கண்முன் தெரிவதே கடவுள் 29: நேயமே நியதி; அன்பே நோக்கம்!

கண்முன் தெரிவதே கடவுள் 29: நேயமே நியதி; அன்பே நோக்கம்!
Updated on
2 min read

சித்தம் எனும்திரு முற்றத்தில்

சிந்தும் நிலவின் கொற்றத்தில்

அத்தன் சாயல் தெரிகிறது

அதில்நம் முகம்தான் ஒளிர்கிறது!

உடம்பை வைத்துத்தான் இந்த உயிர் வாழ்க்கை. ஆனால், நாம் இந்த உடம்பல்ல. எண்ணமே மனம். மனமென்று வேறு தனியாக எதுவுமில்லை. எண்ணமே உலகம், கலகம் எல்லாம். ஆனால், அந்த எண்ணம் நாமில்லை. மனத்தின் மேல்தளத்தில் இது சரி, அது தவறு என்று ஆராய்வதற்கான சிந்தனை என்னும் வசதி நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், அந்தப் புத்தியும் அல்ல நாம்.

சித்த சுத்தி: உடம்பு, மனது, புத்தி – இவற்றுக்கப்பால் என்ன இருக்கிறது? நம்முடைய வாசனைகளின் பதிவு. வாசனைகள் என்றால்? நம்முடைய விருப்பு, வெறுப்புகள், இதுதான் வேண்டும், அது வேண்டவே வேண்டாம் என்னும் தன்மைகள். இவையும் நினைவுகளே! ஒரு சாலை என்பது ஒன்றன் மீது ஒன்றாகப் போடப்பட்ட எத்தனையோ சாலைகளின் தொகுப்பே அல்லவா? அதுபோல, இந்த நினைவுப் பாளங்களின் தொகுதிதான் வாசனைகள். இவற்றின் தளத்தைத்தான் சித்தம் என்கிறோம். இந்தப் பதிவுகள், சித்தத்திற்கும் பின்னிருக்கும் ஆன்மாவை மறைக்கின்றன. அந்த ஆன்மாதான் நமது சத்தியம். அதுதான் நாம். ஒரு சிம்னி விளக்கின் கண்ணாடிக் கூடாகத்தான் சித்தம் இருக்கிறது. அதில், மேலே குறிப்பிட்ட நினைவுகளின் தொகுப்பான வாசனைகளே படியும் கரியாகப் படர்ந்து ஆன்மா என்னும் ஒளியை மறைக்கிறது. கண்ணாடியை அடிக்கடி சுத்தம் செய்வது போல, சித்தத்தை இடைவிடாமல் சுத்தம் செய்யவேண்டியிருக்கிறது.

கண்ணாடியில் கரி மிஞ்சக் கூடாது. சித்தத்தில் நினைவே மிஞ்சக் கூடாது. முறையாகச் சுத்தம் செய்தால், கண்ணாடியே இல்லாதது போல ஒளி சுடர்கிறது. அது போலத்தான் சித்தத்தைத் தூய்மை செய்துகொண்டே இருந்தால் ஆன்மா ஒளிர்கிறது. அமைதி கூடுகிறது. அதுவே இடைவிடாத ஆனந்தமாகப் பரவுகிறது. இந்த, சித்த சுத்தி என்பதை யார் செய்ய வேண்டும்? இது ஆன்மா என்று ஒன்று இருக்கிறது, கடவுள் உண்டு என்று நம்புகிறவனுக்கு மட்டுமல்ல. எதுதான் உண்மை, அதைத் தெரிந்துகொள்வோம் என்று துணியும் ஆர்வலனுக்கு மட்டுமல்ல, உலகம் உண்டு, உயிர்கள் உண்டு, கடவுள் இல்லை என்னும் கருத்துடையவனுக்கும் தேவையான ஒன்று.

ஏன்? நினைப்பே மனிதன். நினைப்பே செயலாக விளைகிறது. அந்த ஒவ்வொரு செயலுக்கும் அதன் தன்மைக்கேற்ப ஒரு விளைவும் நேர்கிறது. முறையான நினைப்பு என்பது யாருக்குத் தேவையில்லை சொல்லுங்கள்! ஒழுங்கான செய்கை என்பது யாருக்கோ மட்டுமா அவசியம்? ஒரு மனிதனின் நினைப்பும் செயலும் அதன் விளைவும் அவனை மட்டுமா பாதிக்கின்றன? தந்தையின் பொய், குடும்பத்திற்குப் பழியை விளைவிக்கிறது. தாயின் குணம், குலத்திற்கே காவலாகிறது. பிள்ளையின் ஒழுங்கீனம், குலத்திற்கே அவமானத்தை உண்டுபண்ணுகிறது. நாம் எவரும் தனியாக இல்லை. ஒரு காட்டில் ஒதுங்கியிருக்கும் முனியும் நம்மோடு ஒப்பிட்டால் தனியாக இருக்கிறானே தவிர, அவனும் ஆயிரமாயிரம் உயிர்களின் கூட்டத்தில்தானே வாழ்கிறான்? அவன் அமர்ந்திருக்கும் மரத்தடி பல உயிர்களுக்குப் புகலிடம் அல்லவா! அவன் சாய்ந்திருக்கும் மரமும் உயிரேயல்லவா? அவனைத் தாங்கும் மண்ணோ உயிருக்கே தாயல்லவா! மேலும், நினைப்பு என்பது இருக்கும் வரை நாம் நம்மில் உலகத்தையே அல்லவா சுமந்துகொண்டிருக்கிறோம்!

நம்மைச் சுமக்கும் உலகத்தில்

நமது விருப்பும் வெறுப்புமென

நம்முள் இன்னொரு தனியுலகம்

நாளும் இரவும் சுழல்கிறதே!

உலகே நின்று போனாலும்

உள்ளே உலகம் உழல்கிறதே!

கலகம் யாவும் இதனால்தான்

கழற்றி வைத்தால் கடவுள்தான்!

- எனவே, ஒருபோதும் எவனும் எங்கும் தனியாக இல்லை. தன்னுடைய நினைப்பால், செயலால், அதன் விளைவால் எப்போதும் ஒரு பாதிப்புக்கு அவனும் ஆளாகிறான். சூழ்நிலையையும் பாதிக்கிறான். இதனால்தான் சித்த சுத்தி என்பது எல்லாருக்கும் இன்றியமையாததாகிறது.

அமைதியை அடையும் வழி: கடவுளைக் காண விரும்புகிறவன், ஆன்மாவை அறிய விழைபவன், கடவுளே கிடையாது என்பவன் எல்லாருக்கும் சித்த சுத்தியின் படிகள் பொதுவானவைதாம்: தனிமனித ஒழுக்கம்: இது இல்லாதவன் மனிதனாகவே மதிக்கப்படுவதற்கில்லை. ஆன்மிகத்திற்கோ சமூகப் புரட்சிக்கோ இது தேவையில்லை என்று கருதுவது புரட்டு வேலை. இப்படிப்பட்டவர்கள் சமூக ஆபத்தாக வளர்கிறார்கள். உயிர்நேயம்: எல்லாரும் நம்மை நாம் நேசிப்பவர்களாக இருக்கிறோம். எனவே, சுயநலவாதிகளாக மலிகிறோம். மன்னுயிரே தன்னுயிராய், தன்னுயிர்போல் மன்னுயிரை நேசிப்பவனே தனக்கும் பிறருக்கும் நன்மை விளைவிக்கிறான். நேயமே படைப்பின் நியதி. அன்பே நோக்கம்.

சுயவிசாரணை: யாராக இருந்தாலும் அவன் தன்னுள் ஆழ்ந்து, தான் யார் என்று விசாரிக்க வேண்டும். உலக வாழ்க்கையில் பொறிகளின் வழியே சிதறிப்போவதை விட்டுவிட்டு, உள்ளே திரும்பி விசாரிப்பது எல்லாருக்கும் தேவை. இங்கே அமைதியை விரும்பாதவர்கள் யார்? யாருக்கு ஆனந்தம் பிடிக்காது? இதுதான் நம் அடிப்படை இயல்பு. இதனால்தான் இவற்றைத் தெரிந்தோ தெரியாமலோ, முறையாகவோ, முறையில்லாமலோ விழைகிறோம். ஒழுக்கம், உயிர்நேயம், சுயவிசாரணை இவற்றால்தான் ஒருவன் மனிதனாகி, அமைதியை அடைய முடியும். கடவுளை நம்புகிறவன், நம்பாதவன் இவர்களுள் யாருக்கு இந்த அமைதி எளிதில் வாய்க்கிறது?

நம்பிக்கை, நம்பாமை இவற்றுக்கு அப்பால் யாருக்கு விசாரணை தீவிரமாக இருக்கிறதோ அவருக்கே அமைதி வாய்க்கிறது. அடைந்தாலும், இழந்தாலும் பதறாத நிறைவும், இங்கே எதுவும் நிலையில்லை என்னும் அறிவும் யாருக்கு உள்ளே உறுதியாக இருக்கிறதோ அவருக்கே சுய விசாரணையும் எளிதாகும், பலிக்கும். நம்பிக்கை பணிவைத் தருகிறது. அது எல்லாவற்றையும் எளிதாக்குகிறது. கடவுளுக்குச் சமானமான ஆற்றல் படைத்த மாமுனிகளின் கருத்தும் இதுதான்.

(அடுத்த இதழில் நிறைவடையும்)

- tavenkateswaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in