

‘ஸ்ரீ காஞ்சி பேரருளாளன்’ என்கிற ஆன்மிக மாதப் பத்திரிகையின் நிறுவனரான திருப்புட்குழி ஸ்ரீ லட்சுமிகுமார தாத தேசிகனின் வம்சாவளியில் 1823ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் திருப்புட்குழி சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ண தாதாசார்ய மகாதேசிகன் பிறந்தார். சிறுவயதில் அழுகையை நிறுத்தாமல் இருந்த இவர், காஞ்சிபுரம் பெருந்தேவித் தாயாருக்கு நிவேதனம் செய்த பாலை அருந்தியதும் தன் அழுகையை நிறுத்திக்கொண்டதால் தெய்வக் குழந்தையாகவே போற்றப்பட்டார்.
தனது 12ஆவது வயதுக்குள் அனைத்து வேத சாஸ்திரங்களையும் பயின்றார். காவ்ய நாடகங்களைப் பயின்றாலும் அவற்றில் உள்ள சுலோகங்களிலேயே அவரது கவனம் இருந்தது. ஹயக்ரீவரின் அருள் பெற்றவராகப் போற்றப்பட்ட திருப்புட்குழி சுவாமி, பண்டிதர்கள் பலரிடம் இருந்து ஜோதிடம், சங்கீதம், அத்வைதம், த்வைதம், ஸாங்க்யம், யோகம், பரத சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். இவர் காஞ்சிபுரத்தில் பலருக்கு அத்வைத, த்வைத பயிற்சியை அளித்துவந்தார்.
மைசூர் ராமா சாஸ்திரி போன்ற வேதவிற்பன்னர்களை வாதத்தில் வென்ற திருப்புட்குழி சுவாமி, சத்ய சந்திரிகை, பரமுகா பேரிகை ஆகிய கிரந்தங்களை எழுதியுள்ளார். தர்க்க, மீமாம்ஸ, வேதாந்த, தர்ம சாஸ்திரங்களில் பல கிரந்தங்களை எழுதியுள்ளார்.
ஸ்ரீமத் பிள்ளைப்பாக்கம் அழகிய சிங்கரும் ஸ்ரீமத் பௌண்டரீகபுரம் சுவாமியும் பூர்வாச்ரமத்தில் திருப்புட்குழி சுவாமியிடம் வேதம் பயின்றுள்ளனர். ஸ்ரீமத் அண்ணயார்ய மகாதேசிகன் உள்ளிட்ட மகான்களும் தமது சிஷ்யர்களை திருப்புட்குழி சுவாமியிடம் அனுப்பி அவர்களது ஐயத்தை அகற்றிக்கொள்ளச் செய்தனர்.
அண்மையில் சென்னை, தரமணியில் அமைந்துள்ள அஸ்மத் சுவாமி ஸ்ரீநரசிம்ம தாதயார்ய மஹாதேசிகனாரின் திருமாளிகையில் ஸ்ரீஹயக்ரீவ வித்யாபீடம் மற்றும் ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகை சார்பில், திருப்புட்குழி சுவாமியின் 200ஆவது திருநட்சத்திர மகோற்சவம் நடைபெற்றது.
இதில் திருநட்சத்திர சிறப்பு மலர், தமிழ் எழுத்துகளில் பதிக்கப்பெற்று 3,000 பக்கங்களில் ஏழு தொகுதிகளாக அமைந்த கிருஷ்ண யஜூர்வேத தைத்திரிய க்ரம பாடம், தமிழ் எழுத்துகளில் பதிக்கப்பெற்ற திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிய திருவாறாயிரப்படி, அஸ்மத் சுவாமி அருளிய விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் ஆகியன வெளியிடப்பட்டன. மேலும், வேத, பிரபந்த, சாஸ்திர விற்பன்னர்கள் 100 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.