

பல கோடி மக்களின் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட நூல், ‘ஒரு யோகியின் சுயசரிதம்’. உறங்கிக்கொண்டிருக்கும் ஆன்மாக்களை வழிநடத்த, பிறவி நோக்கம் உணர்ந்த பரமஹம்ஸ யோகானந்தர் கிரியா யோகம் பயில்வித்து, பூமியில் இருந்து மறைந்த பிறகும் இறைபணியைத் தொடர்வது பற்றிய கதைதான் ‘ஒரு யோகியின் சுயசரிதம்’.
‘ஆப்பிள்‘ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், தனது இரங்கல் கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் ஒரு நண்பனின் கடைசி பரிசாக இந்த நூலை வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாறே அவரது ஆசை நிறைவேற்றப்பட்டது என்பது ஒரு செய்தி. அந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. அந்தப் புத்தகத்தின் காந்த சக்தியும், கிரியா யோகம் பற்றிய பெரும் ஆவலும் என்னையும் விட்டுவைக்கவில்லை.
ராஞ்சியில்தான் முதன்முதலில் அவர் பள்ளி ஆரம்பித்தார் என்பதைப்படித்துவிட்டு, அந்த ஆசிரமம் செல்ல முடிவெடுத்தேன். ஆனால் அந்த நூலைப் படித்த 2 ஆண்டுகள் கழித்தே அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கிரியா யோகத்தை வைத்து வர்த்தகம் நடத்தும் ஒரு மடமாக இருக்கும் என்றுதான் முதலில் கருதி இருந்தேன்.
ஆனால் அங்கோ, வந்திருப்பவர்களை வளைத்துப்போட என்று, பயிற்சி கொடுத்து யாரையும் அமர்த்தவில்லை. ஆன்மிகப் பசியில் அலைந்து வரும் ஆத்மாக்களின் பசியைத் தீர்ப்பதே கிரியா யோகம் என்று புரியவைத்தனர்.
குருவின் கட்டளைக்கு இணங்கி, அவரது போதனைகளின் புனிதத் தன்மையும், மூலப் பண்பும் குறையாமல் யோகதா சத்சங்க துறவிகள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் இறைப் பணியைக் காத்து வருவது வியப்புக்குரியதே.
‘ஆன்மிகப் பாதையை பின்பற்றும் அளவுக்கு நான் பரிசுத்தமானவன் அல்ல’ என்று நினைப்போருக்குக்கூட இறைவனின் பேரன்பு என்கிற உண்மைத்தன்மையை உணர்த்தி, பயிற்சியைத்தொடங்கினாலே ஒருவேளை இப்பிறவியில் இல்லாவிடிலும் அடுத்தபிறவிகளில், இறைவனை அடையும்தகுதியைப் பெறலாம்என்று நம்பிக்கையூட்டி இந்நூலில் வழி நடத்துகிறார் பரமஹம்ஸ யோகானந்தர்.
தான் வாழ்ந்த காலத்தில், பாரதம் உள்பட உலகம் முழுவதிலும் இருந்த அனைத்து ஞானிகளையும் போற்றினார். தெரஸா நொய்மன், ஆனந்தமயி மா, ரமண மகரிஷி, மகாத்மா காந்தி, காஷிமோனி லாஹிரி (அவரது குருவின் குருவான லாஹிரி மஹாசயரின் துணைவியார்), கிரிபாலா என இறைஞானம் பெற்ற பலரையும் பரமஹம்ஸ யோகானந்தர் பயபக்தியுடன் சந்தித்தது பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் 1893ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பிறந்த பரமஹம்ஸ யோகானந்தர், சிறு வயதில் இருந்தே இறைத் தேடலில் மும்முரமாக ஈடுபட்டு, சுவாமி யுக்தேஸ்வர்தான் தன்னை வழிநடத்த வந்த சத்குரு என்று உணர்ந்து, தன் வாழ்க்கையை அவர் கையில் ஒப்படைத்தார்.
‘‘முதுமையால் நோய்வாய்ப் படாமல், பாரதப் பெருமையைப்பேசியவாறே, எனது காலணிகளை அணிந்தவாறே இந்தத் தேகத்தை உதிர்ப்பேன்’’ என்று முன்பே கூறியிருந்தார். அவ்வாறே, அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இந்தியத் தூதர் ஹெச்.ஈ.பினய்.ஆர்.சென்னுக்கு மரியாதை நிமித்தமாக விருந்து அளிக்கும் விழா 1952ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பரமஹம்ஸ யோகானந்தர், தான் இறுதியாகப் படிக்க வேண்டும் என்று ஏற்கெனவே எழுதி வைத்திருந்த பாரதம் பற்றிய கவிதையை வாசித்து முடித்ததும், தேகத்தை உதிர்த்து மகா சமாதி அடைந்தார்.
அகந்தையால் (உடலோடு ஐக்கியப்படும் தன்மையால்) எழும் பகுத்தறிவு கொண்டு படிப்போருக்கு இந்தப் புத்தகத்தில் வர்ணிக்கப்படும் சம்பவங்கள் நம்ப முடியாதவையாக இருக்கலாம்.
ஆனால், ஆன்மாவின் குரலை மேலோங்கச் செய்து, தனது ஆளுமையை மேன்மையாக்க படிக்கும்போது அந்தச்சம்பவங்களின் பின்னால் இருக்கும் பொருள் விளங்கும். சுயஆய்வு செய்து தம்மைத் தாமே வடித்துக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கும்.
பிணி, மூப்பு, இறப்பு கண்டு தன் ஆசையைத் துறந்து ஞானம் தேடிய சான்றோர் வாழ்ந்த பூமி இது. அன்று புத்தரின் கொள்கையும் உலகை ஆண்டது. கடந்த நூற்றாண்டில் அமைதியாக ஓர் ஆன்மிகப் புரட்சி, கிரியா யோகம் மூலம் குரு மற்றும் அவரது பரமகுருக்கள் மூலம் தொடங்கிய இறைப்பணி புவியுள்ளவரை வாழும்!
- கட்டுரையாளர்: இந்திய காவல் பணி அதிகாரி; mailtokarthiks@gmail.com