

உலகம் ஆதி பராசக்தியின் அருளால் இயங்குகிறது. இறையருள் நமக்கு சிவசக்தி சொரூபமாகக் கிடைக்கிறது, அம்மன் கோயில்களில் செடல் உற்சவம், பொதுவாக எல்லா கோயில்களிலும் நடைபெறும். ஆனால் அதை முதன் முதலில் நடத்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா? பெருமாள் கோயில்களில்தான் திருவடி தரிசனம் செய்யலாம். ஆனால் ஓர் அம்மன் ஆலயத்திலும் திருவடி தரிசனம் செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கு பதிலாய் அருள்பாலிப்பதுதான் விழப்பள்ளம் செங்கழனி மாரியம்மன் ஆலயம். விவசாயத்தை மீட்டெடுத்ததால் இந்த அம்மனுக்கு செங்கழனி மாரியம்மன் என்கிற திருநாமத்தைச் சூட்டி விவசாய பெருமக்கள் வழிபாடு செய்யத் தொடங்கினர். பிற்காலத்தில் இக்கோயில் புதிய கற்கோயிலாக கட்டப்பட்டு, நூதன கர்ப்பக்கிரகம் அர்த்தமண்டபம், மகா மண்டபம் எல்லாம் அமைக்கப்பட்டு தற்போது அழகுறக் காட்சி தருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் வைகாசி விசாகத்தன்று முதன்முதலாக ஒரு பக்தர், அவரின் மகனை அம்மை நோயிலிருந்து காத்ததால், தன் உடல் முழுவதும் சின்ன சின்ன சூலாயுதம் செய்து அதைக் குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினாராம். அதுவே இந்த மாரியம்மன் கோயிலில் நடந்த செடல் உற்சவம் என்று சொல்லப் படுகிறது. அதன்பின்னரே பல ஊர்களிலும் இந்த செடல் உற்சவம் நடக்கின்றது. வடலூர் வள்ளலார் சுவாமிக்கு செங்கழனி மாரியம்மன்தான் இஷ்ட தெய்வம். அதனாலேயே இக்கோயிலுக்கு அவர் பலமுறை வந்து வழிபாடு நடத்தியதாகவும் இங்கு உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
சிரசு வடிவில் அம்பாள்: செங்கழனி மாரியம்மன் கோயில் தெருவில் மிக அற்புதமான அலங்கார வளைவு நம்மை வரவேற்கும், அதில் முருகன், விநாயகர், மாரியம்மன், சரஸ்வதி, லட்சுமி சுதை சிற்பங்களைக் காணலாம். மகா மண்டபத்தின் முன்னால் திரிசூலம், பலிபீடம், சிம்மவாகனம், அழகுறக் காட்சி தர, மேலே அம்பாள் சுதை சிற்பமாக அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறாள். மகா மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் விநாயகர், பாலமுருகனை நாம் தரிசிக்கலாம். செங்கழனி மாரியம்மன் உற்சவராக தனிச் சந்நிதியில் காட்சி தருகிறாள். சிறிய அர்த்த மண்டபத்திற்கு மேல் கஜலட்சுமி முன்னால் துவாரபாலகர்கள் கம்பீரமாய் காட்சி தர, அடுத்தது, கருவறை. இங்கு செங்கழனி மாரியம்மன் மூலவராய் அம்பாள் சிரசு வடிவிலும் அதன் பின்னால் சுதை சிற்பமாக அம்மனின் திருவுருவம் தெய்விகமாகக் காட்சி தரும் கருவறை. கருவறைக்கு மேலே ஐந்து நிலையில் ஒரு சிறிய ராஜகோபுரம் அதில் பராசக்தி பல்வேறு அவதாரங்களில் சுதைச் சிற்பங்களாய் காட்சி தருகிறார்.
நவ அலங்காரம்: கோஷ்டத்தில் ஒரு புற்று அம்மன் சிரசு. இது தவிர வேறு எதுவும் சந்நிதிகள் இல்லை. வெளிப்பிரகாரத்தில் கோயிலுக்கு வலது பக்கம் வேப்பமரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தடியில் வேம்பாயி அம்மன் சந்நிதி உள்ளது. ஆதியில் பக்தர்கள் வணங்கிய `வேம்பாயி' என்கிற திருநாமத் திலேயே அருள்பாலிக்கிறாள். வேப்பமரத்தடியில் அம்மனின் திருவடிகள் உள்ளன. அந்த இடத்தில்தான் அம்மன் இருந்ததாகக் கூறப்படுகிறது, பொதுவாக வைணவக் கோவில்களில் பெருமாள் சந்நிதிகளில்தான் திருவடியை சேவிக்கலாம், ஆனால் அம்மன் சந்நிதியிலும் திருவடி இருப்பது இங்குதான். ஆண்டுதோறும் நவராத்திரி ஒன்பது நாட்களும் இக்கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களும் உற்சவருக்கு ஒன்பது நாயகிகளின் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
தை மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை அன்று செடல் உற்சவம் நடைபெறும். தங்களின் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு செடல்களை உடலில் குத்திக்கொண்டு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். வடலூர் வள்ளலார் சுவாமிகளின் இஷ்டதெய்வம் என்பதால் தைப்பூசத் திருநாளில் அன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படுகின்றன. வைகாசி முதல் வெள்ளி அன்று பானக பூஜை என்னும் உற்சவம் நடைபெறுகிறது. பக்தர்கள் தங்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டி, அம்மனுக்கு தண்ணீர் மற்றும் பானகம் கொண்டு அபிஷேகம் செய்கின்றனர். தங்களின் பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, பட்டாடை அணிவித்து அன்னதானம் செய்கிறார்கள். அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தையும் அருளையும் பெற, செங்கழுநீர் மாரியம்மனை தரிசனம் செய்து வாழ்க்கையில் எல்லா நலன்களையும் பெற ஒரு முறை விழப்பள்ளம் வாருங்கள்!
அமைவிடம்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியிலிருந்து விழப்பள்ளம் செல்வதற்கு ஆட்டோ மற்றும் நகரப் பேருந்து வசதி உள்ளது.