

‘செங்கோலுடைய திருவரங்கச்செல்வனார்’ என்று ஆண்டாள் நாச்சியார் மங்களாசாசனம் செய்தபடி, என்றும் நீங்காத செங்கோலும் களைப்படையாத கஸ்துாரி திலகமும் பரமபதநாதனின் கௌஸ்துபம் போன்று திருமார்பில் விளங்கும் ஒப்புயர்வற்ற அற்புத நீலநாயகமும் கொண்ட அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருவரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கம். ‘பூலோக வைகுண்டம்’ என்றும் ‘பெரிய கோயில்’ என்றும் பக்தர்களால் போற்றப்படும் அரங்கன் பள்ளிகொண்ட ஆலயத்தில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள்தாம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் 21 நாள்கள் நடக்கும் ‘வைகுண்ட ஏகாதசி’ உற்சவம் அரங்கன் உற்சவங்களில் ஆதிச்சிறப்பு பெற்ற உற்சவமாகும்.
திருமங்கை மன்னன்: திவ்யதேசங்களின் பெருமையைப் போற்றிய 12 ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான திருமங்கையாழ்வார் என்கிற திருமங்கை மன்னர்தான், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார் என்பது வரலாற்றுச் செய்தி. திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு திருமங்கையாழ்வார், “நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியை வைகுந்தப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும்” என்று வரம் கேட்டார். அரங்கனும் திருமங்கையாழ்வாரின் விருப்பத்தை வரமாக அருளினார். அதன்படியே ஆண்டுதோறும் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியை மையப்படுத்தி வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா ஸ்ரீரங்கத்தில் 21 நாள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
திருவத்யயன உற்சவம்: ஏனைய பெருமாள் கோயில்களில் நடப்பது போலவே, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா ‘திருவத்யயன உற்சவம்’ என்னும் பெயரில் நடக்கிறது. திருநெடுந்தாண்டகம், ராப்பத்து, பகல்பத்து என 21 நாள்கள் நடக்கும் இந்நாள்களில் திவ்யப்பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களையும் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துத் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பெருமாள் முன்னர் அரையர்கள் பாடலைப் பாடியும் அதற்கான அபிநயத்தோடும் சேவை செய்வார்கள். இதுவே ‘அரையர் சேவை’ எனப்படும். இதனால், இந்த வைகுண்டப் பெருவிழா உற்சவத்திற்கு ‘திருவத்யயன உற்சவம்’ என்கிற சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. இதில் முதல் பத்து நாள்களில் திருமொழிப்பாசுரங்களும் அடுத்த பத்து நாள்களில் திருவாய்மொழிப் பாசுரங்களும் பெருமாள் முன்பு பாடப்பெறும். முன்னதாக, உற்சவத் தொடக்க நாளின் முதல் நாள் இரவு, பூர்வாங்க நிகழ்ச்சியாக ரங்கநாதர் மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வார் மன்னன் பாடிய திருநெடுந்தாண்டகம் பகுதி பாடப்படும். இந்த ஆண்டு பகல் பத்து உற்சவம் கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது.
பரமபத வாசல் திறப்பு: வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு வரும் 23ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. விடியும் வரை விழித்திருந்த லட்சக்கணக்கான கண்கள் பனிவிழும் அதிகாலை வேளையில் மகிழ்ச்சியால் பூக்கும் வகையில் பரமபத வாசல் திறக்க, அலங்காரப்பிரியன், நம்பெருமாள் பக்தர்கள் பின்தொடர பரமபத வாசலைக் கடப்பார். அப்போது அங்கே கூடியிருக்கும் லட்சக்கணக்கான திருமால் அடியவர்களும் ‘ரங்கா, ரங்கா’ எனப் பக்திப் பெருக்குடன் முழக்கமிட நாமே பெருமாள் அருளால் வைகுந்தத்தை அடைந்த பரம திருப்தி ஏற்படும்.
தமிழ்த் திருவிழா: மாலவன் தமிழ்க் கடவுள் என்பதை உறுதி செய்யும் வகையில் எந்த வைணவக் கோயிலில் பெருமாள் புறப்பட்டாலும் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்யப் பிரபந்த கோஷ்டியினர் முன் செல்வார்கள். அவ்வகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்தத் திருவத்யயன உற்சவம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்காகவே நடத்தப்படுவதால் இந்த உற்சவத்தை ‘தமிழ்த் திருவிழா’ என்பதும் தமிழுக்காகவே நடைபெறும் திருவிழா என்பதும் பெருமைக்குரியவை.