

இஸ்ரேலிய ராணுவத்துக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் உக்கிரமான போர் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில் வரலாற்றின் வேர்களை நோக்கிப் பயணப்பட்டால், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்கள்தாம். இந்தச் சகோதரச் சண்டையின் வேர், விவிலியக் காலத்தில் ஆதாம் - ஏவாளின் மகன்களான காயின் - ஆபேல் நாள்களில் தொடங்கியது. அதைத் தெரிந்துகொள்ள இறைமகன் யேசு ஒரு மனிதனாக ஏன் பூமிக்கு அனுப்பப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யேசு பூமியில் மனிதனாகப் பிறப்பதற்கு முன், ‘காண முடியாதபடி வானுலகில் வாழ்ந்துவந்தார்’ என்று யோவான் 8:23இல் குறிப்பிடுகிறார்.
‘யேசு, பூமியைப் படைத்த ஒரே கடவுளுடைய முதல் படைப்பாக இருந்தார்; மற்ற எல்லாவற்றையும் படைப்பதில் கடவுளுக்கு உதவியாக இருந்தார். அவர் மட்டுமே ஏக இறைவனாகிய வானுலகத் தந்தையால் நேரடியாகப் படைக்கப்பட்டார்; அதனால்தான், கடவுளுடைய ‘ஒரே மகன்’ என அழைக்கப்படுகிறார். அவர் கடவுளின் சார்பாகப் பேசுபவர் என்பதால் ‘வார்த்தை’ எனவும் அழைக்கப்படுகிறார்’ எனத் தீர்க்கதரிசியான யோவான் 1:1-3, 14 ஆகிய திருவசனங்களின் வழியாகக் குறிப்பிடுகிறார். யேசு பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நீதிமொழிகள் புத்தகத்தின் 8:22, 23, 30 வசனங்களும் கொலோசியர் புத்தகத்தின் 1:15, 16ஐயும் வாசித்து இதை அறிந்துகொள்ளலாம்.
கடவுள் ஏன் யேசுவை அனுப்பினார்? - கடவுள் தம்முடைய ஒரே மகனின் உயிரை, பூமியில் நற்குணங்களின் பெட்டகமாக வாழ்ந்துவந்த யூதக் கன்னிப் பெண்ணான மரியாளின் கருப்பைக்குள் உருக்கொள்ளச் செய்தார். அப்படியானால், யேசுவின் தந்தை ஒரு மனிதத் தந்தை அல்ல. இதை லூக்கா 1:30-35இல் வசனங்களில் வாசிக்கலாம். அதேபோல் மத்தேயு புத்தகம் 20;28ஐ வாசித்துப் பார்த்தால் மூன்று உண்மைகள் புலனாகும். அவை, 1. யேசு, கடவுளாகிய தனது தந்தையைப் பற்றிய உண்மைகளைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் 2. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரி காட்டுவதற்காகவும் 3. தமது பரிபூரண உயிரை ‘மீட்பின் விலை’யாகக் கொடுப்பதற்காகவும் பூமிக்கு வந்தார் என யேசுவின் மெத்தப் படித்த சீடரான மத்தேயு குறிப்பிடுகிறார்.
மீட்பின் விலை: ‘அது என்ன மீட்பு விலை?’ எனக் கேட்கும் பிற மதச் சகோதர, சகோதரிகளுக்காக இந்த விளக்கம். பொதுவாக, மீட்பு விலையைச் செலுத்தினால்தான் அக்காலத்தில் ஓர் அடிமையை மீட்க முடியும். ஆதாம் - ஏவாள் தொடங்கி மனிதர்களைக் கடவுள் படைத்தபோது அவர்கள் வயதாகிச் சாக வேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு இருக்கவில்லை. அதனால்தான் முதல் மனிதனாகிய ஆதாமிடம், ‘நீ பாவம் செய்தாய் என்றால் இறந்துபோவாய்’ எனக் கடவுள் சொன்னார். ஆதாம் பாவம் செய்திருக்காவிட்டால் இறந்திருக்கவே மாட்டான்.
அவன் பாவம் செய்த பிறகு நீண்ட காலம் பூமியில் வாழ்ந்தாலும், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போன நாளிலிருந்தே முதுமையை நோக்கி வாழ்க்கையை நகர்த்தினான்; அவனுடைய வாரிசுகள் சகோதர யுத்தம் நடத்தி, பூமியில் ரத்தம் சிந்தக் காரணமாகி, பாவத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தினார்கள். இப்படித் தொடர்ந்து வரும் பாவமும் அதற்குத் தண்டனையாகக் கிடைத்த மரணமும் ஆதாமின் சந்ததியில் வந்த பூமியின் அனைத்து மனித இனங்களுக்கும் வழிவழியாகக் கடத்தப்பட்டது. இவ்வாறு, ஆதாம் மூலம் மரணம் இந்த உலகத்தில் வந்தது. அதனால்தான், ‘நமக்கு மீட்பின் விலை தேவை’ என ரோமர் புத்தகத்தின் 5:12 வசனம் தெளிவாகக் கூறுகிறது.
அப்படியானால் நம்மை மரணத்திலிருந்து விடுவிக்க யாரால் மீட்பு விலை கொடுக்க முடியும்? ‘அபூரண மனிதர்களாகிய எல்லாரும் தங்களுடைய பாவங்களுக்குத் தண்டனையாகத்தான் மரிக்கிறார்கள்; எனவே, ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்காக மீட்புவிலை கொடுக்க முடியாது’ என 49ஆவது திருப்பாடல் தெரிவிக்கிறது. யேசுவோ ஓர் அபூரண மனிதராக இருக்கவில்லை; அதனால், ‘அவர் மரித்தது அவருடைய பாவங்களுக்காக அல்ல; மற்றவர்களுடைய பாவங்களுக்காகவே! ஆம், பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் மீட்பு விலை கொடுப்பதற்காகவே!’ என யோவான் 3:16இல் தெரிவிக்கிறார்.
மோதல் முடிவுக்கு வரட்டும்: அன்றைய ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியின்கீழ் இருந்த ஒரு பகுதி யூதேயா. அதில் பெத்லஹேம் என்கிற ஊரில், மார்கழியின் கடுங்குளிருக்கு நடுவே வானில் புதிய வழிகாட்டி நட்சத்திரம் தோன்ற, ஒரு மாட்டுத் தொழுவத்தில் யேசு பிறந்தார். எளிய இடையர் குடிமக்களுக்கு யேசு பிறந்த செய்தி அறிவிக்கப்பட்டது. இன்று யேசு பிறந்த பெத்லஹேம், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு (குரானில் யேசுவின் வாழ்க்கை வரலாறு விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது) மட்டுமல்லாமல், யூதர்களுக்கும் முக்கியமான ஓர் இடம். ஏனென்றால் பெத்லஹேமின் நுழைவுவாயிலில் உள்ள ராகேல் கல்லறை யூதர்களுக்குப் புனிதமான இடம். நவீன யுகத்திலும் தொடரும் இந்தச் சகோதர யுத்தத்தின் மோதல் முடிவுக்கு வரட்டும். இறை வருகையின் பேரானந்தம் போரால் இழப்புகளைச் சந்தித்த, சொந்த மண்ணை இழந்த ஒவ்வொருவருக்கும் மருந்தாகட்டும்.
- jesudoss.c@hindutamil.co.in