கண்முன் தெரிவதே கடவுள் 27: கண்களால் காண்கிறோம்; கண்களாலா உணர்கிறோம்?

கண்முன் தெரிவதே கடவுள் 27: கண்களால் காண்கிறோம்; கண்களாலா உணர்கிறோம்?
Updated on
2 min read

உண்மையே உனக்கொரு பெயருண்டோ? நீ
உறையும் இடமென ஒன்றுண்டோ?
மண்ணும் விண்ணும் மட்டுமல்ல! என்
மனமெனும் பொய்யும் உன் வீடே!
எண்ணம் யாவும் நின் பெயரே!
எதிலும் எதுவும் நின் முகமே!

‘கடவுள் உண்மையா தெரியாது. ஆனால், உண்மைதான் கடவுள் என்பதில் ஐயமே கிடையாது,’ என்பார் என் குருநாதர். கடந்தால் உள், உள்ளே கடவுள், அந்தரங்கத்திலே அறியப்படுவதால் அது `கடவு' என்னும் ரகசியம் என்றெல்லாம் கடவுள் என்னும் சொல்லுக்குப் பொருள் சொல்வார்கள். `இறை' என்றால் `தோள்' என்பார்கள். மண்ணில் வாழும் மனிதனுக்கு அடிக்கடித் துணையாகத் தோளொன்று தேவைப்படுகிறது! இன்னொன்று, இறைத்தால் புரிவதே இறை. வாழ்ந்தால் மட்டுமேதான் புரிவது வாழ்க்கை, அது போல. நம்முள் நாம் ஆழ்ந்து இறைக்க வேண்டும்.

கடவுளை வெளியே தேடுகிறோம். காண முடிகிறதில்லை! காரணம்? அவனை உள்ளே காணக் கற்காததே! மேலும், கடவுள் என்பவன் ‘வருபவன்' அல்ல. இருப்பவன்! எப்போதும், எங்கும், எல்லாமுமாய்! கடவுளைக் குறிக்கும் சொற்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘ஆண்டவன்' என்னும் சொல்லே. அளவு, குணம், வடிவம், விவரிப்பு போன்ற எந்த எல்லைகளும் இல்லாதவன் என்று விளக்குவார்கள். இதை எளிமைப்படுத்திப் புரிந்து கொண்டால் இனிமையாக இருக்கிறது. `ஆண்டவன்' என்றால் எல்லாவற்றையும் ஏற்கெனவே ஆண்டு முடித்து விட்டவன். இப்போதோ, இனியோ அவன் ஆள்வதற்கென்று ஒன்றுமில்லை. அந்த ஆண்டவனே உள்ளே இருக்கிறான். “மலர் மிசை ஏகினான்" என்கிறார் வள்ளுவர். உன் இதயக் கமலத்தில் ஏற்கெனவே இருக்கிறான். நீ உள்ளே திரும்பி உற்றுப் பார்த்தால் தெரிகிறான். அப்போதா அவன் வந்து, பின்பு தெரிகிறான்? இல்லை! எப்போதும் அவன் அங்கேதான் இருக்கிறான்.

நம்பிக்கை எனும் நேசம்: “சிவனவன் என் சிந்தையுள் வந்த அதனால்" என்பார் மணிவாசகப் பெருமான். மனனமே மனித இயல்பு, மானுடச் சிறப்பு. மனனம் என்றால் நினைப்பு, நான் என்னும் உணர்வு. அந்த உணர்வில் அவனே இருக்கிறான், தானே நானாக! அதனால்தான் அவனை என்னால் பணிய முடிகிறது. உணர்வில் இல்லாதவன் நினைப்பில் வருவதற்கில்லை. அவன் மீது நம்பிக்கை என்னும் நேசம் விளைய வாய்ப்புமில்லை. "எனக்கு மட்டும் கடவுள் நினைப்பு இல்லையென்றால் இந்த வாழ்க்கை எத்தனை வீணாகிப் போயிருக்கும்?" என்பதே மாணிக்கவாசகர் நம் சார்பில் பதிவு செய்திருக்கும் சிந்தனை. "அவனை நினைப்பதைக் காட்டிலும், உள்ளே அவனை உணர்வதைக் காட்டிலும் அருள் என்று ஒன்றுண்டோ! இந்த நினைப்பை அங்கீகரித்து அவனை வணங்குவதைக் காட்டிலும் பெற வேண்டியது ஒன்றுமுண்டோ" என்று கூர்மையாகக் கேட்கிறார் ‘நேயத்தே நின்ற நிமலனை’ நேரே அறிந்த திருவாதவூரார்.

உருவம், வடிவம், பெயர், இடம், காலம், குணம், குறை, தேவை, வளர்ச்சி, மாற்றம் போன்ற எதுவுமில்லாத மெய்ப்பொருள், பரம சத்தியம், பேருண்மை என்பதே நாம் அறிய வேண்டிய கடவுள். அது, நம் ஒவ்வொருவரின் உயிரின் முனையில், உணர்வாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. இதமாக அமர்ந்து, இருவிழிகளையும் மூடி, இதயத்துள் இறங்கி இதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும். ஆம், தன்னுடைய உணர்வை இன்னொருவனா உணர முடியும்? தானே தன் பொருட்டுத் தன் முயற்சியில் இதை உணரவேண்டும். அவ்விதம் இந்த உணர்வை உணர்ந்த பிறகு விழிகளைத் திறந்தால் `காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும், கேட்கும் ஒலியினிலும், தீக்குள்ளும்' அதனைத்தான் உணர்வோம். அவனாகவோ, அவளாகவோ, எதுவாகவோ இருந்தாலும் சரி! ஒன்றை ஒதுக்கி, ஒன்றை மறுத்து, ஒன்றை வெறுத்து இதை உணர முடியாது. மனத்தில் இடம்பெறும் இந்தத் தன்மைகள் இதயத்தில் கிடையாது. இங்கே இதயமென்றால் தூலக் கருவியில்லை. நெஞ்சின் நட்ட நடுவில் இருக்கும் குகை.

குருவே! பரமன் மகனே!
குகையில் வளரும் கனலே!

என்று பாரதி, சில பழைய நூல்களில் காணப்படுகின்ற இந்த யோக ரகசியத்தைச் செந்தமிழ் வீதியில் சூறைத் தேங்காய் உடைக்கிறான்! அந்த குகையில், ஊசிமுனை அளவு ஒளித்துகள் சுடர்கிறது. உள்ளே திரும்பி உற்று நோக்கினால், ஓர் அரிசியின் முனையளவு ஜ்வாலையாக அது தென்படுகிறது. காட்சி போலவும் இருக்கிறது, ஏனெனில் அந்த ஒளித்துகளைக் கண்ணால் காண்பது போலத்தான் அந்த அனுபவம் இருக்கிறது. கண்கள் மூடியிருக்கும்போது எப்படி இது சாத்தியம்? பொதுவாக, நாம் கண்களால் காண்கிறோம், ஆனால் கண்களாலா உணர்கிறோம்?! இல்லையே! சித்தம், பிரக்ஞை, அஸ்மிதா எனப்படும் consciousness, அதாவது தன்னுணர்வு மூலமே காண்பதை உணர்கிறோம். உள்ளே திரும்பினால் இந்த அரிசிமுனை ஒளியை நம்முடைய தன்னுணர்வே கண்களாகக் காட்டுகிறது! பிறகு அதே தன்னுணர்வு, இந்த ஒளித்துளியை ஊடுருவி, உள்ளே அண்டபகிரண்டங்களையும் கண்டு, பிறகு அவையும் காணாமல், `தான்' தொலைந்து போகிறது. எல்லாம் கடந்த, தொலைந்த அந்தக் கணத்தில் ஒன்றையும் குறிப்பாக உணராத, ஆனால் ஒடுக்கத்தின் ஒடுக்கமாகவும், விரிவின் விரிவாகவும் ஒரு மகா உயிர்ப்பு மிஞ்சுகிறது. அதுதான் நாம். அதுதான் ஆண்டவன்.

உள்ளே திரும்பு உற்றுக் கவனி
உள்ள மடுவிலோர் ஊசித் துளியொளி
கள்ளுச் சொட்டாய்க் கவரும். புரட்டும்
காற்றை விலக்கிக் கவனம் பிசகாமல்
மெல்ல இறங்கி மிஞ்சுவது யாரென
மீதம் ஏதென மீளாமல் பார்!
கொள்ளை போனபின் கொழிப்பதே செல்வம்!
கோயிலும் கடவுளும் தொழுவதும் நீயே!

(தரிசனம் நிகழும்)

- tavenkateswaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in