

தொடர்ச்சியாக இறைவழிபாடு செய்து நோன்பிருந்துவந்தவர் நபித்தோழர், அபூ தர்தா. இவருடைய வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார் தோழர் ஸல்மான் ஃபார்ஸி. அபூ தர்தாவின் தொடர் வழிபாட்டைக் கண்டு வியந்ததுடன் அவருடைய மனைவி சொன்ன விஷயத்தைக் கேட்டு கவலையும் அடைந்தார் ஸல்மான். தொடர்ச்சியான இறைவழிபாட்டின் காரணமாக உலக வாழ்க்கையின் தொடர்பே இல்லாமல் அபூ தர்தா இருப்பதாக அவரின் மனைவி, ஸல்மான் ஃபார்ஸியிடம் கூறினார். பகல் நேரத்தில் நோன்பிருந்து தொழுகை நடத்துவதுடன் இரவு நேரத்தில் கண்விழித்துத் தொழுகை செய்தும் வந்தார் அபூ தர்தா. விருந்துண்ண வந்திருந்த ஸல்மான் ஃபார்ஸி நோன்பிருந்த அபூ தர்தாவைத் தன்னுடன் உண்ண அழைத்தார். மறுத்தால் தானும் உண்ண மாட்டேன் என்று கூறியதோடு, இரவில் கண்விழித்துத் தொழுகை செய்ய ஆயத்தமான அபூ தர்தாவைத் தூங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
ஸல்மானின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அபூ தர்தா, நோன்பை முறித்து அவருடன் சேர்ந்து உணவு உண்டார். இரவு நேரத் தொழுகையினைக் கைவிட்டார். மறுநாள் காலையில் இந்த விஷயம் தொடர்பாக அண்ணல் நபியிடம் அபூ தர்தா முறையிட்டார். அதற்கு அண்ணல் நபி, ஸல்மான் ஃபார்ஸி செய்தது சரியே எனக் கூறினார். ஏக இறைத்துவத்தை உலகிற்குப் பரப்ப இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணல் நபியைவிட இறைவன் அன்பிற்குப் பாத்திரமானவர் யாராக இருக்க முடியும். அத்தகையவரே இறைவனை வழிபடுதல் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அதேபோன்று இல்லற வாழ்க்கையும் மனிதனுக்கு முக்கியம் என்று கூறுகிறார். ஏனெனில் இறைவனின் கட்டளை அதுதான்.
துறவறம்: உலகில் தோன்றிய மதங்களில் கிட்டத்தட்ட எல்லா மதங்களிலும் துறவறம் வலியுறுத்தப்படுகிறது. உலக வாழ்க்கையின் மீதான ஆசை, பற்று நீங்கி அவை தரும் கவலைகளை மறந்து இறைவனை மட்டுமே தியானிப்பது துறவறம். ஆனால், அதைக் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உணர்வுக் குவியலான மனித மனம், முற்றும் துறந்து ஒரு மையத்தை நோக்கிப் பயணிப்பது சாத்தியமானதல்ல என்கிறது இஸ்லாம். ‘உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்’ என்று சொல்கிறது. மனிதன் சமூகமாக இணைந்து வாழ்வதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. உணர்வுகளை நெறிப்படுத்தி வாழக் கற்றுக்கொடுக்கிறது.
ஆணும் பெண்ணும் நற்செயல் புரியும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் பாகுபாடு இன்றி இருவருக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்று கூறுகிறது. ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. குடும்ப அமைப்பை ஆதரிக்கிறது. மணம் முடிப்பதற்கான வழிமுறைகளை, சட்டங்களை வகுக்கிறது. அவர்களுக்குள் பிரச்சினைகள் ஏற்படும்போது, வரம்பு மீறாதீர்கள் என எச்சரிக்கிறது. சுமுகமான நல்வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. ‘உங்களுக்கிடையில் (கணவன் – மனைவி) அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பது, அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும்’ திருக்குர்ஆன் (30:21). நிதர்சனமான வாழ்வை எதிர்கொள்ளச் சொல்லிக் கொடுக்கிறது இஸ்லாம் எனும் மார்க்கம்.
நோன்புக்கால இரவில்கூட மனைவியுடன் இணைவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ‘அவர்கள்உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கே துரோகம் செய்து கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்துகொண்டான்’ என்கிறது திருக்குர்ஆன்(2:187). மேலும், ‘துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை’ என்றும் திருக்குர்ஆன்(57:27) கூறுகிறது. அண்ணல் நபியும் இல்லற வாழ்க்கையை வலியுறுத்துகிறார். அவ்வாறு வாழ்பவரே, தம்மைச் சார்ந்தவர் என்று அவர் கூறுகிறார். இறையச்சம் முதன்மையானது என்றால் இல்லற வாழ்வு இன்றியமையாதது என்று இஸ்லாம் கூறுகிறது. ஏனெனில், இல்லற வாழ்வே தனிமனித ஒழுக்கத்தைப் பாதுகாப்பது.
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஆடையாக இருப்பதென்பது, ஒருவருக்கு மற்றொருவர் பாதுகாப்பும் மதிப்பும் அளிப்பது எனப் பொருள் கொள்ளலாம். அவ்வாறு அமையும் உறவு நல்லுறவாக இருக்கும். கற்பு என்பது இருவருக்கும் பொது என்கிற கருத்தை வலியுறுத்துவதே இல்லறம். துறவறத்துக்குப் பெண்கள்தாம் முதல் எதிரி என எண்ணும் நிலையில் இறையச்சத்துடன் வாழ்ந்து மறுமையில் மனைவியுடன் மகிழ்ந்து சொர்க்கத்துள் நுழையுங்கள் என்று அன்போடு அழைக்கிறது இஸ்லாம்.
(தொடரும்)
- bharathiannar@gmail.com