

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காட்டில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள அம்மனூர் அகத்தீஸ்வரர் கோயில், முன் ஜென்ம வினைகள் தீர்க்கும் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் நவகிரக சந்நிதி கிடையாது. சனிஸ்வரர், சூரியன், சந்திரனுக்கு தனித்தனி சந்நிதிகள் இருப்பது தனிச்சிறப்பு.
தல வரலாறு: பார்வதி - சிவபெருமானின் திருக்கல்யாண வைபவம் வடக்கே கயிலாய மலையில் நடந்தபோது, அதைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் பிரம்மதேவர், திருமால், இந்திரன், சரஸ்வதி, திருமகள், அஷ்ட திக்பாலகர்களும் அங்கே கூடியிருந்தனர். இந்தச் சுமையைத் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. பூமியைச் சமநிலைப்படுத்த சிவபெருமான் அகத்தியரைத் தென் திசைக்கு அனுப்பினார். அகத்திய முனிவரும் சிவபெருமானின் ஆணைக்கிணங்க தென் திசை நோக்கிப் பயணித்தார். தென் திசையை அடைந்த அகத்திய முனிவர், தன் கமண்டலத்தில் இருந்து சிறிது நீரை எடுத்து ‘ஓம் நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துப் பூமியில் தெளித்தார்; பூமி சமநிலை அடைந்தது.
தன்னால் பார்வதி - சிவபெருமானின் திருக்கல்யாண வைபவத்தைக் காண இயலவில்லையே என்று அப்போதுதான் அவருக்கு வருத்தம் மேலிட்டது. அகத்தியரின் வருத்தத்தைப் போக்க சிவபெருமான், அகத்திய முனிவர் நினைத்த இடத்திலேயே அவருக்குத் திருக்கல்யாண காட்சி அருள்வதாக உறுதி அளித்தார். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அகத்திய முனிவர், பல தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
வினை போக்கும் ருத்ர கங்கை: அப்போது அகத்திய முனிவர், பார்வதி தேவியே பூஜை செய்த சிவலிங்கம் அமைந்த அம்மனூர் தலத்துக்கு வந்தார். தானும் அதே இடத்தில் அமர்ந்து சிவலிங்கத்துக்குப் பூஜைகள் செய்து, சிவனருள் பெற்றார். அகத்திய முனிவர் பூஜை செய்தமையால், இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அகிலாண்டேஸ்வரி அம்பாள் அருகே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோயிலின் முன் வடக்குத் தெற்காகக் காவிரி ஆற்றின் கிளை ஆறான வெண்ணாறு பாய்கிறது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால் வெண்ணாறு ‘ருத்ர கங்கை’ என்று அழைக்கப்படுகிறது. அமாவாசை நாளில் ருத்ர கங்கையில் நீராடி அம்மையப்பரைத் தரிசித்தால் முன்ஜென்ம வினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
1950 காலகட்டத்தில், அம்மனூர் மக்கள் ஒன்று கூடி ஓரிடத்தில் குளம் வெட்டத் தொடங்கியபோது, லிங்கத் திருமேனி கிடைத்தது. பின்னர் அரசமரத்தடியில் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, சிறிய கோயிலாக எழுப்பினர். பின்னர் விமானம், முன் மண்டபம், ஹஸ்த மண்டபம், அகத்தீஸ்வரர் சந்நிதி, அகிலாண்டேஸ்வரி சந்நிதி, மேற்கு நோக்கிய சனீஸ்வரர் சந்நிதி ஆகியவையும் அமைக்கப்பட்டு, 1975இல் இக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2006 மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் குடமுழுக்கு ஆன நாளில் நடைபெறும் சம்வத்சரா அபிஷேக வைபவத்தில் சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுகின்றன. பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருவிழாக்கள்: ஊர் மக்கள் இணைந்து 2015 முதல் நவராத்திரி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடு கின்றனர். ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் ரிஷப வாகனத்தில் அம்மையப்பர் எழுந்தருளி வீதியுலா கண்டருள்கிறார். ஒரு பிரதோஷ தினத்தில் இத்தல இறைவனும் இறைவியும் கண் திறந்து அருள்காட்சி அளித்ததாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.
அமைவிடம்: திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது கச்சனம். இதில் இருந்து 4 கி.மீ. வலப் பக்கம் சென்றால் அம்மனூரை அடையலாம். திருவாரூர் – காரைக்குடி ரயில் தடத்தில் உள்ளது அம்மனூர் ரயில் நிலையம்.
- sundararaman.k@hindutamil.co.in