

கடவுள் என்பது எண்ணமா?
கனவின் மறுபெயர் வாழ்க்கையா?
உடம்பு தடையெனில் ஏதுக்கு?
உடம்பே நோயெனில் யாருக்கு?
கடவுளின் பெயரால் கலகங்களை இந்த உலகம் தொடர்ந்து கண்டுவருகிறது. அவற்றுக்குக் கடவுள் நம்பிக்கை, கடவுள் மறுப்பு இரண்டுமே காரணமாவதும் உண்டு. நம்பிக்கையும் மறுப்பும் வியாபாரத்துக்கு உகந்தவையாகவும் அமைகின்றன. அது, விற்பவனின் திறமையா, வாங்குபவனின் தளர்ச்சியா! இவற்றுக்கிடையில் கடவுளை மறுப்பது என்பது ஒரு கெளரவமாகத் தோன்றி அதுவும் ஒரு வியாபாரமாக ஊன்றிவிட்டது. இல்லையென்று சொல்வதைக் காட்டிலும் இருந்தால் தேவலாம் என்று சொல்வது அறிவுஜீவி அடையாளமாகக் கருதப்பட்டு, அதற்குக் கைதட்டவும் கூட்டம் இருக்கிறது. அப்படித் தட்டிய கைகள் ரகசியமாகக் கும்பிடுவதும் உண்டு!
நீரின் தயவே தமது வாழ்க்கை என்பதை அறியாமல் நீந்துகிற மீன்களைப் போல, வானென்று ஒன்று இருப்பதை அறியாமல் மின்னிக்கொண்டிருக்கின்ற நட்சத்திரங்களைப் போல, சுவாசத்தின் தயவில்தான் இந்த உயிரும், உடம்பும், மனோவியாபாரங்களும், வாழ்க்கை என்னும் கூத்தும் என்று புரியாமலேயே நம்பியும் நம்பாமலும் செத்து மடிகிறது மானிடக் கூட்டம். கதிரவன் எப்படிச் செயல்படுகிறான் என்று ஆராய்ந்து சூரியப் புயல்கள் போன்ற சுவாரசியமான தகவல்களைச் சொல்கிறது அறிவியல்.
கதிரவன் எவ்வளவு தொலைவில் இருக்கிறான் என்பதை ரிக் வேதத்து முனிவர்கள் மூலம் எப்போதோ சொல்லிவிட்டது ஆன்மிகம். ஆனால், இக்கால முனிவனான விஞ்ஞானியும் சரி, அக்கால விஞ்ஞானியான முனிவனும் சரி, கதிரவனை உருவாக்கியவர்கள் அல்லர். இயற்கையை யாரும் உருவாக்க முடியாது. அதே நேரம், உருவான எதுவும் அதுவாகவே தன்னை உருவாக்கியிருக்க முடியாது. இதோ, நாம் பிறந்துதானே இருக்கிறோம், இதில் ஏதும் ஐயமில்லையே? நாமேவா நம்மைத் தாயின் கருவில் உருவாக்கிக்கொண்டு, நேரத்தை நிச்சயித்துக்கொண்டு பிறந்தோம்? இல்லை நம் தாய் தந்தையர்தான் நம்மை ஒரு லட்டு தயார் செய்வதைப் போல் உருட்டிப் பிடித்துப் படைத்தார்களா?
‘நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?’
என்று சரியாகத்தான் கேட்டிருக்கிறார் கவியரசர். நாம் உருவானோம். அதற்கு அவர்கள் காரணமானார்கள். ஆனால், அவர்கள் நம்மை உருவாக்கவில்லை, வடிவமைக்கவில்லை. நாம் பிறந்த பிறகு அவர்கள் வளர்த்தார்கள். நாம் வளர்ந்தோம். வளர்ந்த பிறகு நாமே நம் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் பொறுப்பானோம். நம் உருவாக்கத்தில் நம்முடைய பொறுப்பில்லை. நம்முடைய மரணத்தில் நமக்குச் சுதந்திரம் இல்லை. ஆனால், இடையில் நம் வாழ்க்கைக்கு நாம் பொறுப்பு. படைக்கப்பட்ட எல்லாவற்றுக்கும் கதையில் இந்த அடிப்படைதான் ஒற்றுமை. நடத்தை என்பது மட்டும் மனிதனுக்கே பொறுப்பு. ஏனென்றால் அவனுக்கு, தான் மனிதன் என்பது தெரியும். மற்றவற்றுக்குத் தாம் யாரென்று தெரியாது.
இதை யார் படைத்தார்கள் என்கிற கேள்வி எழுந்தால் ஒரு பதில் வரும். அதை யார் படைத்தார்கள் என்கிற கேள்வி எழும். அதற்கும் ஒரு பதில், அதற்கும் ஒரு கேள்வி. அதன் முடிவில் வரும் விடைதான் கடவுள். அவனை யார் படைத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினால் அதற்கு மட்டும்தான் ‘அவன்தான்’ என்கிற விடையைப் பெரியோர்கள் சொன்னார்கள். அதனால்தான் அவனைத் தான்தோன்றி, சுயம்பிரகாசம் என்றார்கள். பள்ளிக் கூடத்தில் என்னுடன் படித்தவர்களில் ஒருவன் தாந்தோணி. அவனையும் என்னையும் படைத்தவன் தான்தோன்றி. உண்மையில், அந்தக் கடவுளும் எதையும் படைக்கவில்லை, அவனே எல்லாப் படைப்புமானான் என்று பெரியவர்கள் அரியதோர் வாசகத்தைச் சொல்வார்கள். அது கருத்தல்ல, அவர்கள் தங்களுக்குள் ஆழ்ந்து உணர்ந்த சத்தியத்தின் பிரகடனம். ஏதோ ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டா அவன் ஒவ்வொன்றையும் படைத்தான்? எனில், அந்த இடத்தைப் படைத்தது யாரோ? அவன் ஒரு பொருளல்ல. அவன் ஓர் ஆளுமல்ல. அவன் இல்லாத, அவன் விளக்கமாக இல்லாத பொருளோ, ஆளோ இந்தப் படைப்பில் இல்லவே இல்லை.
‘ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்' என்கிற அற்புதமான சத்திய தரிசனப் பிரகடனத்துடன் தொடங்குகிறது மகாகவி பாரதியும் தமிழில் தந்திருக்கின்ற ஈசாவாஸ்ய உபநிடதம். அதன் பொருள் ‘எல்லாம் இறைவனால் நிரம்பி இருக்கிறது.’ எதுவானாலும் சரி, எந்த ஒன்றும் இருக்கிறது என்பது, அது அவனால் நிரம்பியிருக்கிறது என்பதால்தான். ‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பதன் பொருள் இதுவே! ‘இன்றி - அமையாது' என்னும் சொற்றொடர் இறைவனுக்கு மட்டுமே பொருந்தும். சுவாசம் இன்றி மனிதன் வாழ முடியாது – இறைவன் இல்லாமல் சுவாசம் இருக்காது. கதிரவன் இன்றி, உலகில் உயிர் தோன்றாது – இறைவன் இல்லாமல் கதிரவன் தோன்றி இருக்க முடியாது. மழை இன்றி, உலகில் உயிர்வாழ்க்கை என்பது கிடையாது. இறைவன் இல்லாமல், மழை என்பது தோன்றி மண்ணில் விழாது. இவ்விதம், எதுவும் இங்கே படைப்பில் இருப்பதற்கு ஒன்றே காரணமாக இருக்க முடியும். அந்த ஒன்றே இறைவன்.
எனவே, இறைவன் என்பவன் எண்ணமல்ல. ஆனால், அவன் இல்லாமல் எண்ணம் என்று ஒன்று இருக்கவே முடியாது. வாழ்க்கை என்பது கனவல்ல. அதே நேரம், நாம் எதைக் கனவென்றும், நினைவென்றும் கருதுகிறோமோ அவை நிலையல்ல. அவற்றுக்கும் காரணமான இறைவனே நிலையானவன். உடம்பு, இன்றோ நாளையோ விழுந்துவிடும்தான். ஆனால், உடம்பைப் போல, எந்த உருவும், வடிவும், உருவமாகவும் வடிவமாகவும் தோன்றுவதற்குக் காரணம் அவற்றுள்ளே அவன் இருப்பதனால்தான். நாம் நிலையானவர்கள் அல்லர். நம்முள்ளும் இருக்கும் அவனே நிலையானவன். இதை உணரும்போது, மனிதன் இறைவனாக நிலைக்கிறான்.
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com