் என்று அண்ணல் கூறுகிறார். அதைத் தீட்டு என்று கருதிப் பெண்களைத் தனிமைப்படுத்தி ஒதுக்கவில்லை இஸ்லாம். தீட்டும் தீண்டாமையும் பார்க்காத மாசில்லா மார்க்கம் இஸ்லாம்.
(தொடரும்)
- bharathiannar@gmail.com