

தனது தாய் மாமனும், சங்கீத அஷ்டாவதானியுமான திருவிழந்தூர் ஏ.கே.கணேசபிள்ளையிடம் வேதமூர்த்தி நாகஸ்வரம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். ஒரு சில வாய்ப்புகள் வந்தாலும், தன்னுடைய வாசிப்பில் வேதமூர்த்தி திருப்தி அடையாதவராகவே இருந்தார். தான் நினைப்பதை தன்னுடைய வாத்தியம் பேசவில்லையே என்கிற ஆதங்கத்தில், தன்னுடைய நாகஸ்வரத்தில் பல ஆராய்ச்சிகளைச் செய்துபார்த்தார். இந்தப் பரிசோதனை முயற்சிகளுக்குப் பலன் கிடைக்காமல் இல்லை.
நாகஸ்வரத்தில் செய்த மாற்றங்கள்: சாதாரணமாக நாகஸ்வரத்தில் இடப்பக்கமும், வலப்பக்கமும் இரண்டு ஜீவ ஸ்வரங்கள் இருக்கும். மத்தியில் உள்ள ஏழு ஸ்வரங்களுக்கு சற்று கீழ் பகுதியில் பிரம்ம ஸ்வரம் ஒன்று இருக்கும். ஆனால் வேதமூர்த்தியின் நாகஸ்வரத்தில் இடப்பக்கமும், வலப்பக்கமும் நான்கு ஜீவ ஸ்வரங்களும், ஏழு ஸ்வரங்களுக்கு சற்று கீழ் பகுதியில் பிரம்ம ஸ்வரம் ஒன்றும் இருக்கும்படி செய்தார். அதோடு, நாகஸ்வரத்தின் இரு பாகங்களை இணைக்கும் இடத்தில் மெல்லிய ஓர் உலோகக் குழாயை உட்பொருத்தி வாசிக்கத் தொடங்கினார்.
இப்படி அவரின் நாகஸ்வர கருவியை ஒரு சிற்பியைப் போல அழகான சுநாதத்திற்காக மாற்றி அமைத்து, சிறிது சுருதி விலகினாலும் அதை உடனே கருவி காண்பித்துக் கொடுத்துவிடுவது போலவும் வடிவமைத்து, சில காலங்கள் தொடர் பயிற்சியை மேற்கொண்டு, இக்கருவியை வாசிக்கத் தொடங்கினார். முதல் முதலில் அக்கருவியை மாற்றி அமைத்த பிறகு, அவரது நாகஸ்வர வாத்தியத்தின் ஓசையை உலகறியச் செய்ய அச்சாரமாக அமைந்தது, திருச்சியில் நடைபெற்ற அருணகிரிநாதர் விழா. அவர் வாசித்ததைப் பார்த்துவிட்டு `கல்கி' வார இதழில் "வேதமூர்த்தியா நாதமூர்த்தியா" என்று பாராட்டி எழுதியிருக்கிறது.
சுமார் எட்டு ஆண்டுகாலம் நாகஸ்வர உலகில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார். பல பட்டங்களையும், தங்கப்பதக்கங்களையும் வென்றிருக்கும் வேதமூர்த்தி, அதன்பிறகு, நாகஸ்வரத்தை மாற்றியது இல்லையாம். ஒரு சில சீவாளிகளை வைத்தே பல வருடங்கள் வாசித்திருக்கிறார். ஒரு சில கிழிந்த சீவாளிகளை தேங்காய் நாரை போட்டு கட்டியும் வாசித்து இருக்கிறாராம். ஏனென்றால் அவருடைய வாசிப்பின் தன்மை அறிந்த ஜீவஒலி அவரின் சீவாளியிலிருந்து இறங்கும் என்று அவர் நினைத்திருக்கக்கூடும்.
கேரளத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சுருதி வித்வானாகவும், வேதமூர்த்தியின் சகோதரரான பாலசுப்ரமணியன் பல காலங்கள் தாள வித்வானாகவும், சில காலம் தவில் வித்வானாகவும் இருந்திருக்கிறார்கள். வேதமூர்த்திக்கு இரண்டாவது நாகஸ்வரமாக திருக்கடையூர் சோமு, திருவெண்காடு ஜெயராமன், வேதாரண்யம் ரங்கஸ்வாமி ஆகியோர் வாசித்திருக்கின்றனர். நாச்சியார்கோயில் ராகவபிள்ளையும், திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளையும் நீடாமங்கலம் ஷண்முக வடிவேலும் அவருக்கு தவில் வாசித்திருக்கின்றனர்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு மங்கல இசை வழங்கிட மைசூருக்கு ஒருமுறை சென்றிருந்தார் வேதமூர்த்தி. வானொலி மூலமாக தனது நாகஸ்வர தேனொலியைப் பரப்பிவிட்டு, சில மணிநேரம் கழியும் முன்பே அங்கேயே உயிர் நீத்துவிட்டார் அந்த நாகஸ்வர மேதை. வீணையைப் போல நாகஸ்வரத்தை இசைத்து ரசிகர்களின் பெரும் நன்மதிப்பைப் பெற்றிருந்த நாகஸ்வரம் வேதாரண்யம் ஜி. வேதமூர்த்தி பிள்ளை, நாகஸ்வர உலகில் தடம் பதித்தவர்களுள் ஒருவர்.