

அன்பும் அறனும்தான் இல்லறத்தின் பண்பும் பயனும் என்றார் வள்ளுவர். இஸ்லாமும் அதையே வலியுறுத்துகின்றது. குடும்ப வாழ்வுக்கு இன்சொல்லும் இன்முகமும் இன்றியமையாதவை. எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் ஜகாத் (தர்மம்) கொடுப்பது இஸ்லாமியரின் ஐந்து கடமைகளுள் ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. வசதிபடைத்தவர் தம்மனதைத் தூய்மையாக்கிக் கொள்ளும் வழியும் அதுவே.
எளியவர்களைப் பொறுத்தமட்டில் புன்னகை புரிவதே தர்மம்தான் என்கிறார் அண்ணல். பணமோ, பொருளோ கொடுப்பதற்கு இல்லாவிட்டாலும் இன்முகத்துடன் ஒருவரை எதிர்கொள்வதும் தர்மத்தில் அடங்கும். புன்னகையுடன் ஒருவரைப் பார்ப்பதென்பது நேர்மறையான எண்ணத்தை உருவாக்கக்கூடியது. அவ்விருவருக்கும் இடையிலான உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
அண்ணல் நபியின் மனைவி ஆயிஷா, ‘பெரும்பான்மையான சமயங்களில் அண்ணல் புன்னகை புரிபவராக இருந்தார்கள்’ எனச் சொல்கிறார். இறைவனின் உயர்ந்த கட்டளையை ஏற்றுக்கொண்டவர் நபி. அடிப்படை நல்லறம் எது என்பதை உணர்ந்து மக்களுக்குச் சொல்லியிருக்கிறார்.
சிரிக்கத் தெரிந்த மனிதகுலம் அதை மறந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அண்ணல் நபியின் நற்பண்பு, புன்னகையின் அவசியத்தை உணர்த்துகிறது. வகுப்பறையில் ஓர் ஆசிரியர் புன்னகையுடன் நுழைந்தால் குழந்தைகளின் கற்றல் இனிமையானதாக இருப்பதைப்போல, குடும்பம் மட்டுமல்லாது பணிபுரியும் இடத்திலும் இன்முகம் இன்பம் பயக்கும்.
சிரியுங்கள்; சிரிக்க வையுங்கள்: அன்னியருடன் புன்னகையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கூறிய நபி, பிறந்தகம் விட்டுத் தம்முடனேயே ஒரே வீட்டில் வாழ்வைக் கழிக்கும் மனைவியிடம் புன்னகையுடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியமானது என்கிறார். அதையே ஆயிஷாவும் உறுதி செய்துள்ளார். “நபி, வீட்டில் சிரிப்பவராகவும் சிரிக்க வைப்பவராகவும் இருப்பார்கள். எங்களுடன் அமர்ந்து பேசுவார்கள். நாங்களும் பேசுவோம்.” என்று ஆயிஷா கூறுகிறார்.
ஒரே ஆன்மாவிலிருந்து ஆணையும் பெண்ணையும் படைத்ததாக இறைவன் சொல்கிறான். எனில் உணர்வுகள் ஒன்றுதானே! அவற்றை மதிப்பதே நல்லறம். உறவுகளைப் பேணுவதிலும் கவனமாக இருக்கச் சொல்கிறது திருக்குர்ஆன். எப்படி உறவுகளைப் பேணுவது? கடுகடுத்த முகத்துடன் மனைவியும் கணவனும் ஒரே வீட்டில் இருக்கும்பட்சத்தில், குழந்தைகளின் எண்ணவோட்டம் சொல்லொணாத் துயரத்தில் இருக்கும்.
இறுக்கமான சூழலில் மகிழ்வும் நெகிழ்வும் அக்குழந்தைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. “நீங்கள் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக உங்கள் இனத்திலிருந்தே உங்களுக்கு அவன் துணைகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும்” என்கிறது திருக்குர் ஆன் வசனம் 30:21.
தன் செல்வத்திலிருந்து மனைவிக்கு செலவு செய்யும் கடமை கணவனுக்கு உண்டு. அதைவிட முக்கியமானது தன் துணையின் மீதான நம்பிக்கை, புரிதல், இணக்கம், பாதுகாப்பு அளித்தல், பகிர்தல், உண்மைத்தன்மை ஆகியவை. “உங்களில் சிறந்தவர்கள் உங்கள் பெண்களுக்குச் சிறந்தவர்களே” என்று திர்மிதி 1162இல் நபிமொழி இடம்பெற்றிருக்கிறது. மனைவியிடம் நற்பெயர் வாங்குவதே ஆகப்பெரும் சிறப்பு என்கிறார் அண்ணல்.
‘தன் ஆடைகளைத் தானே துவைத்தும், தன் காலணிகளை தானே தைத்தும் கொண்டதுடன் மட்டுமல்லாமல் வீட்டு வேலைகளிலும் அண்ணல் நபி உதவுவார்’ என ஆயிஷா ஹதீஸில் பதிவு செய்திருக்கிறார். இல்லறத்தில் ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தன் வாழ்வின் தருணங்களை உதாரணமாகக் கொடுத்திருக்கிறார் அண்ணல். குடும்பத்தில் பெண்ணின் இருத்தலை இதைவிட எளிதாக்கிட யாரால் இயலும்?
மலர்ந்த முகத்தைக் காட்டுங்கள்: கணவனுக்கு இருப்பதைப்போலவே மனைவிக்கும் பல கடமைகள் இருக்கின்றன. கணவன் சம்பாதிப்பதை நல்வழியில் செலவு செய்வதும், இன்முகத்துடன் கணவனையும் குழந்தைகளையும் சிறந்த முறையில் பேணுவதும் மனைவியின் கடமை. மனைவியிடம் கணவன் எதிர்நோக்குவது அவள் உண்மையானவளாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. மனைவிக்குக் கணவனும் கணவனுக்கு மனைவியும் உண்மையாக இருப்பதே இறைவனுக்கு அணுக்கமாக்கும் செயலாகும்.
ஓர் ஆண் பலதார மணம்செய்ய இஸ்லாத்தில் இடமிருந்தாலும் நடைமுறையில் அது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் மனைவியிடம் சிறந்தவர் எனும் பெயர் வாங்குவது எளிதல்லவே. மனைவிகளிடையே நீதியின்றி ஏற்றத்தாழ்வோடு நடப்பவர் இறைவனின் வெறுப்புக்கு ஆளாக நேரும். நீதியோடு வாழமுடிந்தால் மட்டுமே பலதார மணம் அனுமதிக்கப்படுகின்றது.
நபிவழியில், தனக்குப் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அன்பும் ஆதரவும் கொடுக்கும் கணவன், ஏதேனும் ஒரு சூழலில் கடிந்து கொண்டால் மனைவி, அதை அவதூறாக பிறரிடத்தில் கூறாமல் இருப்பதும் மனைவியின் கடமைகளுள் ஒன்றாகும்.
“நம்பிக்கைகொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் உதவியாளராக இருக்கிறார்கள்” எனும் திருமறையின் வசனம் இல்லறத்தின் இலக்கணத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றது.
(தொடரும்)