

நிறைவே பெரும்செல்வம்
நிம்மதியே சந்நிதி!
இறையோ பெரும்நேயம்
இதையுணர்வதே கல்வி
யாருக்கு வருகிறது நிறைவு? எவர் அனுபவிக்கிறார் நிம்மதி?
இந்த உலக வாழ்க்கையில் எதுவுமே நிலையில்லை என்பதை உணர்பவர். இருக்கும் வரைக்கும் விதிக்கப்பட்ட கடமையை விருப்பு வெறுப்பின்றிச் செய்பவர். ஏதோவொரு விதத்தில், இயன்ற வரையில் பிறருக்கு உதவி செய்பவர்.
“உனக்கும் கீழே உள்ளவர் கோடி” என்பதை அறிந்து இருப்பதே போதும் என்கிற முடிவுக்கு வருபவர். அவருடைய நெஞ்சில்தான் குடியிருக்கும் நிம்மதி. அதுவே ஆண்டவன் விரும்பிக் கோயில் கொள்ளும் சந்நிதி.
“உன் வாழ்க்கையின் எந்தத் தருணத்திலும், இறைவனுக்கு நன்றிசொல்ல உனக்கு நானூறு காரணங்களாவது இருக்குமென்பதை மறக்காதே!’’ என்பார் என் குருநாதர். அறியாமையால் தடுக்கி விழுந்து, அவருடைய அருளால் என்னுள் பதிந்த மிகப்பெரிய பாடம் இதுதான்.
எண்ணும் எழுத்தும் தீர்ந்தவொரு
ஏகாந்தத்தின் விளிம்பினிலே
கண்கள் மல்கக் கைகூப்பி
கடவுள் முன்னே நிற்கின்றேன்
எதையோ சாதித்தேன் என்னும் பெருமிதமோ, எதையாவது சாதித்தேதீரவேண்டுமென்கிற வெறியோ இல்லாமல், என் நண்பன் பா.வீரராகவன்பாடியதுபோல், “உன்னருள் உன்செயல்உன்கடனே” என்று நிற்கிறேன். எனக்கென்ன தெரியும், என்னவெல்லாம் தெரியாது, இந்த இரண்டுக்குமே பொருளின்றிப் போய்விட்டது.
‘எதற்கடா அடிக்கடி இமய மலைக்குச் செல்கிறாய்?’ என்று நண்பர்கள் கேட்பார்கள். ‘நான் ஒன்றுமில்லை’ என்று தெரிந்துகொள்ளத்தான் என்பேன். ‘அட, இதைத் தெரிந்துகொள்ள அவ்வளவு தொலைவு செல்லவேண்டுமா?’ என்று கிண்டலடிப்பார்கள். உண்மைதான்.
நான் ஒன்றுமில்லை என்பதை எங்கோ போய்த் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? ஆனால், இமயமென்னும் அந்தப் பகட்டில்லாத மகா கம்பீரத்தின் முன்பு நிற்கும்போதுதான் எனது அற்பத்தின் விஸ்வரூபம் ஒரு குமிழியாக வானளாவிச் சிதறிய போதுதான், நான் ஒன்றுமில்லை என்பதற்கப்பால், நான் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தேன்.
எனது அறியாமையின் தரிசனமே எனக்கு இத்தனை அமைதியையும், ஆனந்தத்தையும் தருமானால், ஆண்டவனின் தரிசனம் எப்படி இருக்குமோ! அந்தத் தரிசனம் நேரும்போது அதுவும் தமிழில் வந்து நேர்வதாக!
ஆணவமே துன்பம்: ஒருபுறம் என் குருநாதர். இன்னொரு புறம் திருவள்ளுவர். அவருக்கு இவர் விளக்கமாகவும், இவர் வாசகங்களுக்கு அவர் இலக்காகவும் எனக்குத் தோன்றாத் துணையாகத் தொடர்ந்து இருக்கிறார்கள். ‘பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை,’ ‘யாதனின் யாதனின் நீங்கியான்', ‘யானென தென்னும் செறுக்கறுப்பான்' போன்ற மின்னல் வரிகள் வார்த்தைகளால் ஆனவை அல்ல. அவை மனத்தை ஊடுருவி, ஆன்மாவை விழிக்கச் செய்யும் குருமொழிகள். துளைக்கும் விழிகள். தொடரும் வழிகள்.
“அஹங்காரமே துக்கம்" என்றார் என் குருநாதர். ஆணவத்தின் விளைவல்ல துயரம், ஆணவமே துன்பம் என்பதைப்புரிந்துகொண்டேன். கல்வியால் தெரியப்போவதில்லை கடவுள். கர்ம வினையால் மறையப் போவதுமில்லை இறை. ஆணவமே தடை. ஆணவமே திரை. ஆணவமே மாயை. அது நீங்கினால் அதே இடத்தில் தெரிவதுதான் கடவுள்.
வருவதல்ல கடவுள், தெரிவது. தெரிவது கண்களாலல்ல, உணர்வால். உணர்வது மனத்தாலல்ல, மனமும் புரிந்துகொள்ளும்படி தயைபுரியும் ஆன்ம விழிப்பால்.
மனிதன் எப்போது தெய்வமாவான்? - ஆணவத்தையும் விடாப்பிடியாக வைத்துக்கொண்டு ஒருவன் அமைதி யாகவும், ஆனந்தமாகவும் இருக்க வாய்ப்பே இல்லை. அமைதியும், ஆனந்தமும் இல்லாதவன், பிறருடைய நிம்மதியைக் கெடுக்காமல் இருக்கவும் வாய்ப்பே இல்லை. இவ்விதம் ஒருவன், எதையுமே ஆள்கின்ற நிலையாமையை முதலில் ஆழ உணரவேண்டும். அதன்வழியே, நிறைவு என்னும் பெருஞ்செல்வத்தை அடையவேண்டும்.
அதன் விளைவாக எழும் நீடித்த நிம்மதியில் திளைக்கவேண்டும். அப்போது, அந்த மனிதனின் அடித்தளத்தில் அமைதியும் அதன் வெளிப்பாடாய் ஆனந்தமும் அமையும். அது, அவனுடைய முயற்சியில்லாமலேயே பிறரைத் தொடும். சக மனிதர்கள் மட்டுமல்ல, பிற உயிர்களையும், சூழ்நிலைகளையும் அது மருவும். அங்குதான் மனிதன் தெய்வமாகிறான்.
`கடவுள் தேவையா?' என்று கேட்பது, `நதியே நீயெனக்குத் தேவையா?' என்று மீன் கேட்பது போலத்தான்! `கடவுள் நம்பிக்கை தேவையா?' என்கிற கேள்விக்கும் இதே பதில்தான். `நன்றி' என்பதை நீங்கள் ஒரு ‘வாய்ப்பாகக்’ கருதுவீர்களோ அல்லது கடமையாகக் கொள்வீர்களோ அது உங்கள் விருப்பம்! ஆனால், `கடவுள் என்பது என்ன?' என்பதை அறிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் தலையாய தேவை என்றே நான் புரிந்து கொள்கிறேன்.
இல்லையென்றால், `அறிவுக்குப் பொருளே இல்லை' என்கிறாரே வள்ளுவர்! ‘வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின், கற்றதனால் ஆய பயனென்கொல்?’ என்று எத்தனை காட்டமாகவும் கருணையோடும் கேட்கிறார்!
நம்புவதே வழி நானறிந்தேன்! என்றன்
நாதனே! உன்னருள்! நான் பிழைத்தேன்!
என்றிருக்கிறேன் நான். எந்தவிதச் சிறப்புமில்லாதவன். ஆனால்,எல்லா விதங்களிலும் பாக்கியவான் என்பதை உணர்ந்து நாணமும், நன்றியுமாய் வாழ்கிறேன். என்னுடைய புறச்சூழ்நிலைகளால் பாதிக்கப் படாமல் என் அகப்பயணம் இனிதே தொடர்வதும், அதற்கேற்பப் புறச்சூழ் நிலைகள்கூட மாறுவதும் நான் முயன்று பெறாத, எனக்கு வழங்கப்பட்ட பாக்கியங்களே!
உடம்புக்கு வயதேறும். அது மெல்ல மெல்லத் தேயும். குறித்த வேளையில் விழும். அது விழும்முன்னே, ஆணவம் முற்றிலும் விழுந்தொழிய வேண்டுமென்பதே என்னைப் பற்றி எனக்கிருக்கும் ஒரே கோரிக்கை. மற்றபடி, இந்தத் தேச நலனுக்கும், அறத்தின் வெற்றிக்கும், பிறர் நலனுக்குமான பிரார்த்தனைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
என்னைத் தொட்ட இறையை நான் தொட்டுப் பார்ப்பதே கண்முன் கடவுள் தெரிவது. அது எந்தக் கணமும் நிகழக்கூடியது என்கிற விழிப்பும், எல்லாக் கணமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்னும் நம்பிக்கையும் சேர்ந்தே இருப்பதே என்னுடைய இந்தக் கணத்து வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்!
(நிறைந்தது)
- tavenkateswaran@gmail.com